I Play Rocky: திரை விமர்சனம்

By Sivaraj Nov 14, 2026 08:00 AM GMT
Report

ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர் சில்வெஸ்டர் ஸ்டாலோனின் 'ராக்கி' படத்தின் பயோபிக்காக வெளியாகியுள்ள I Play Rocky திரைப்படம் பார்வையாளர்களை கவர்ந்ததா என்று பார்ப்போம் வாங்க.

I Play Rocky: திரை விமர்சனம் | I Play Rocky Movie Review

கதைக்களம்

1970களின் தொடக்கத்தில் ஹாலிவுட் ஹீரோ ஆகும் கனவில் நியூயார்க் நகரில் சிரமப்படுகிறார் மைக் ஸ்டாலோன். ஒருநாள் இரவு வெளியே உறங்கும்போது நாய்க்குட்டி ஒன்றை கண்டெடுக்கும் மைக், அதனை வளர்க்க ஆரம்பிக்கிறார்.

வாழ்க்கை செலவிற்காக சிறு சிறு வேலைகளை செய்யும் மைக், தனது சக ஊழியர் சாஷாவுடன் நட்புக்கொள்கிறார். பின்னாளில் இருவரும் காதலிக்கத் தொடங்குகிறார்கள். மகனின் ஹீரோ ஆகும் லட்சியத்தை வெறுக்கும் மைக்கின் அப்பா ஃப்ராங்க், அவரை அறிவற்றவன் என்று சாஷாவை அறிமுகப்படுத்தும்போதே கூறுகிறார்.

இந்த சூழலில் சாஷாவை திருமணம் செய்துகொண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு குடியேறும் மைக் திரைக்கதைகள் எழுதத் தொடங்குகிறார். அப்போது தனது பெயரை சில்வெஸ்டர் ஸ்டாலோன் என்று மாற்றி வைத்துக் கொள்கிறார்.

I Play Rocky: திரை விமர்சனம் | I Play Rocky Movie Review

ஒருநாள் தயாரிப்பாளர்கள் ராபர்ட் சார்டாஃப், இர்வின் வின்க்லர் ஆகியோரை சில்வெஸ்டர் சந்திக்கிறார். அங்கு அவர் ஹீரோ ஆகும் கனவு எடுபடவில்லை. என்றாலும், அவர் இரகசியமாக வைத்துவிட்டு வந்த திரைக்கதையை படிக்கும் தயாரிப்பாளர்கள், வேறு எதாவது கதையை உருவாக்கினால் தங்களை அணுகுமாறு சில்வெஸ்டரிடம் கூறுகிறார்கள்.

இதற்கிடையில் சாஷா கர்ப்பமாக நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் சில்வெஸ்டர், ஆசையாக வளர்த்த நாய்க்கு உணவு அளிக்க முடியாததால் ஒருவருக்கு விற்றுவிடுகிறார்.

இருந்தாலும் தனது முயற்சியை கைவிடாத சில்வெஸ்டர், முகமது அலியின் குத்துச்சண்டை போட்டியை டிவியில் பார்த்ததும், அதிலிருந்து தோன்றிய 'ராக்கி' என்ற கதையை திரைக்கதையாக எழுதுகிறார்.

அந்த ஸ்கிரிப்ட் தயாரிப்பாளர்களுக்கு மிகவும் பிடித்துப்போக, நான்தான் இப்படத்தில் ஹீரோ என்று சில்வெஸ்டர் கூறுவதைக் கேட்டு எரிச்சலடைகின்றனர். என்றாலும் அந்த ஸ்கிரிப்ட் நிச்சயம் பெரிய வெற்றியைப் பெறும் என்பதால், அதிகப்படியான விலைக்கு அதனை வாங்க சில்வெஸ்டரிடம் ராபர்ட், இர்வின் முயற்சிக்கின்றனர்.

I Play Rocky: திரை விமர்சனம் | I Play Rocky Movie Review

என் ஸ்கிரிப்டில் நான்தான் ஹீரோவாக நடிப்பேன் என்று சில்வெஸ்டர் பிடிவாதம் பிடிக்க, நீண்ட முயற்சிகளுக்குப் பிறகு சில நிபந்தனைகளுடன் சில்வெஸ்டரை ஹீரோவாக வைத்து படம் எடுக்க ராபர்ட், இர்வின் ஒப்புக்கொள்கிறார்கள். அதன் பின்னர் சில்வெஸ்டர் எப்படி அப்படத்தை பல சிரமங்களுடன் எடுத்து வெற்றி பெற்றார் என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்

தமிழில் ரஜினி - கமல் போல் ஹாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் சில்வெஸ்டர் ஸ்டாலோன் - அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர். இருவரில் ராக்கி, ராம்போ படங்களில் நடித்து பெரும் புகழ்பெற்ற நடிகரான சில்வெஸ்டர் ஸ்டாலோன், எப்படி விடப்பிடியாக மூன்றரை நாட்களில் எழுதி முடித்த தனது ஸ்கிரிப்ட்டில் ஹீரோவாக நடித்தார் என்பதே I Play Rocky.

