ஹாட் ஸ்பாட் 2 மச்: திரை விமர்சனம்
இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் கடந்த 2024ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற படம் ஹாட் ஸ்பாட். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஹாட் ஸ்பாட் 2 மச் படத்தை இயக்கியுள்ளார் விக்னேஷ் கார்த்திக். நல்ல எதிர்பார்ப்புடன் இன்று திரையரங்கங்களில் வெளிவந்துள்ள ஹாட் ஸ்பாட் 2 மச் படம் எப்படி உள்ளது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.

கதைக்களம்
ஹாட் ஸ்பாட் முதல் பாகத்தில் பிரபல தயாரிப்பாளரின் மகளை விக்னேஷ் கார்த்திக் காதலிப்பார். அதற்காக அந்த தயாரிப்பாளரிடம் சென்று நான்கு கதைகளை கூறுவார்.
அந்த நான்கு கதைகளும் தயாரிப்பாளரின் வாழ்க்கையில் உள்ள ரகசியங்களை வைத்து உருவாக்கியிருப்பார் விக்னேஷ் கார்த்திக். நான்கு கதைகளும் முடிந்த பிறகு, தான் உங்கள் மகளை காதலிக்கிறேன் என விக்னேஷ் கார்த்திக் கூறுவார்.

அதிலிருந்து இரண்டாம் பாகம் தொடங்குகிறது. பிரிகிடா - விக்னேஷ் கார்த்திக் திருமணம் நடந்து முடிய, இருவருக்கும் முதலிரவு தொடங்கும் நேரத்தில் பிரிகிடாவுக்கு இதில் உடன்பாடு இல்லை என தெரியவருகிறது.
பின், தான் ஒரு லெஸ்பியன் என பிரிகிடா கூறுகிறார். அதுமட்டுமின்றி விக்னேஷ் கார்த்திக்கிடம் துணை இயக்குநராக பணிபுரிய ஆசைப்படும் பிரியா பவானி ஷங்கரை காதலிப்பதாகவும் கூறுகிறார். பிரிகிடாவின் நிலையை அறிந்து, விக்னேஷ் கார்த்திக் திட்டம் ஒன்றை போடுகிறார்.

விக்னேஷ் கார்த்திக் எப்படி பிரிகிடாவின் தந்தையிடம் சென்று, கதை சொல்லி திருமணத்திற்கு ஓகே வாங்கினாரா, அதே போல் பிரியா பவானி ஷங்கரை தயாரிப்பாளரிடம் அனுப்பி வைக்கிறார்கள். பிரியா பவானி ஷங்கரும் மூன்று கதைகளை கூறுகிறார். இதன்பின் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை.
படத்தை பற்றிய அலசல்
முதல் கதையில், திரையில் பார்க்கும் நடிகனை தலைவன் போல் கொண்டாடாதீர்கள் என சொன்ன கருத்து சிறப்பு. அதை வலியோடு சொன்னால்தான் சில முட்டாள் ரசிகர்களுக்கு புரியும் என்பதை அழகாக திரைக்கதையில் காட்டிய விதம் நன்றாக இருந்தது.
ஒரு நடிகருக்காக ரசிகன் எல்லைமீறி பல விஷயங்கள் செய்கிறான். இவ்வளவு ஏன் இறந்து கூட போகிறான். ஆனால், அந்த ரசிகன் தலைவன் என கொண்டாடும் அந்த நடிகர், தனது ரசிகனுக்காக எந்த ஒரு நேரத்திலும் உதவிக்கு வரமாட்டான் என காட்டியது திரைக்கதையை வலுவூட்டுகிறது.

அதில், எம்.எஸ். பாஸ்கர் நடிப்பு பட்டையை கிளப்பி விட்டது. சில நிமிடங்கள் வந்தாலும் தனது நடிப்பால் மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. அதே போல் இந்த கதையின் கிளைமாக்ஸ் நகைச்சுவையாக இருந்தாலும், வேதனையாகவும் இருந்தது.
இரண்டாவது கதையில் ஆடை சுதந்திரத்தை பற்றி அழுத்தமாக பேசியிருந்தார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக். ஆடை என்பது நாம் சௌகரியமாகவும், சுதந்திரமாகவும் அணிய வேண்டிய ஒன்று. ஆனால், அதற்கு இடம் பொருள் ஏவல் என்று ஒன்று உள்ளது என பேசியதும், அதில் தம்பி ராமையாவின் நடிப்பும் படத்திற்கு பலம் சேர்க்கிறது.
முதல் இரண்டு கதைகளை போலவே மூன்றவது கதையையும் திரைக்கதையில் சிறப்பாக வடிவமைத்திருந்தார் விக்னேஷ் கார்த்திக். ஃபேண்டஸி காதல் கதைக்களத்தில் உருவாகி இருந்த இந்த ஸ்டோரியில் அஸ்வின் மற்றும் பவானிஸ்ரீ நடித்திருந்தனர். இருவரின் நடிப்பும் நன்றாக இருந்தது. ஆனால், போன் நம்பர் மாறியதால் 2050ல் வாழும் ஒருவருக்கு கால் போவதெல்லாம் கொஞ்சம் ஓவர். ஃபேண்டஸி என்பதால் மட்டுமே ஏற்றுக் கொள்ள முடிகிறது.

முதல் பாகத்தில் எப்படி நான்கு கதைகளை கூறி நம்மை என்டர்டைன் செய்தாரோ அதே போல், இரண்டாம் பாகத்திலும் என்டர்டைன் செய்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக். சில இடங்களில் தொய்வு இருந்தாலும் மூன்று கதைகளின் திரைக்கதையும் நன்றாக இருந்தது. அதே போல் சில லாஜிக் மிஸ்டேக்ஸ், அதை தவிர்த்திருக்கலாம். எடிட்டிங், ஒளிப்பதிவு, பின்னணி இசை, மற்ற டெக்னீகள் ஒர்க்ஸ் எல்லாம் நன்றாக இருந்தது.
பிளஸ் பாயிண்ட்ஸ்
நடிகர்கள், நடிகைகளின் பங்களிப்பு
இயக்கம், திரைக்கதை
ஒவ்வொரு கதைக்குள் இருந்த ட்விஸ்ட்
எடிட்டிங்
ஒளிப்பதிவு
மைனஸ் பாயிண்ட்ஸ்
சில இடங்களில் ஏற்பட்ட தொய்வு மற்றும் லாஜிக் மிஸ்டேக்ஸ்
முதல் பாகத்தில் இருந்த அதே டெம்ப்லேட்
மொத்தத்தில் இந்த ஹாட் ஸ்பாட், கருத்துக்களுடன் சொல்லப்பட்டுள்ள என்டர்டைனிங்கான திரைப்படம். கண்டிப்பாக பார்க்கலாம்...
