இறைவன் திரைவிமர்சனம்
ஐ. அஹ்மத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இன்று திரைக்கு வந்துள்ள படம் இறைவன். சைக்கோ த்ரில்லர் கதைக்களத்தில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நயன்தாரா, ராகுல் போஸ், சார்லி, நரேன், விஜயலக்ஷ்மி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு இன்று வெளிவந்துள்ள இறைவன், எந்த அளவிற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார் என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க..
கதைக்களம்
இளம் பெண்களை கடத்தி அவர்களை அணுஅணுவாக சித்ரவதைச் செய்து கொலை செய்கிறார் சைக்கோ கில்லர் பிரம்மா [ராகுல் போஸ்]. கிட்டத்தட்ட 12 பெண்களை ஒரே மாதிரியான வகையில் சித்ரவதை செய்து தொடர்ந்து கொலை செய்து வருகிறார்.
இதை போலீஸ் அதிகாரிகளான அர்ஜுன் [ஜெயம் ரவி] மற்றும் அவருடைய நண்பன் ஆண்ட்ரூ [நரேன்] இருவரும் இணைந்து விசாரணை செய்து ஒரு வழியாக சைக்கோ கில்லர் பிரம்மாவை பிடித்துவிடுகிறார்கள். இதில் நரேன் மரணமடைகிறார். பிரம்மா சிறைக்கு செல்ல, தனது நண்பனை இழந்ததால், ஜெயம் ரவி போலீஸ் வேலையை விட்டு விலகுகிறார்.
சில மாதங்கள் செல்ல மீண்டும் ஒரு அதிர்ச்சி தகவலாக பிரம்மா காவல்துறை பிடியில் இருந்து தப்பித்து விட்டார் என தெரியவருகிறது. இதன்பின் என்ன நடந்தது, கொலைகள் மீண்டும் தொடரப்பட்டதா? இதனால் ஜெயம் ரவி சந்தித்த இன்னல்கள் எல்லாம் என்னென்ன என்பதே படத்தின் மீதி கதை..
படத்தை பற்றிய அலசல்
ஹீரோ ஜெயம் ரவி ஏற்கனவே பல போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், இறைவன் படத்தில் வரும் அர்ஜுன் ரோலில் சற்று மாறுபட்டு நடித்துள்ளார் என்று சொல்லலாம்.
போலீஸ் என்றால் சில விதிமுறைகளை மீற கூடாது, ஆனால் தனக்கு எந்த ஒரு விதிமுறையும் கிடையாது, தவறு செய்தவனை ஆண்டவன் தண்டிக்கும் வரை நான் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டேன் என இரக்கமற்ற காவல் அதிகாரியாக நடித்து அசத்தியுள்ளார். வில்லன் மூலம் இவர் அனுபவிக்கும் மனநிலை சார்ந்த காட்சிகளில் அருமையாக நடித்துள்ளார். கதாநாயகி நயன்தாராவிற்கு பெரிதளவில் ஸ்கோப் இல்லை.
ராகுல் போஸ் தனது நடிப்பில் நம்முடைய மூளையை சலவை செய்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு இருந்தது அவருடைய நடிப்பு. அதே போல் வினோத் கிஷன் நடிப்பும் பட்டையை கிளப்பியது.
சார்லி சில காட்சிகள் வந்தாலும், அதில் அசத்திவிட்டார். குறிப்பாக தனது மகள் இறப்பின் போது மருத்துவமனையில் இவர் நடித்த நடிப்பு சில வினாடிகள் என்றாலும், நம்மை கலங்க வைத்துவிட்டது. அழகம் பெருமாள், ஆசிஷ் வித்யார்த், பகவதி பெருமாள் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு பலம்.
இயக்குனர் ஐ. அஹ்மத் எடுத்துக்கொண்ட முயற்சிக்கு பாராட்டுக்கள். ஹாலிவுட் தரத்தில் ஒரு படத்தை கொடுத்துள்ளார். ஆனால், நம்மை நொடிக்கு நொடிக்கு த்ரில் செய்ததா என்று கேட்டால் கேள்விக்குறி தான். ஒவ்வொரு காட்சியின் அமைப்பு பக்காவாக இருந்தாலும், திரைக்கதை வலுவாக இல்லை. அடுத்து என்ன அடுத்து என்ன என்று நம்மை யோசிக்க வைப்பார்கள் என்று பார்த்தால் பல இடங்களில் ஏமாற்றம் தான் மிஞ்சியது.
மனதளவில் படம் பார்ப்பவர்களை தொந்தரவு செய்யும் காட்சிகள் மட்டுமே தான் இருந்ததே தவிர்த்து, எமோஷனலாக கனெக்ட் ஆகவில்லை. இதுவே இப்படத்திற்கு பெரிய மைனஸ் பாயிண்ட். யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு பலம். அதே போல் ஹரி ஒளிப்பதிவு மிரட்டுகிறது.
இது ஸ்பாய்லராக இருந்தாலும் இருக்கட்டும், ஏனென்றால் இந்த ஷாட்டை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. சார்லி மற்றும் அவரது மகள் இறந்து கிடக்க டாப் ஆங்கிளில் வைத்த ஷாட் பல ஹாலிவுட் படங்களில் கூட பார்த்தது இல்லை. அவ்வளவு பிரமாதமாக எடுத்துள்ளார்கள். எடிட்டிங் இன்னும் கூட நன்றாக இருந்து இருக்கலாம்.
பிளஸ் பாயிண்ட்
ஜெயம் ரவி நடிப்பு
ராகுல் போஸ், வினோத் கிஷன் நடிப்பு
மனதை தொந்தரவு செய்யும் காட்சிகள்
ஒளிப்பதிவு
மைனஸ் பாயிண்ட்
திரைக்கதை வலுவாக இல்லை
எமோஷனல் கனெக்ட் இல்லை