மாயா வந்தா என்ன காஞ்சனா, பிசாசுனாலும் என்ன.... திகில் படத்தை திகில் இல்லாமல் பார்த்தவர் யார்
தமிழ் சினிமா இல்லை எந்த சினிமா எடுத்தாலும் காதல் ஆக்ஷன் என முக்கியமாக இருப்பது போல் திகில் கதைக்களத்தில் உருவாகும் படங்களும் உண்டு. அப்படி தமிழ் சினிமாவில் உருவான முதல் திகில் படம் என்றால் அது ரஜினியின் ஆயிரம் ஜென்மங்கள் படம் தானாம். 1978ம் ஆண்டு துரை என்பவர் இயக்க ரஜினி-லதா ஆகியோர் நடித்துள்ளார்கள். தமிழ் இருக்கட்டும் உலகிலேயே முதன்முதலாக வெளியான திகில் படம் எது தெரியுமா, The House Of The Devil படம் தான் உலகிலேயே முதன்முதலாக வந்த திகில் படமாம். 1896ம் ஆண்டு இப்படம் உருவாகி வெளியாகி இருக்கிறது. உலகம் மற்றும் தமிழ் சினிமாவின் முதல் திகில் படம் என்ன என்று பார்த்துவிட்டோம். இப்போது தமிழ் சினிமாவில் மக்களால் அதிகம் கொண்டாடப்பட்ட திகில் படங்களை பற்றி பார்ப்போம்.
மாயா
அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா-ஆரி நடிப்பில் வெளியான படம். வழக்கமான திகில் படமாக இல்லாமல் கொஞ்சம் கதைக்களத்தில் நிஜமாகவே வித்தியாசம் காட்டிய ஒரு படம். ஒரு கதை, அந்த கதைக்குள் ஒரு கதை, அதில் ஒரு பேய், அந்த பேய் இடத்தில் நயன்தாரா, இப்படி படித்தால் புரியாது, படம் பார்த்தால் நிஜமாகவே திகில் சுவாரஸ்யம் தான்.
முனி (காஞ்சனா)
பொதுவாக திகில் படங்களை மக்கள் பயந்துகொண்டு தான் பார்ப்பார்கள். ஆனால் நாம் ஏன் பயப்பட வைக்க வேண்டும் கொஞ்சம் சிரிக்க வைத்துக்கொண்டே பார்க்க வைக்கலாமே என்று ராகவா லாரன்ஸ் இயக்கிய படங்கள் தான் இதுவரை வந்த காஞ்சனாக்கள். 2007ம் ஆண்டு முனி என்ற படத்தில் தொடங்கிய காஞ்சனா பயணம் 3வது பாகம் வரை வந்துவிட்டது. அடுத்து 4வது காஞ்சனாவிற்கும் அவர் 3வது பட ரிலீஸ் படத்தின் போதே அறிவித்துவிட்டார்.
ஷாக்
சாக்லெட் பாய் என்ற ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பிரசாந்த் இதுவரை அப்படி ஒரு படம் கொடுத்ததில்லை. 2004ம் ஆண்டு பிரசாந்த்-மீனா ஜோடி போட்டு நடித்த படம் தான் ஷாக். வசந்த் என்பவர் ஒரு பெரிய அபார்ட்மென்டில் பிளாட் வாங்குகிறார். வாங்கி அங்கு சென்றபிறகு தான் தெரிகிறது அந்த வீட்டில் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அந்த விஷயம் தெரிந்த நேரத்தில் அவரது மனைவி வித்தியாசமாக நடந்துகொள்ள ஆரம்பிக்கிறார். பின் அந்த பேயிடம் இருந்து வசந்த் தனது மனைவி மாலினியை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே மீதிக் கதை.
13ம் நம்பர் வீடு
1990ம் ஆண்டு நிழல்கள் ரவி, சாதனா மற்றும் லலித் குமாரியின் முக்கிய நடிப்பில் பேபி என்பவர் இயக்க படம் வெளியாகி இருக்கிறது. இது கொஞ்சம் திகில் படங்களில் வித்தியாசம் காட்டுகிறார். அண்ணன்-தம்பி ஒரு வீட்டிற்கு குடி வருகிறார்கள். அந்த வீட்டு பெண்ணுக்கும் அவர்களது முன்னோருக்கும் ஒரு பகை. அந்த பெண் உயிர் விட்டதே அவர்கள் முன்னோர்களால் தான், எனவே அவர்களது குடும்பத்தில் எந்த ஆணையும் விட்டுவைக்க மாட்டேன் என ஆவி சபதம் எடுத்த வயிற்றில் இருக்கும் கருவை கூட விட்டுவைக்கவில்லை. பின் எப்படி போராட்டத்திற்கு பிறகு அந்த சின்ன சிசு பிறக்கிறது என்பதே மீதிக்கதையாக இருக்கிறது.
