ஜெயலலிதாவுடன் ஒரு படம் நடிக்க இருந்தேன்.. ரஜினி மறைமுகமாக சொன்ன படம் இதுதான்
நடிகர் ரஜினி 74 வயதிலும் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார். அவரது படங்கள் அடுத்த தலைமுறை ஹீரோக்களின் படங்களுக்கு இணையாக வசூலை குவிக்கின்றன.
மறைந்த நடிகையும், முன்னாள் முதலமைச்சருமான ஜெ.ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா இன்று சென்னை போயஸ் கார்டனில் இருக்கும் அவர் வீட்டில் நடைபெற்றது. அதில் நடிகர் ரஜினியும் கலந்துகொண்டார்.
ஜெ-வுடன் ஒரு படம் நடிக்க இருந்தேன்..
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி தான் இதற்கு முன் மூன்று முறை வேதா இல்லத்திற்கு வந்திருக்கிறேன் என கூறினார்.
"1977ல் ஒரு படம் அவருடன் நான் நடிக்க இருந்தேன், அதற்கான பேச்சுவார்த்தைக்கு வந்தேன். அதன் பின் ராகவேந்திரா திருமண மண்டபத்தை திறந்து வைக்க அழைக்க வந்தேன். அதன் பின் என் மகள் திருமணத்திற்கு மூன்றாவது முறை வந்தேன்" என ரஜினி கூறினார்.
ரஜினி ஜெயலலிதா உடன் நடிக்க இருந்த படத்தின் பெயரை குறிப்பிடவில்லை. 1980ல் வெளிவந்த பில்லா படம் தான் அது. ஜெயலலிதா அந்த படத்தில் நடிக்க முடியாது என மறுத்த பிறகு தான் அந்த வாய்ப்பு நடிகை ஸ்ரீப்ரியாவுக்கு சென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.