காட்ஸில்லா மைனஸ் ஜீரோ (ஜப்பனீஸ்): திரை விமர்சனம்
ஜப்பானிய மொழியில் காட்ஸில்லா மைனஸ் ஒன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளியாகியுள்ள காட்ஸில்லா மைனஸ் ஜீரோ எப்படி இருக்குன்னு பார்ப்போம் வாங்க.

கதைக்களம்
1947-யில் காட்ஸில்லா ஏற்படுத்திய பாதிப்புகள் மற்றும் போரின் விளைவுகளில் இருந்து ஜப்பான் மீண்டு வருகிறது. இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், காட்ஸில்லாவின் ஜின்சா தாக்குதலில் இருந்து தப்பிய நோரிகா ஓஷியை திருமணம் செய்துள்ளார் முன்னாள் தற்கொலைத் தாக்குதல் விமானி கோய்ச்சி ஷிகிஷிமா.
இந்த தம்பதிக்கு தத்தெடுக்கப்பட்ட மகள் அகிகோ உள்ள சூழலில், காட்ஸில்லாவின் செல்களுக்கு ஆட்பட்டதன் விளைவாக, நோரிகாவின் உடல் உருமாற்றத்தின் தொடக்கத்தில் உள்ளது. கோய்ச்சி இதனை யாருக்கும் தெரியாதபடி பார்த்துக்கொள்ள, ஆதரவற்றோர் இல்லத்தை நடத்திவரும் சுமிகோ தம்பதிக்கு ஆதரவாக உள்ளார்.
இந்த நிலையில், பேரிடர் மீட்புப் பணியகத்தின் இயக்குநரான கென்ஜி நோடா குழு ஒன்றை அமைக்கிறார். சக்தி வாய்ந்த கிடோரா டிராகன் மட்சுமோட்டோ நகரை மோசமாக தாக்குகிறது.
அதனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் ஜப்பான் விழிபிதுங்கி நிற்கிறது. அப்போதுதான் ஹிரோஷிமா குண்டுவீச்சில் தப்பிய கன்சி முரகாமி மற்றும் அவரது உதவியாளர் அகிரா ஹகிவாரா உள்ளிட்ட விஞ்ஞானிகள், அந்தத் தாக்குதலை ஆவணப்படுத்தி, நோடாவிடம் தங்கள் கண்டுபிடிப்புகளை தெரிவிக்கின்றனர்.
விண்கல்லில் இருந்து கூழ்மப் பொருளாக வந்த உயிரினம், உள்ளூர் வனவிலங்குகளை உட்கொண்டு தனது தற்போதைய வடிவத்தை பெற்றுள்ளதை அனைவரும் காணொளியில் பார்க்கின்றனர். இதனை எப்படி சமாளிப்பது என்று எல்லோரும் குழப்பத்தில் இருக்க, இறந்துவிட்டதாக கருதிய காட்ஸில்லா உயிருடன் இருப்பது தெரிந்து மேலும் அதிர்ச்சியடைகின்றனர்.
அதன் பின்னர் நோடா தலைமையிலான குழு கோய்ச்சி, நோரிகா தம்பதியின் உதவியுடன் எப்படி இரண்டு மான்ஸ்டர்களிடம் இருந்து ஜப்பானை காப்பாற்றியது என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
2023-யில் வெளியான காட்ஸில்லா மைனஸ் ஒன் படத்தை இயக்கிய தகாஷி யமஸாகி இப்படத்தையும் இயக்கியுள்ளார். பேரழிவில் இருந்து மீண்டு வந்த ஜப்பான் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப சிரமமப்படும் காட்சிகளை நேர்த்தியாக காட்டியுள்ளார்.
குறிப்பாக, அணுகுண்டு தாக்குதலால் ஹிரோஷிமா சந்தித்த கோரத்தை காட்டிய விதம் மனதை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது. போரினால் நிம்மதி இழந்து வாழும் மக்களுக்கு, கிடோரா எனும் மான்ஸ்டரால் பேராபத்து வரப்போகிறது என்பதை படமெடுத்து காட்டும் காட்சி பார்வையாளர்களை பயமுறுத்தும்.
