Hot Spot திரைப்பட விமர்சனம்
கலையரசன், கௌரி கிஷன், ஜனனி ஐயர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் 'ஹாட் ஸ்பாட்'.
திட்டம் இரண்டு, அடியே படங்களை தொடர்ந்து விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் வெளியாகியுள்ள இத்திரைப்படத்தின் விமர்சனம் குறித்து இங்கே காண்போம்.
விமர்சனம்
ஆந்தாலஜி திரைக்கதை பாணியில் வெவ்வேறு வித்தியாசமான கதைகளை உள்ளடக்கிய படமாக உருவாகியுள்ளது ஹாட் ஸ்பாட்.
படத்தின் தலைப்பிற்கு ஏற்ப சர்ச்சைக்குரிய வகையிலான 4 கதைகளை கையில் எடுத்துள்ளார் படத்தின் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.
ஒவ்வொரு கதையும் ஒன்றன் பின் ஒன்றாக திரைக்கதையில் விரிகிறது. திருமண முறையில் உள்ள சிக்கல், அதை எப்படி இந்த கால தலைமுறை இளைஞர் மாற்ற முயல்கிறார் என்பதை ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷனின் காதல் கதை அழகாக விளக்குகிறது.
கதை தொடங்கியதும் என்ன நடக்கிறது? நடைமுறைக்கு எதிர்மறையான காட்சிகள் வருவது பார்வையாளர்களை நிமிர்ந்து பார்க்க செய்கிறது.
முதல் கதை காண்பிக்கப்பட்ட விதம், அதற்கு நாயகன் கொடுக்கும் ஒரு தீர்வு ஏற்றுக் கொள்ளும் வகையில் இருப்பதும், அடடா இது நடந்தால் நன்றாக இருக்குமே என்றும் தோன்ற வைக்கிறது.
சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமியின் அடுத்த கதை லெஸ்பியன் உறவை பற்றி ஆரம்பித்து, முடிவில் ஷாக் கொடுக்கும் வகையில் மாறுகிறது.
இரண்டாம் பாதியில் ஜிகோலோவைப் பற்றி பேசத் தொடங்கும் சுபாஷ் செல்வம், ஜனனி ஐயரின் கதை எங்கெங்கோ பயணித்து முடிவில் சறுக்குகிறது.
இறுதியாக ஆட்டோ ஓட்டுநராக வேலைபார்க்கும் கலையரசனின் கதை ஆரம்பிக்கிறது. இன்றைய சூழலில் நம்மை சுற்றி நடக்கும் மிக முக்கிய பிரச்சனையை இக்கதை பேசுகிறது.
இயக்குனர் சொல்ல வரும் கருத்து இதுதானோ என ஒட்டுமொத்த படத்திலும் பேச வைக்கிறது. வசனமாக மட்டுமே காட்டப்படும் ஒரு காட்சி ஒட்டுமொத்த அரங்கையும் உடல் நடுங்க வைக்கிறது
கலையரசன் பேசும் வசனமும், யதார்த்தமான நடிப்பில் அவர் உடைந்து அழுவதும் நம் இதயத்தை கணக்க வைக்கிறது. படம் முடிந்து வெளியே வரும்போது நிச்சயம் நம்மில் பல கேள்விகள் எழும் என்பதில் சந்தேகமில்லை.
க்ளாப்ஸ்
இயக்குனர் தைரியமாக எடுத்துக் கொண்ட கதைக்களம்
படத்தில் நடித்த நடிகர்களின் எதார்த்த நடிப்பு
கதையுடன் ஒன்றை வைக்கும் பின்னணி இசை
பல்ப்ஸ்
படத்தில் காட்டப்படும் 4 கதைகளில் இரண்டு கதைகளுக்கு முடிவு சரியாக அமையவில்லையோ என தோன்றுகிறது
(குறிப்பு: இது வயது வந்தோருக்கான கதைக்களம் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்)
மொத்தத்தில் இன்றைய நவீன உலகில் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு பெற்றோரும் ஒரு காரணமாக இருப்பதை முகத்தில் அறைந்தது போல் கூறியிருக்கிறது இந்த ஹாட் ஸ்பாட்.