Greenland 2: Migration திரை விமர்சனம்
Green Land 2 Migration
ஜெரார்ட் பட்லர் நடிப்பில், ரிக் ரோமன் வாக் இயக்கத்தில் வெளியாகியுள்ள கிரீன்லேண்ட் 2: மைகிரேஷன் திரைப்படத்தின் விமர்சனம் குறித்து இங்கே காண்போம்.
கதைக்களம்
கிளார்க் என்ற விண்கல்லின் தாக்குதலால் பூமியின் பாதி அழிந்து ஐந்து ஆண்டுகள் ஆகியுள்ளது. ஆனாலும் கடல் சீற்றம், எரிமலை வெடிப்பு, ரேடியேஷனினால் காற்று மாசு என பல பகுதிகள் வாழ தகுதியற்ற நிலையில் உள்ளன.
இதன் காரணமாக கிரீன்லாந்தில் உள்ள நிலத்தடி பதுங்குக்குழியில் ஜான் கேரிட்டி (ஜெரார்ட் பட்லர்) தனது குடும்பத்துடன் தஞ்சமடைந்துள்ளார். எனினும் நிலநடுக்கங்கள் காரணமாக பதுங்குக்குழியும் பாதிக்கப்பட அங்கிருந்து அனைவரும் தப்பித்து ஓடுகின்றனர்.
அவர்களில் ஜான் கேரிட்டியின் குடும்பம் மற்றும் சிலர் ஒரு லைஃப் படகில் தப்பித்து இங்கிலாந்தின் லிவர்பூலை அடைகின்றனர். அங்கும் நிலைமை மோசமாக இருக்க, இராணுவத்தை மீறி கிரேட்டர் என்று கூறப்படும் பாதுகாப்பான இடத்திற்கு கேரிட்டி எப்படி தனது குடும்பத்தை கொண்டு சேர்த்தார் என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்
2020ஆம் ஆண்டில் வெளியான கிரீன்லேண்ட் படத்தின் தொடர்ச்சியாக இப்படம் வெளியாகியுள்ளது. அப்படத்தை இயக்கிய ரிக் ரோமன் வாக்தான் இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார்.
படத்தின் ஆரம்பக் காட்சியில் இருந்தே பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. ஜெரார்ட் பட்லர், மொரேனா மற்றும் அவர்களது மகனாக நடித்திருக்கும் ரோமன் கிரிஃபின் டேவிஸ் ஆகிய மூவரும் ஒவ்வொரு பிரச்சனை எதிர்கொள்ளும் காட்சிகள் மிரள வைக்கின்றன. குறிப்பாக, மலையை கடக்கும் காட்சி நம்மை சீட்டின் நுனிக்கு நகரும் அளவிற்கு பரபரப்பை ஏற்படுத்துகிறது.

காட்சிக்கு காட்சி பிரமிப்பையும், பதற்றத்தியும் இயக்குநர் ஏற்படுத்தியுள்ளார். டேவிட் பக்லேயின் பின்னணி இசையும் அதற்கு கைகொடுத்துள்ளது. மிட்சேல் லாபோர்டுனே மற்றும் கிரிஸ் ஸ்பார்லிங் ஆகியோரது எழுத்து பல இடங்களில் சிறப்பாக உள்ளன.
என் மகளையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள் என்று ஒரு கதாபாத்திரம் ஜெரார்ட்டிடம் கூற, அவர் தயங்கும் சமயத்தில் மனைவி மோரேனா கண்டிப்பாக என்று கூறும் இடம் மனதை தொடுகிறது.
அதேபோல் ஒருவரையொருவர் அடித்துக் கொள்ளும்போதிலும் மனிதாபிமானத்துடன் சிலர் நடந்துகொள்வது என நேர்த்தியாக காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதனால் த்ரில்லர் மோடிலும், எமோஷனலாகவும் படம் பயணிக்கிறது. எனினும் 2012 படத்தை நியாகப்படுத்துவது, சில குழப்பமான விஷயங்கள் என ஒரு சில குறைகளும் உள்ளன. டெக்னிக்கலாக படம் மிகவும் வலுவாக உள்ளது.
1 மணிநேரம் 40 நிமிடங்கள் என்ற படத்தின் ரன்னிங் டைமும் ஒரு பிளஸ் பாயிண்ட். படத்தின் ஹீரோவான ஜெரார்ட் சிறப்பாக நடித்துள்ளதுடன் இணை தயாரிப்பாளராகவும் பங்களிப்பை கொடுத்துள்ளார்.
பிற நடிகர்களும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளன. முதல் பாகத்தையும் பார்த்துவிட்டு வந்தவர்கள் இப்படத்துடன் எமோஷனலாக கனெக்ட் ஆவார்கள். நேரடியாக இரண்டாம் பாகத்தை பார்ப்பவர்களும் ரசிக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
உலக அரசியலை உற்று நோக்குபவர்களுக்கு தற்போதைய, அமெரிக்காவின் கிரீன்லாந்து அரசியலுக்கு, இந்தப் படத்தின் கதை (இரண்டு பாகங்களையும் சேர்த்து) ஏதோ சொல்ல வருவதுபோல் தோன்றும் என்பது கூடுதல் தகவல்.
க்ளாப்ஸ்
நடிகர்களின் நடிப்பு பிரமிப்பான மேக்கிங் சவுண்ட் எஃப்பெக்ட்ஸ் திரைக்கதை
பல்ப்ஸ்
கதையோட்டத்தில் ஒரு சில குழப்பங்கள்
மொத்தத்தில் இந்த Greenland 2: Migration பெரிய திரையில் பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது. கண்டிப்பாக குடும்பத்துடன் காணலாம்.
ரேட்டிங்: 3/5
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri