Funky திரை விமர்சனம்
Funky
அனுதீப் இயக்கத்தில் விஷ்வாக் சென், கயாடு லோஹர் நடிப்பில் வெளியாகியுள்ள ஃபன்கி தெலுங்கு காமெடி திரைப்படம் நம்மை சிரிக்க வைத்ததா என்று பார்ப்போமா.

கதைக்களம்
திரைப்பட இயக்குநரான கோமல் (விஷ்வாக் சென்) ஃபன்கி என்ற படத்தை எடுக்க, பட்ஜெட் போதாமல் மேற்கொண்டு தொடர முடியாமல் நிறுத்தப்படுகிறது. நான்கு கோடி ரூபாய் இருந்தால்தான் படத்தை முடிக்க முடியும் என்று தயாரிப்பாளர் நரேஷிடம் கோமல் கூறுகிறார்.
ஆனால் அவரோ ஏற்கனவே சொன்ன பட்ஜெட்டிற்கு மேல் செலவழித்துவிட்டோம், இனிமேல் பணம் கொடுக்க முடியாது என்கிறார். மேலும் தயாரிப்பாளர் நரேஷிற்கு உடல்நலம் பாதிக்கப்பட அவரது மகள் சித்ரா (கயாடு லோஹர்) படப்பிடிப்பு தளத்திற்கு சென்று கோமாலிடம் வாக்குவாதம் செய்கிறார்.

அத்துடன் படத்தை நிறுத்துவதாகவும் சொல்லிவிட்டு வருகிறார். கோமல் முதலில் அவரிடம் கெத்தாக பேசிவிட்டு பின் படத்தை முடிக்கவில்லை என்றால் தனது நிலை அவ்வளவுதான் என்று உணர்கிறார்.
படத்தை முடிக்க சித்ராவின் பின்னாலேயே சுற்றும் கோமல், என்னை காதலியுங்கள் அல்லது படத்தை முடிக்க பணம் கொடுங்கள் என்கிறார். சித்ரா 1 கோடி மட்டுமே கொடுக்க முடியும்; அதற்குள் படத்தை முடித்து கொடுக்க வேண்டும் என கூறுகிறார். அதன் பின்னர் 1 கோடியை வைத்து கோமல் எப்படி படத்தை முடித்தார்? அவர் உண்மையிலேயே சித்ராவை காதலித்தாரா என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்
ஜாதி ரத்னலு படம் மூலம் தனக்கென ஒரு பாணியை அமைத்துக்கொண்ட இயக்குநர் அனுதீப்பின் படம் இது. தனது பாணியிலான காமெடிகளை படம் முழுக்க வைத்ததுடன் தானும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அனுதீப்.
அவரை அமைத்த காமெடி ட்ராக்குகளில் பெரும்பாலும் ஒர்க்அவுட் ஆகி சிரிக்க வைக்கின்றன. சில இடங்களில் "இது ஜோக்" என்று படக்குழு சொல்வது போல் அமைந்துள்ளன. குறிப்பாக, உங்க அம்மாவுக்கு ஆபரேஷன் பண்ணனும்பா என்று டாக்டர் சொல்ல, அதற்கு மகன் 'எனக்கு ஆபரேஷன் பண்ண தெரியாது டாக்டர்' என்று கூறுவார்.

இதுபோன்ற காமெடிகள் சிலருக்கு ஒர்க் ஆகும், சிலருக்கு ஆகாது; அதுபோல்தான் இந்த படமும் அமைந்துள்ளது. சொந்த பந்தங்களுடன் உறவாடுவதில் ஹீரோவுக்கு இருக்கும் தயக்கத்தை இன்னும் அழுத்தமாக காட்சிப்படுத்தியிருந்தால், கிளைமேக்ஸ் காட்சியில் இன்னும் நன்றாக எமோஷனல் ஒர்க்அவுட் ஆகியிருக்கும். ஆனால் சிரிக்க வைத்தால் மட்டும் போதும் என்று இயக்குநர் நினைத்துவிட்டார் போலும்.
ஆனால் படம் முழுக்க சிரிக்க வைத்ததில் வெற்றி பெற்றுவிட்டார். விஷ்வாக் சென் தன்னால் முடிந்தவரை காமெடி செய்ய, துணை கதாபாத்திரங்கள் அவருக்கு பெரிதும் உதவியிருக்கின்றன.
காமெடி வில்லன் கதாபத்திரத்தில் சம்பத் அட்டகாசம் செய்துள்ளார். கயாடு லோஹார் படம் முழுக்க அழகு பதுமையாக வந்து சில இடங்களில் சிரிக்கவும் வைக்கிறார். யம யம்மா பாடலுக்கு விஷ்வாக் சென், கயாடு லோஹரின் ஆட்டம் அருமை.
அதேபோல் பீம்ஸ் இசையில் மற்ற இரண்டு பாடல்களும் கேட்க இனிமை. அவற்றை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுரேஷ் சாரங்கம்.

க்ளாப்ஸ்
நடிகர்களின் பங்களிப்பு ஒன்லைன், டைமிங் காமெடிகள் இசை
பல்ப்ஸ்
சில காமெடி வசனங்கள் ஒர்க்அவுட் ஆகாதது
மொத்தத்தில் இந்த ஃபன்கி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செல்வோரை சிரிக்க வைக்கும். எல்லோரும் பார்க்கக்கூடிய ஜாலியான பொழுதுபோக்கு படம்.