ஜெயிலர் திரைவிமர்சனம்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இன்று உலகளவில் வெளியாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெரோஃப், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, தமன்னா என ஒட்டுமொத்த இந்திய திரையுலக நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.
இவர்கள் அனைவரையும் தாண்டி ரஜினிகாந்த் என்ற ஒரே ஒருவருக்காக இந்த படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ரசிகர்கள் முழுமையாக திருப்தி ஆனார்களா? என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க..
கதைக்களம்
காவல் துறையில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரி டைகர் முத்துவேல் பாண்டியன் { ரஜினிகாந்த் } மனைவி, மகன், மருமகள், பேரன் என தனது குடும்பத்துடன் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார். தந்தையை போலவே மகனும் காவல்துறையில் நேர்மையான அதிகாரியாக இருக்கிறார்.
இப்படி இருக்க ரஜினியின் மகன் வசந்த் ரவி கடந்த சில ஆண்டுகளாக சிலை கடத்தல் வழக்கை கையில் எடுத்து விசாரணை செய்து வர, அது மிகப்பெரிய நெட்வொர்க் என தெரிந்தும் சில பெரிய ஆட்கள் மீதி வசந்த் கை வைக்கிறார்.
இந்த செய்தி வில்லன் விநாயகன் காதுக்கு போக, வசந்த் ரவியை கடத்தி கொலை செய்து விடுகிறார். இதனால் ரஜினிகாந்த் குடும்பம் நிலை குலைந்து போகிறது.
டைகர் முத்துவேல் பாண்டியன் தனது மகனை கொலை செய்தது யார் என கண்டுபிடித்தாரா? இதன்பின் ரஜினி மற்றும் அவரது குடும்பம் சந்தித்த விளைவுகள் என்னென்ன? என்பதே படத்தின் மீது கதை..
படத்தை பற்றிய அலசல்
திரையில் வரும் ஒவ்வொரு காட்சியிலும், மாஸ் காட்டிவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். குறிப்பாக தனது மகனுக்காக ரிவெஞ் எடுக்கும் ரஜினியின் ஆட்டம் வேற லெவல். ரசிகர்கள் எப்படியெல்லாம் அவரை திரையில் பார்க்க வேண்டுமென நினைத்தார்களோ அது அப்படியே நடந்துள்ளது. ஒரு இடத்தில் கூட குறை சொல்லவே முடியாத அளவிற்கு நடித்துள்ளார்.
வில்லன் விநாயகன் ஹீரோ ரஜினிக்கு செம டஃப் கொடுத்துள்ளார். இவருடைய நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்டாக அமைந்துள்ளது. மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெரோஃப் தோன்றிய காட்சிகள் திரையரங்கை அதிர வைத்தது. கேமியோ என்றால் சும்மா வந்துட்டு போவது மட்டுமல்லாமல், இவர்கள் வரும் காட்சிகள் திரைக்கதைக்கு தேவையானதாகவும் இருந்தது.
யோகி பாபு மற்றும் சுனில் இருவரின் நடிப்பும் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. யோகி பாபுவின் நகைச்சுவை சில இடங்களில் எடுபடவில்லை என்றாலும், அது எந்த விதத்திலும் சலிப்பு தட்டவில்லை. வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், மிர்னா மூவரும் கதாபாத்திரத்திற்கு தேவையானதை செய்துள்ளனர். பேரனாக நடித்துள்ள ரித்விக் தனக்கு கொடுத்தது என்னவோ அதை கரெக்டாக செய்துள்ளார்.
ஜாஃபர் படத்தில் ரஜினிக்கு மட்டும் உதவி செய்யாமல் படத்தின் திரைக்கதைக்கு தனது நடிப்பால் உதவியுள்ளார். பாடலில் அசத்திய தமன்னா சில காட்சிகளில் மட்டுமே தோன்றுகிறார். நடிப்பில் அவருக்கு சுத்தமாக ஸ்கோப் இல்லை. விநாயகன் கேங், ரஜினியின் கேங்கில் நடிப்பவர்களுக்கு தனி பாராட்டு. மற்றபடி சரவணன், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி என அனைவரின் நடிப்பும் ஓகே.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் எடுத்துக்கொண்ட கதைக்கரு ரொம்ப பழசு என்றாலும், சொன்னவிதம் மிகவும் புதிது. இதுல என்னடா புதுசு என படம் பார்த்தவர்கள் கேட்டால் தன்னுடைய டார்க் காமெடியுடன், ஆக்ஷன் + வைலென்ஸ் + செண்டிமெண்ட் என மொத்த கமர்ஷியல் Package ஆக தான் ஜெயிலர் படத்தை உருவாக்கியுள்ளார்.
படம் தொடங்கும் முதல் 25 நிமிடங்கள் சில தொய்வு இருந்தாலும், அடுத்தடுத்து தனது திரைக்கதையின் மூலம் மிரட்டி விட்டார். பீஸ்ட் படத்தில் இவர் சந்தித்த எல்லா சர்ச்சைக்கும் ஜெயிலர் படத்தின் மூலம் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
அதேபோல் பின்னணி இசை மற்றும் பாடல்கள் செம மாஸ். ஜெயிலரின் கையை பிடித்து அனிருத் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றுவிட்டார். அந்த அளவிற்கு பின்னணி இசை வெறித்தனமாக இருந்தது. குறை என்ற பேச்சுக்கே இங்கு இடம் இல்லை. ஒளிப்பதிவு அட்டகாசம், ஆக்ஷன் பட்டையை கிளப்புகிறது. மேலும் எடிட்டிங் படத்திற்கு மிகப்பெரிய பலம். கலை இயக்கம் சூப்பர்.
பிளஸ் பாயிண்ட்
ரஜினிகாந்த் நடிப்பு
விநாயகன் நடிப்பு
நெல்சன் திரைக்கதை - டார்க் காமெடி
மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெரோஃப், சுனில்
அனிருத் பாடல்கள், பின்னணி இசை
ஒளிப்பதிவு, எடிட்டிங், ஆக்ஷன் காட்சிகள்
மைனஸ் பாயிண்ட்
குறை என்று சொல்ல ஒன்றும் இல்லை