Furiosa: A Mad Max Saga - திரை விமர்சனம்
ஜார்ஜ் மில்லர் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஃபியூரியோசா எ மேட் மேக்ஸ் சாகா ஹாலிவுட் படத்தின் விமர்சனம் குறித்து இங்கே காண்போம்.
கதைக்களம்
எதிர்காலத்தில் பாலைவனமாக மாறியிருக்கும் பூமியில் தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் மனிதர்கள் அடித்துக்கொள்ளும் கதை தான் மேட் மேக்ஸ் சீரிஸ்.
2015யில் வெளியான Mad Max Fury Road படத்தின் முன்கதை படமாக வந்திருக்கிறது இந்த Furiosa: A Mad Max Saga. சிறுவயதில் வார்லார்ட் கூட்டத்தினால் கடத்தப்படும் ஃபியூரியோசா காப்பாற்றும் முயற்சியில் அவரது தாய் கொல்லப்படுகிறார்.
பின்னர் நீ எங்கிருந்து வருகிறாய், அந்த வளமான இடம் எங்கே இருக்கிறது என்று வார்லார்ட் ஃபியூரியோசாவை கேட்கிறார். ஆனால் அவர் பதிலளிக்காததால் தங்களுடனே வைத்துக் கொள்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் சிட்டாடெல் கூட்டத்துடன் ஏற்படும் உடன்படிக்கைபடி ஃபியூரியோசா அவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறார். அதனைத் தொடர்ந்து தனது தாயின் மரணத்திற்கு வார்லார்ட் தலைவன் டெமெண்ட்சை எப்படி ஃபியூரியோசா பழிவாங்கினார் என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
ஃபியூரியோசா கதாபாத்திரத்தில் அன்யா டெய்லர் ஜாயும், டெமெண்ட்ஸாக கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்தும் படம் முழுக்க அதகளம் செய்திருக்கிறார்கள். ஆக்ஷன் காட்சிகள் ஒவ்வொன்று சிலிர்க்க வைக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
79 வயது இயக்குநர் இப்படத்தை இயக்கியுள்ளார் (ஜார்ஜ் மில்லர்) என்பதை நம்ப முடியவில்லை. அந்த அளவிற்கு மிரட்டியிருக்கிறார். ஜெட் வேகத்தில் நகரும் திரைக்கதை நம்மை சீட் எட்ஜில் அமர வைக்கிறது.
டெமெண்ட்ஸ் (கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்) செய்யும் அராஜகங்களை சமாளிக்க முடியாமல் இம்மோர்டன் ஜோயின் கூட்டம் திணறுவது மிரட்டல். தனது ஆட்களை கொன்று டெமெண்ட்ஸ் எதிரியை நோக்கி செல்வது வில்லத்தனத்தின் உச்சம்.
ஃபியூரியோசாவாக வரும் அன்யா டெய்லர் இறுக்கமான முகத்துடன் பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யும் ஒவ்வொரு விஷயமும் அபாரம். அவருக்கு உதவி செய்து டெமெண்ட்ஸிடம் மாட்டிக்கொள்கிறார் டாம் புர்கி.
ஆனால் அந்த இடத்தில் ஃபியூரியோசா தப்பிக்கும் விதம் செம ட்விஸ்ட். கொடூரமான காட்சிகளுக்காக கண்டிப்பாக இது சிறுவர்கள், குழந்தைகளுக்கான படம் அல்ல. 18+ வயதினர் மட்டுமே பார்க்க வேண்டும்.
க்ளாப்ஸ்
பரபரப்பான திரைக்கதை
நேர்த்தியான ஒளிப்பதிவு
மிரட்டலான ஆக்ஷன் காட்சிகள்
நடிகர்களின் நடிப்பு
பல்ப்ஸ்
அதீத வன்முறை காட்சிகள் நெளிய வைப்பது