50 நாட்களை கடந்து தியேட்டர்களில் 'ஃபயர்' படம்
'தங்க மீன்கள்' மூலம் ராம், 'குற்றம் கடிதல்' வாயிலாக பிரம்மா, 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' ஊடாக பாலாஜி தரணிதரன், 'ரம்மி' வாய்ப்பால் பாலகிருஷ்ணன் என பல்வேறு திறமைமிக்க இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் மீது வெளிச்சம் பாய்ச்சியவரும், ஜெ எஸ் கே ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் மூலம் தேசிய விருது பெற்ற வெற்றிப் படங்களை தயாரித்தவருமான ஜெ எஸ் கே சதீஷ் குமார், 'தரமணி' திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகி, 'கபடதாரி', 'ஃபிரெண்ட்ஷிப்', 'அநீதி', 'வாழை' என நடிகராகவும் தொடர்ந்து தன்னை திறம்பட வெளிப்படுத்தி பாராட்டுகளை அள்ளி வருகிறார்.
ஜெ எஸ் கே என்று திரையுலகினரால் அன்போடு அழைக்கப்படும் இவர், முதன்முறையாக இயக்குநர் அவதாரம் எடுத்த படம் தான் 'ஃபயர்'. பிப்ரவரி 14 அன்று திரையரங்குகளில் வெளியான் 'ஃபயர்', 50 நாட்களைக் கடந்தும் வெற்றி நடை போட்டு வருகிறது. பெரிய நட்சத்திரங்கள், இயக்குநர்களின் படங்களின் ஆயுட்காலமே ஒன்று அல்லது அதிகபட்சம் இரண்டு வாரங்கள் என ஆகிவிட்ட இந்த காலகட்டத்தில் 'ஃபயர்' படத்தின் மாபெரும் வெற்றி ஜெ எஸ் கே மற்றும் படக்குழுவினரை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் திரையுலகத்தையே உற்சாகப்படுத்தி உள்ளது.

இந்த ஆண்டு சுமார் 80 படங்கள் இதுவரை வெளியாகியுள்ள நிலையில் 'டிராகன்', 'குடும்பஸ்தன்' உள்ளிட்ட வெகு சில திரைப்படங்களே லாபத்தை ஈட்டியுள்ளன. இந்நிலையில் பெரும்பாலும் புதுமுகங்கள் மற்றும் அறிமுக இயக்குநர் கூட்டணியில் உருவான 'ஃபயர்' இத்தகைய வெற்றியை ஈட்டியுள்ளது கதையையும் திறமைகளையும் மட்டுமே நம்பி படமெடுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் பெரும் நம்பிக்கையை ஊட்டி உள்ளது. இப்படத்தை ஜெ எஸ் கே ஃபிலிம் கார்ப்பரேஷன் பேனரில் தயாரித்திருப்பதோடு, பிரதான பாத்திரமொன்றில் ஜெ எஸ் கே நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
'ஃபயர்' படத்தின் வெற்றியை தொடர்ந்து படங்களை இயக்குவதற்கும், நடிப்பதற்கும் ஜெ எஸ் கே-க்கு அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இது பற்றி கூறிய அவர், "நல்ல உள்ளடக்கத்தை தமிழ் ரசிகர்கள் எப்போதும் ஏற்பார்கள் என்பதற்கு 'ஃபயர்' வெற்றியே சாட்சி. இதற்காக தமிழக மக்களுக்கும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும், படக்குழுவினருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தரமான படங்களை தொடர்ந்து தயாரித்து இயக்குவதோடு மட்டுமில்லாமல், சவாலான வேடங்களில் தொடர்ந்து நடிப்பேன்," என்றார்.
 
                                        
                                         
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    