சூப்பர் சிங்கர் ஷோ மீது ஜேம்ஸ் வசந்தன் அதிர்ச்சி புகார்
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் 8வது சீஸனின் கிராண்ட் ஃபினாலே கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அதில் கிரிஷாங் டைட்டில் ஜெயித்ததாக யுவன் ஷங்கர் ராஜா அறிவித்தார். அவருக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது.
இரண்டாம் இடம் பிடித்த ரிஹானாவுக்கு 5 லட்சம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த நேஹாவுக்கு 3 லட்சமும் பரிசு வழங்கப்பட்டது.
இந்நிலையில் பைனலை டிவியில் பார்த்து இயக்குனர் ஜேம்ஸ் வசந்தன் ஒரு அதிர்ச்சி புகார் கூறி இருக்கிறார்.
அவர் கூறி இருப்பதாவது..
தற்செயலாக TV பார்த்தேன். Vijay TV Super Singer Junior FINALS LIVE போய்க்கொண்டிருக்கிறது. ஒரு 8-வயது (இருக்கலாம்) பெண் குழந்தை 'கருத்தவன்ல்லாம் கலீஜாம்' பாட்டை முழு ஈடுபாட்டுடன் பாடிக்கொண்டிருக்கிறது. பாடலின் இடையில் வருகிற 'தக்காளி' என்கிற வார்த்தையை அந்தப் பாடகரைப் போலவே அழுத்தமாகச் சத்தமிட்டுச் சொல்கிறது கள்ளமறியா அந்தப் பிஞ்சு உதடுகள்.
எனக்கு 'திக்'கென்கிறது. அது ஒரு கேவலமான கெட்ட வார்த்தையின் இணைச்சொல் என்பது ஆண்கள் எல்லோருக்கும் தெரியும்.
அந்தச் சொல்லைப் பாடினால் ஊரு திட்டும், சென்சார் பிரச்சனை வரும். அதனால் அதே போலவே ஒலிக்கிற இந்தச் சொல்லைச் சொல்லி மகிழ்கிற உயரிய சிந்தனையுடைய பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர், நடிகரின் சமூகப் பங்களிப்பு இது. இது ஒரு புறம்!
ஆனால், இந்தப் பாடலையும், அந்தக் குறிப்பிட்டச் சொல்லையும் அந்தக் குழந்தைக்கு அட்சரம் பிசகாமல் சொல்லிக்கொடுத்த பெற்றோரையும், இசை ஆசிரியரையும், நிகழ்ச்சி தயாரிப்புக் குழுவினரையும் தமிழ்ச் சமூகம் காலத்துக்கும் வாழ்த்த வேண்டும்!
கெட்ட வார்த்தைகளைப் பாடித்தான் உங்கள் வாழ்க்கையை நடத்தவேண்டிய நிலையில் நீங்களெல்லாம் இருக்கிறீர்களென்றால் அதற்கான தளத்தைத் தேர்ந்தெடுங்கள். ஆண்களுக்கு மட்டும் பெரியவர்களுக்கு மட்டும் என்பது போன்ற எச்சரிக்கையுடன் வெளியிடுங்கள். அதற்குப் பிறகு அது பயனாளரின் பொறுப்பு! இப்படி குழந்தைகளும் கேட்கிற, பாடுகிற வெகுஜன ஊடகமான சினிமாப் பாடல்களுக்குள் நஞ்சை இடைச்சொருகல் செய்து ஒட்டுமொத்தமாய் எல்லாரையும் களங்கப்படுத்தாதீர்கள்.
இவ்வாறு ஜேம்ஸ் வசந்தன் பதிவிட்டு உள்ளார்.

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
