இரவின் நிழல் திரைவிமர்சனம்
தமிழ் சினிமாவில் கடந்த 30 வருடங்களாக வித்தியாசமான முயற்சிகளை மட்டுமே எடுத்துக்கொண்டிருப்பவர் இயக்குனரும், நடிகரும், தயாரிப்பாளருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபன். இவருடைய மற்றொரு வித்தியாசமான முயற்சியில் உருவாகி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் தான், இரவின் நிழல். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இப்படம் உலகிலேயே முதல் முறையாக 'நான் லீனியர் சிங்கிள் ஷாட்' படமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிக்கே முதலில் இயக்குனர் பார்த்திபன் அவர்களுக்கு பாராட்டு. சரி, இன்று மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்துள்ள இரவின் நிழல் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ததா என்று வாங்க பார்க்கலாம்..
கதைக்களம்
50வயதில் சினிமா ஃபைனான்சியராக இருக்கும் பார்த்திபன் { நந்து }. அவரிடம் வட்டிக்கு பணம்வாங்கி படமெடுத்த இயக்குனர், நஷ்டமடைந்து பணத்தை திரும்ப கொடுக்கமுடியாத காரணத்தினால் தனது மனைவியுடன் தற்கொலை செய்துகொள்கிறார். இதற்க்கு பார்த்திபன் காரணம் என்று நம்பும், அவரது மனைவி மற்றும் மகள் இருவரும் பார்த்திபனை வெறுத்து ஒதுக்கி வெகு தூரம் சென்றுவிடுகிறீர்கள்.
ஒரு பக்கம் இந்த செய்தி ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதை அறிந்து பார்த்திபனை கைது செய் போலீஸ் வருகிறது. அப்போது தனக்கு மிகவும் பரிச்சையமான, ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்து தற்போது பாழடைந்து கிடக்கும் இடத்திற்கு பார்த்திபன் தனது கைதுப்பாக்கியுடன் செல்கிறார். அந்த இடத்தில் இருந்து தனது பிறப்பின் கதையை சொல்ல துவங்குகிறார்.
1971ல் துவங்கும் கதையில், கணவனால் கொலைசெய்யப்பட்ட ரத்த சகதியில் கிடக்கும் தன்னுடைய தாயின் சடலத்தில் பால் குடிக்கும் கைக்குழந்தையாக அறிமுகமாகிறார் நந்து. இதை தொடர்ந்து 10 வயது, 17 வயது, 30 வயது, 40 வயது என தனது வாழ்க்கையில் ஏற்பட்ட பல கசப்பான அனுபவங்களையும், காதல் கதையையும் கூறுகிறார். இந்த பயணத்தில் அவர் எப்படி இரவினுடைய நிழலில் சிக்கினார்.. அது அவரை எவ்வளவு தூரத்திற்கு துரத்தியது.. நந்துவிற்கு என்னவானது? என்பதே படத்தின் மீதி கதை..
படத்தை பற்றிய அலசல்
படம் துவங்குவதற்கு முன் படத்தின் மேக்கிங்கை போட்டு காமித்து அனைவரையும் அசரவைத்து விட்டார் பார்த்திபன். அப்போதிலிருந்து அவருக்கு க்ளாப்ஸ் கிடைக்க துவங்கிவிட்டது. மேக்கிங்கில் ஒவ்வொரு முறை எப்படி ரீ-டேக் வந்துகொண்டே இருந்தது. ஒவ்வொரு முறை தாங்கள் என்ன தப்பு செய்தோம் என்பதை காட்டுகிறார். ஒன்றல்ல, இரண்டல்ல, மொத்தமாக 23 டேக்குக்கு பின் முழு படத்தையும் ஒரே ஷாட்டில் எடுத்து முடித்துள்ளார்.
உலக சினிமாவில் சிங்கிள் ஷாட் படம் பல வந்துள்ளன. ஆனால், உலகிலேயே முதல் முறையாக 'நான் லீனியர் சிங்கிள் ஷாட்' படமாக மிகவும் அற்புதமாக உருவாகி வெளிவந்துள்ளது இரவின். 64 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டடுள்ள நகரும், நகராத செட்டை பிரமாதமாக உருவாகியுள்ளனர். அதற்க்கு முதலில் செட் அமைத்தவர்களுக்கு பாராட்டுக்கள். படத்தை முழுமையாக தனது கைகளில் எடுத்து சென்ற ஒளிப்பதிவாளர் Arthur A. Wilson அவர்களுக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.
அதே போல் அவருடன் பணிபுரிந்த போகஸ் புல்லர் தொழில்நுட்பக் கலைஞர்கள் 'சங்கரன் டிசோசா, ராஜேஷுக்கு' தனி பாராட்டுக்கள். படத்தில் அறிமுகமாகியுள்ள பலரும் நடிப்பில் தனித்து நிற்கிறார்கள். குறிப்பாக 30 வயது நந்துவாக வரும் அனந்த கிருஷ்ணன், லட்சுமியாக வரும் நடிகை சினேகா குமார், சிலக்கம்மாவாக வரும் பிரிகடா சகா என புதுமுக கலைஞர்கள் கவனத்தை ஏற்கிறார்கள். அதே போல் ரோபோ ஷங்கர், வரலக்ஷ்மி சரத்குமார், சாய் பிரியங்கா அனைவரும் அருமையாக நடித்துள்ளார்கள்.
இயக்குனராகவும், நடிகராகவும் மிரட்டியுள்ளார் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாக செதுக்கியுள்ளார். அவருடைய உழைப்புக்கு தனி க்ளாப்ஸ். நான் லீனியர் திரைக்கதையில் பட்டையை கிளப்புகிறார். படத்தின் திரைக்கதையை தனது இசையாலும் ரசிக்க வைக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான். ஒவ்வொரு காட்சியையும் தனது பின்னணி இசையில் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கிறார். படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்களும் அருமையாக வந்துள்ளது.
க்ளாப்ஸ்
இரவின் நிழலில் படம்
பல்ப்ஸ்
இப்படிப்பட்ட ஒரு படைப்பில் தவறை கண்டுபிடிப்பதைவிட, அதை கொண்டாடுவதே சிறப்பாகும்