இவ்வாறாக, கிடோரா மற்றும் காட்ஸில்லா வரும் வரை பார்வையாளர்களை எப்படி சோர்வடையாமல் பார்த்துக்கொள்வது என்பதை, இதுபோன்ற காட்சிகள் மூலம் இயக்குநர் சிறப்பாக கையாண்டுள்ளார். மற்றொருபுறம் கணவன், மனைவி மற்றும் தத்தெடுக்கப்பட்ட மகள் ஆகியோரது வாழ்க்கையையும் அழகாக காட்டியுள்ளார்.
குறிப்பாக, சிறுமி சே நகாடமியை ஆதரவற்றோர் இல்லத்தில் விட்டுவிட்டு, நாங்கள் கண்டிப்பாக திரும்பி வருவோம் என்று கமிகி, மினாமி கூறும்போது அவள் Have trip என்று சொல்வது நெகிழ்ச்சி. இதுபோன்ற சென்டிமென்ட் காட்சிகள் ஒருபுறம் ஒர்க்அவுட் ஆன போதிலும், கிடோரா நகரங்களை நாசம் செய்துகொண்டிருக்கும்போது எப்போதான்பா அவன் வருவான் என்று நாம் கேட்கும் அளவிற்கு தாமதமாகவே காட்ஸில்லா வருகிறது.
என்றாலும், காட்ஸில்லா மற்றும் கிடோரா மோதும் காட்சிகள் மிரள வைக்கின்றன. அந்த சண்டையில், "ஜெயிச்சுரு மாறா" என்று நாம் கேட்கும் அளவிற்கு காட்ஸில்லா மீது பரிதாபம் வருகிறது. கதையின் நாயகனான ரியூனோஸுக்கி கமிகி எமோஷனல் காட்சிகள் யதார்த்தமாக நடித்துள்ளார்.
அவரது மனைவியாக நடித்துள்ள மினாமி ஹமாபே, தன் உயிரை தியாகம் செய்ய முன்வரும் காட்சியில் நெகிழ வைக்கிறார். வானிலை ஆராய்ச்சியாளராக வரும் மஸாமி கிளைமேக்சில் கலங்க வைக்க, 81 வயது நடிகரான மின் தனகா வில்லத்தனமாக சிரிக்கும் காட்சியில் பயமுறுத்துகிறார். இவர்களுடன் மக்களைக் காப்பாற்ற போராடும் ஹிடேட்டகா யோஷியோகா பல இடங்களில் நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார்.
ஹிரோஷிமா நகர அழித்த உண்மை சம்பவத்தையும், மான்ஸ்டர்களின் கோரதாண்டவத்தை நேர்த்தியாக கலந்து திரைக்கதை அமைத்து அசத்தியுள்ளார் இயக்குநர் தகாஷி யமஸாகி. IMAX தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட முதல் ஜப்பானிய திரைப்படம் என்ற பெருமையுடன் இந்த காட்ஸில்லா மைனஸ் ஜீரோ வெளியாகியுள்ளது.
அதற்கு ஏற்ப டெக்னிக்கலாக மிரட்டியுள்ளது படக்குழு. காட்சிகள், ஒலிக்கலவை, பின்னணி இசை என அனைத்தும் ஹாலிவுட்டிற்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ளன.
க்ளாப்ஸ்
யதார்த்தமான காட்சியமைப்புகள்
பின்னணி இசை
ஒலிக்கலவை
கிராஃபிக்ஸ் காட்சிகள்
நெகிழவைக்கும் சென்டிமென்ட்
பல்ப்ஸ்
குறைசொல்லுபடி எதுவுமில்லை
மொத்தத்தில் இந்த காட்ஸில்லா மைனஸ் ஜீரோ ஒரு கொண்டாட்டம். கண்டிப்பாக குழந்தைகளுடன் இப்படத்தை ரசிக்கலாம்.
