கேம் சேஞ்சர் பட விமர்சனம்
கேம் சேஞ்சர்
தமிழ் சினிமாவின் தரத்தை மற்றும் வர்த்தகத்தை பல மடங்கு உயர்த்தி சென்ற ஷங்கர் சமீப காலமாக சின்ன சறுக்கலில் இருக்க, அந்த சறுக்கலிலிருந்து கேம் சேஞ்சரில் மீண்டாரா, பார்ப்போம்.
கதைக்களம்
ராம் சரண் ஒரு நேர்மையான IAS அதிகாரியாக தன் மாவட்டத்தில் நடக்கும் அத்தனை அநியாயங்களையும் தட்டி கேட்கின்றார். அதே நேரத்தில் முதலமைச்சர் தன் மாநிலத்தில் எந்த ஒரு குற்றமும் நடக்கக்கூடாது என்று ஒரு அதிரடி திட்டத்தை கொண்டு வருகிறார்.
இதனால் CM மகனான எஸ் ஜே சூர்யாவின் மணல் கொள்ளை பாதிக்கப்படுகிறது, முதலமைச்சருக்கு தெரியாமல் இரவில் மணல் எடுக்கலாம் என்று பார்த்தால், ராம் சரண் அதற்கு தடையாக இருக்கிறார்.
இதனால் ராம் சரணுக்கும், எஸ் ஜே சூர்யாவுக்கும் மோதல் ஏற்பட, ஒரு கட்டத்தில் முதலமைச்சரை பதவிக்காக எஸ் ஜே சூர்யா கொல்லவும் செய்கிறார், அதோடு ராம் சரணை கொல்லவும் திட்டமிடுகிறார்.
ஆனால், இறப்பதற்கு முன்பு முதலமைச்சர் ஒரு வீடியோவில் அடுத்த CM யார் என்பதை வெளியிட, அதை பார்த்த ஒட்டு மொத்த மாநிலம் மற்றும் எஸ் ஜே சூர்யாவும் ஷாக் ஆக, அதன் பின் ராம் சரண், எஸ் ஜே சூர்யா மோதல் மேலும் பல மடங்கு ஆக, பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
அரசியல் கதை எல்லாம் அல்வா சாப்பிடுவது போல் ஷங்கருக்கு, ஆனால், அந்த அரசியல் களத்தில் தான் இந்தியன் 2-வில் சறுக்க, கேம் சேஞ்சர் மூலம் மீண்டும் தான் அரசியல் கிங் என நிரூபிக்க போராடியுள்ளார்.
ஆம், போராடியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும., ராம் சரண் IAS ஆபிசராக மிடுக் ஆன தோற்றத்தில் கலக்கியுள்ளார், மொத்த படத்தையும் தாங்கி செல்வது ராம் சரண் தான், ப்ளாஷ்பேக்கில் வரும் அப்பா ராம் சரண் கேரக்டரில் திக்கு வாயில் அவர் படும் கஷ்டங்களை நம் கண் முன் கொண்டு வருகிறார்.
அதோடு இரண்டாம் பாதியில் மகன் ராம்சரண் தேர்தல் ஆணைய அதிகாரியாக வந்து செய்யும் அதிரடி ஆக்ஷன் என ராம் சரண் கெரியரில் முக்கியமான கதாபாத்திரமாக அமைந்துள்ளது கேம் சேஞ்சர்.
கியாரா ஷங்கர் படம் என்றாலே ஹீரோயினுக்கு கொஞ்சமாது முக்கியத்துவம் இருக்கும், இதில் அதுக்கூட இல்லை, வெறும் அழகு பதுமையாக வந்து செல்கிறார், அதோடு பாடல்களுக்கு தலையை காட்டுகிறார்.
வில்லனாக எஸ் ஜே சூர்யா படம் முழுவதும் பழைய ஷங்கர் வில்லன் ரகுவரனை நியாபகப்படுத்துகிறார், அதோடு கிளைமேக்ஸில் பாம் வைக்கிற காட்சியெல்லாம் அப்படியே ரகுவரனாகவே மாறிவிடுகிறார். ஆனால், எஸ் ஜே சூர்யா கண்டிப்பாக தன் உடல் மொழியை இந்த படத்திலிருந்து மாற்றியே ஆகவேண்டும், இதுவே தொடர்ந்தால் ரசிகர்களுக்கு சலிப்பு தட்டிவிடும்.
படத்தின் முதல் பாதி நல்ல விறுவிறுப்பாக சென்றாலும், ராம் சரண் காலேஷ் போஷன் கியாராவுடன் காதல் படத்தின் வேகத்தடையாக வருகிறது.
இரண்டாம் பாதியில் ப்ளாஸ்பேக் டிபிக்கல் ஷங்கர் ஸ்டைல், ஆனால் இந்த முறை மசாலா மிக அதிகம், அதுவும் கொஞ்சம் ராம்சரண் நடித்த ரங்கஸ்தலம் படம் போலவும் உள்ளது ப்ளாஸ்பேக் காட்சிகள்.
தேர்தல் ஆணையராக வரும் ராம் சரண் போஷன் மீண்டும் படம் செம வேகமெடுக்கிறது, அதிலும் கிளைமேக்ஸில் தேர்தல் கவுண்டிங்-கை எஸ் ஜே சூர்யா நிறுத்த வரும் காட்சியெல்லாம் இந்த டிஜிட்டல் உலகில் கூட இப்படி ஒரு காட்சி வைத்தது அதுவும் ஷங்கர் படமா இல்லை பாலையா படமா என்று தான் கேட்க தோன்றுகிறது.
படத்தின் ஒளிப்பதிவு வழக்கம் போல் பல பிரமாண்ட கூட்டம், செட் என அனைத்தையும் அத்தனை அழகாக காட்டியுள்ளனர்.
தமனின் இசையில் தொப், ஜருகண்டி பாடல் அட்டகாசம், இரண்டும் விண்டேஜ் ஷங்கர் டச். பின்னணி இசை கொஞ்சம் இரைச்சலை குறைச்சு இருக்கலாம்.
க்ளாப்ஸ்
படத்தின் முதல் பாதி ராம் சரண் மொத்த படத்தையும் தாங்கி செல்கிறார். தேர்தல் ஆணையர் முக்கியத்துவத்தை மக்களுக்கு சொன்ன விதம்.
பல்ப்ஸ்
90ஸ் டைம் திரைக்கதை. லாஜிக் எல்லை மீறல்கள்.
மொத்தத்தில் கேம் சேஞ்சர் ஷங்கர் எடுத்துள்ள ஆந்திரா மீல்ஸ், ஆனால் அதிலும் காரசாரம் குறைவே.
2.5/5
You May Like This Video