யார்?
இயக்குனர் சக்தி - கண்ணன் இயக்கத்தில் அர்ஜுன், நலினி, ஜெய் ஷங்கர் நடித்திருக்கும் திகில் திரைப்படம். இப்படத்தில் நடிகர் ரஜனிகாந்த் ஒரு கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். கடவுள் ப்ளஸ் தீய சக்தி இதுவே கதையின் கருவாக சின்ன சின்ன கதாபாத்திரங்கள் வைத்து படம் உருவாகியுள்ளது.
யாமிருக்க பயமே
2014ம் ஆண்டு டீகே இயக்கத்தில் கிருஷ்ணா, ரூபா மஞ்சரி, ஓவியா நடிப்பில் வெளியான திரைப்படம். கிரண் என்ற நாயகன் தனது நண்பனின் உதவியுடன் ஒரு மேன்ஷனை ஹோட்டலாக மாற்றுகிறார். பின் எல்லாம் நல்லது நடக்கும் என்று பார்க்க ஹோட்டலுக்கு வருபவர்கள் அனைவரும் இறக்கிறார்கள். பிறகு கிரண் ஹோட்டலில் பேய் இருப்பதை தெரிந்துகொள்கிறார். இதற்கு பிறகு நாயகன் பேயை விரட்ட முயற்சித்தாரா அல்லது பேய் இவர்களை விரட்டியதா என்பதே மீதிக்கதை.
அவள்
மிலிந்த் ராவ் இயக்கத்தில் சித்தார்த், ஆன்ட்ரியா நடிப்பில் 2017ம் ஆண்டு வெளியான திரைப்படம் பழங்கால ஐப்பானியக் குடும்பத்தில் இருந்து கதை தொடங்கி நிகழ்காலத்தில் கணவன்-மனைவியான கிருஷ்ணகாந்த்-லட்சுமி ஆகியோரை சுற்றி கதை நகர்கிறது. பழங்காலத்தில் நடந்த ஒரு சம்பவம் நிகழ்காலத்தில் பழிவாங்கப்படுகிறது, அது எப்படி என்ன நடந்தது என்பதே கதைக்கான முக்கியப்புள்ளி.
லிப்ட்
தமிழ் சினிமாவில் வினித் வரப்பிரசாத் இயக்கத்தில் பிக் பாஸ் கவின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் லிப்ட். கவின் மற்றும் அமிர்தா இவர்கள் இருவரும் ஒரே கம்பெனியில் பணிபுரிகிறார்கள். இருவரும் வேலையை முடித்துவிட்டு லேட் நைட்டில் வீட்டிற்கு செல்ல லிப்டில் ஏறுகிறார்கள். ஆனால் இவர்களால் லிப்டில் இருந்து வெளியே வரவே முடியவில்லை. ஏதேதோ முயற்சி செய்தும் இவர்களால் கடைசி வரை வெளியே வரவே முடியவில்லை. கடைசியில் என்ன ஆனார்கள், வெளியே வந்தார்களா, இதெற்கெல்லாம் என்ன காரணம் என்பதே கதை.
பிசாசு
மிஸ்கின் இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளியான ஒரு திகில் திரைப்படம். பவானி இளம் பெண் ஒரு விபத்தில் இறந்துவிடுகிறார். சித்தார்த் என்பவரை அவரை காப்பாற்ற முயன்றும் பலன் இல்லை. பின் அந்த பெண் சித்தார்த் என்பவரை பின் தொடர அவரின் உதவியுடன் தன்னை கொன்றவரின் உயிரை எடுக்கிறார். இப்படம் ஆரம்பம் முதலே கொஞ்சம் திகிலாக தான் இருக்கும்.
டிமாண்டி காலணி
அருள்நிதி படம் என்றாலே வித்தியாசமான கதைக்களத்துடன் சூப்பராக இருக்கும் என்ற எண்ணம் சினிமா ரசிகர்களிடம் உள்ளது. அப்படி அவர் இதுவரை தேர்வு செய்து நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் தான். அவரது நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியான ஒரு திகில் திரைப்படம் டிமாண்டி காலணி. பேய் பங்கலா என்று மக்களால் கூறக்கூடிய ஒரு வீட்டிற்கு 4 நண்பர்கள் செல்கிறார்கள். அதில் ஒருவர் அங்கிருந்த டைமன்ட் கல்லை திருடி பின் பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அதில் இருந்து தப்பித்து அவர்கள் வெளியே வந்தார்களா என்பதே திகிலாக கதையில் கூறப்பட்டுள்ளது.