Hai Jawani Toh Ishq Hona Hai திரை விமர்சனம்
Hai Jawani Toh Ishq Hona Hai
வருண் தவான், பூஜா ஹெக்டே, மிர்ணாள் தாக்கூர் நடிப்பில் வெளியாகியுள்ள Hai Jawani Toh Ishq Hona Hai இந்தி திரைப்படத்தின் விமர்சனம் குறித்து இங்கே கான்போம்.

கதைக்களம்
அஹுஜா (வருண் தவான்), பாணி (மிர்ணாள் தாக்கூர்) இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். அஹுஜாவிற்கு குழந்தை வேண்டும் என்று மனைவி பாணியிடம் கேட்க, அவரோ தனது கேரியர் பாதிக்கப்படும் எனக் கூறி தவிர்க்கிறார்.
இதனால் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்படவே, விவாகரத்து செய்து பிரியலாம் என்ற முடிவுக்கு பாணி வருகிறார். தம்பதியர் நீதிமன்றத்திற்கு செல்ல 6 மாதம் காலக்கெடு கொடுக்கிறார் நீதிபதி.

அடுத்த ஒரு மாதத்தில் ரிஷிகேஷ் செல்லும் அஹுஜா, அங்கு ஆற்றில் தத்தளிக்கும் ப்ரீத்தை (பூஜா ஹெக்டே) காப்பாற்றுகிறார். அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் லண்டனில் மீண்டும் சந்திக்க காதலிக்கத் தொடங்க, பாணி மீண்டும் அஹுஜாவிடம் வருகிறார். அவர் ஒரு அதிர்ச்சி விஷயத்தைக் கூற, ப்ரீத் குறித்து அவரிடம் கூறாமலேயே அஹுஜா குடும்பம் நடத்த முயற்சிக்கிறார்.
அதே சமயம் ப்ரீத்தின் அண்ணனுக்கு, தான் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று தெரிந்தால் கொல்லப்படுவோம் என்று பயந்து உண்மையை மறைக்கிறார். அதன் பின்னர் பாணி, ப்ரீத் இருவரில் யாருடன் அஹுஜா சேர்ந்தார்? இறுதியில் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்
வருண் தவான், பூஜா ஹெக்டே மற்றும் மிர்ணாள் தாக்கூர் காம்போ செய்த ப்ரோமோஷன் மூலம் Hai Jawani Toh Ishq Hona Hai படத்திற்கு எதிர்பார்ப்பு நிலவியது. வருண் தவானின் அப்பாவான டேவிட் தவான் இப்படத்தை இயக்கியுள்ளார்.
தமிழில் 1987யில் வெளியான ரெட்டைவால் குருவி திரைப்படத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தாலும், அதில் உள்ள எமோஷனல் பகுதியை இயக்குநர் சரியாக கையாளவில்லை என்பதே படத்தின் மிகப்பெரிய பிரச்சனை. காமெடி, டிராமாவான திரைக்கதையில் இரண்டுமே ஒர்க்அவுட் ஆகவில்லை. காட்சிகளும் எளிதில் யூகிக்கக்கூடிய வகையில் உள்ளதால் சலிப்புதான் ஏற்படுகிறது.

முதல் பாதியில் மிர்ணாள், பூஜா இருவரும் கிளாமருக்காகவே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இரண்டாவது பாதியில் கதைப்படி அவர்களை கிளாமராக காட்டமுடியாது என்பதால், அதற்காகவே புதிதாக ஒரு கேரக்டரை கொண்டு வருகிறார் இயக்குநர் (ஏன் சார் இப்படி?).
குழந்தை வேண்டும்; அப்போது தான் வாழ்க்கை முழுமைபெறும் என்று ஹீரோ கேட்பது மிகவும் எமோஷனலான விஷயம்.
ஆனால் அந்த எமோஷனலா காமெடியாக காட்ட முயற்சித்து எரிச்சலை ஏற்படுத்துகிறார் இயக்குநர். அதிலும் கிளைமேக்ஸ் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாதது. எங்குமே ஹீரோ தனது தவறை உணரவில்லை, அதற்காக வருத்தப்படவும் இல்லை.

நடிகர்களை பொறுத்தவரை வருண் தவான் வழக்கமாக செய்யும் விஷயத்தை தான் செய்திருக்கிறார். அதேபோல் தான் பூஜாவும், மிர்ணாளும். ஜிம்மி ஷெய்ர்கிலின் நடிப்பு ரொம்ப சுமார்.
கிளாமருக்கு மௌனி ராய், எரிச்சலூட்டும் காமெடிக்கு சன்கி பாண்டே என இருந்தாலும், மணிஷ் பால் மற்றும் ராகேஷ் பேடி ஒன்றிரண்டு இடங்களில் சிரிக்க வைக்கிறார்கள். டெக்னீக்கலாக படம் ரிச்சாக உள்ளது. பாடல்கள் ஓகே ரகம். அயனங்கா போஸின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சி.
க்ளாப்ஸ்
டெக்னீக்கல் ஒர்க் இசை ஒளிப்பதிவு
பல்ப்ஸ்
பொறுமையை சோதிக்கும் திரைக்கதை எரிச்சலூட்டும் காட்சிகள் மோசமான கிளைமேக்ஸ்
மொத்தத்தில் இந்த Hai Jawani Toh Ishq Hona Hai பார்வையாளர்களுக்கு சோதனை.