க்ரீன் புக் படப்புகழ் பீட்டர் ஃபேர்ரேல்லி இப்படத்தை உண்மைக்கு மிக நெருக்கமாக சிறப்பாக இயக்கியுள்ளார். பயோபிக் என்றாலே ஸ்லோ டிராமாதான்; ஆனாலும் அதனை எந்த அளவிற்கு சுவாரஸ்யமாக காட்சிப்படுத்த முடியுமோ, அந்தளவிற்கு நேர்த்தியாக படத்தை எடுத்துள்ளார் பீட்டர்.

படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் எது என்றால் கதாபாத்திரத் தேர்வுதான். ஒவ்வொரு கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்களும் அதாவாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்றே கூறலாம். ஆங்காங்கே வரும் எமோஷனல் காட்சிகள், டார்க் காமெடிகள் என அனைத்தும் படத்துடன் ஒன்றை வைக்கின்றன.

I Play Rocky: திரை விமர்சனம் | I Play Rocky Movie Review

சொற்ப விலைக்கு விற்ற நாயை, சில்வெஸ்டர் 1000 டாலர்கள் கொடுத்து மீண்டும் வாங்கும் காட்சி ஒரு உதாரணம். அதேபோல் ஹீரோவும், ஹீரோயினும் கொட்டும் மழையில் ஒரு காருக்குள் அமர்ந்து கோபமாக பேசி முடித்துவிட்டு, ஆமா இது யாருடைய கார் என்று சில்வெஸ்டர் கேட்கும்போது திரையரங்கில் குபீர் சிரிப்பு.

ராக்கி படத்தை பார்த்தவர்களுக்கு இப்படத்தில் காட்டப்படும் சூட்டிங்ஸ்பாட் காட்சிகள் எல்லாமே கூஸ்பம்ப் மொமென்ட்டாக இருக்கும். நடிகர்களைப் பொறுத்தவரை சில்வெஸ்டர் ஸ்டாலோனாக ஆண்டனிஇப்போலிடோ வாழ்ந்திருக்கிறார் என்றே கூறலாம்.

அந்தளவிற்கு கட்டக் குரலில் தொடங்கி, உடல்மொழி, வசன உச்சரிப்பு என அனைத்திலும் அப்படியே பிரதிபலித்திருக்கிறார். தனியாளாக படத்தைத் தாங்கும் ஆண்டனியின் Screen presence அபாரம். அவரது காதலி/மனைவியாக நடித்திருக்கும் அன்னா சோபியா தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

I Play Rocky: திரை விமர்சனம் | I Play Rocky Movie Review

தயாரிப்பாளர்களாக வரும் P.J.பிரைன், டோபி கேப்பெல் இருவரும் பல காட்சிகளில் கலகலப்பூட்டுகிறார்கள். ஸ்டீபன் ஜேம்ஸ் வரும் காட்சி செம அலப்பறை. இயக்குநராக வரும் ஜே டுப்லாஸ், பாக்சிங் கோச்சாக வரும் எரிக் உட்பட அனைத்து நடிகர்களும் யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

டேவ் பால்மரின் பின்னணி இசை சிறப்பாக இருந்தாலும், பழைய ராக்கி Bgm வரும்போது விசில் பறக்கிறது. சாம் செய்க்கின் படத்தொகுப்பு, சீன் போர்ட்டரின் ஒளிப்பதிவு என அனைத்தும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளன.

க்ளாப்ஸ்

  • ஆண்டனி இப்போலிடோ
  • பிற நடிகர்களின் பங்களிப்பு
  • காட்சியமைப்புகள்
  • சுவாரஸ்ய திரைக்கதை

பல்ப்ஸ்

  • பெரிதாக ஒன்றுமில்லை

மொத்தத்தில் இந்த I Play Rocky 50 ஆண்டுகள் கடந்து வந்தும் சாம்பியன் பட்டத்தை வென்றுவிட்டான். கண்டிப்பாக அனைவரும் (18+) பார்க்க வேண்டிய திரைப்படம்.

I Play Rocky: திரை விமர்சனம் | I Play Rocky Movie Review

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US