Haq திரை விமர்சனம்
Haq திரை விமர்சனம்
இம்ரான் ஹாஸ்மி, யாமி கௌதம் நடிப்பில் வெளியாகியுள்ளன Haq இந்தி திரைப்படத்தின் விமர்சனத்தை பார்ப்போம் வாங்க.

கதைக்களம்
ஷாஸியா பானோ (யாமி கௌதம்) என்ற பெண்ணை வழக்கறிஞரான அப்பாஸ் கான் (Emraan Hashmi) திருமணம் செய்து வாழ்க்கையைத் தொடங்குகிறார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் பிறக்க, ஷாஸியா மூன்றாவது முறையாக கர்ப்பம் தரிக்கிறார்.
அப்போது பாகிஸ்தானுக்கு ஒரு வேலையாக செல்வதாக கூறி செல்கிறார் அப்பாஸ். ஆனால் சில நாட்கள் தங்கியிருந்தும் ஷாஸியாவை போனில் அழைத்து பேசவில்லை.
ஒருவழியாக அவர் ஊருக்கு திரும்பியதும் வரவேற்க சென்ற ஷாஸியா, தனது கணவர் பெண்ணொருவரை இரண்டாவது திருமணம் செய்து அழைத்து வந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார்.
அதன் பின்னர் மூவரும் ஒரே வீட்டில் வசிக்க, ஒருநாள் இம்ரான் ஹாஸ்மியிடம் கோபித்துக் கொண்டு ஷாஸியா தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிடுகிறார். அவர்களின் செலவிற்காக அப்பாஸ் மாதா மாதம் பணம் அனுப்பி வைக்கிறார்.
ஒரு கட்டத்தில் திடீரென பணம் வருவது நிற்கிறது. அதனைத் தொடர்ந்து பிள்ளைகளை வளர்க்க பணம் அனுப்புமாறு கேட்க போகும் ஷாஸியாவுக்கு அப்பாஸ் அதிர்ச்சி கொடுக்கிறார். அடுத்து ஷாஸியா தனக்கான உரிமையை கூறி கணவரிடம் இருந்து நியாயமாக கிடைக்க வேண்டியவற்றை நீதிமன்றம் மூலம் எப்படி போராடி பெற்றார் என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்
உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தி பேமிலி மேன் வெப் சீரிஸை இயக்கிய சுபர்ன் வர்மா இப்படத்தை உருவாக்கியுள்ளார். சென்சிட்டிவான கதையை அருமையாக கையாண்டது மட்டுமில்லாமல், ரசிக்க வைக்கும் வகையிலும் திரைக்கதை அமைத்துள்ளார்.
சர்ச்சையான சீரியல் கில்லர் படங்களில் நடித்து புகழ்பெற்ற இம்ரான் ஹாஸ்மி, அப்பாஸ் கான் கதாபாத்திரத்தில் யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பல காட்சிகளில் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் மிகைப்படுத்தாத நடிப்பை தந்துள்ளார்.

குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சியில் அவர் வாதாடுவது மிரட்டல் நடிப்பு. ஆனால் அவரை மிஞ்சி ஸ்கோர் செய்வது யாமி கௌதம்தான். ஷாஸியா பானோ என்ற பெண்ணாகவே அவர் வாழ்ந்திருக்கிறார் என்று கூறலாம்.
அந்த அளவிற்கு யதார்த்த நடிப்பில் அட்டகாசம் செய்துள்ளார் யாமி. கர்ப்பிணியாக இருக்கும்போது நடக்கும் விதம், ஏமாற்றத்தின்போது முகபாவனை காட்டுவது என பல காட்சிகளில் சிறந்த நடிகை நான் என்று சொல்லாமல் சொல்கிறார் அவர். அவரது கதாபாத்திரம் நம்மை படத்துடன் ஒன்ற வைக்கிறது.

அதனாலேயே அவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் பார்வையாளர்களாகிய நமக்கே தோன்றும். வசனங்கள் படத்திற்கு மிகப்பெரிய பலம். குறிப்பாக நீதிமன்றத்தில் வாதாடும்போது பேசும் வசனங்கள் எல்லாம் கைதட்டல்களை பெறும் ரகம். கோர்ட் டிராமா கதையாக இருந்தாலும் படத்தின் திரைக்கதையை சுவாரஸ்யமாக வடிமைத்துள்ளார் இயக்குநர்.
சாய்ராவாக வர்திகா சிங்கும், வழக்கறிஞராக ஷீபா சாத்தாவும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை தந்துள்ளனர். படத்திற்கு இன்னொரு பக்கபலமாக வலுசேர்ப்பது விஷால் மிஸ்ராவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும்தான்.
1970, 80களில் நடக்கும் காலகட்டத்தை கண்முன் நிறுத்தும் வகையில் பிரதாம் மேத்தாவின் கேமெரா மற்றும் ஆர்ட் ஒர்க் சிறப்பாக உள்ளன.
க்ளாப்ஸ்
இம்ரான் ஹாஸ்மி, யாமி கௌதம் கதைக்களம் திரைக்கதை வசனங்கள்
பல்ப்ஸ்
பெரிதாக ஒன்றுமில்லை
மொத்தத்தில் இந்த Haq தனக்கான உரிமையை பெற போராடும் பெண்களுக்கு உத்வேகத்தை தரும். கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்.