ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரை விமர்சனம்
தமிழ் சினிமாவில் ஒரு சில பேர் தான் தங்களை தூக்கிவிட்ட சினிமாவிற்காகவும், சினிமாவை ரசிக்கும் ரசிகனின் மனநிலையை மேம்படுத்தவும் படம் எடுப்பார்கள், அதை தொடர்ந்து தன் படங்களில் செய்து வரும் கார்த்திக் சுப்புராஜ் இந்த முறை ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற கதைக்களத்தை தேர்ந்துத்துள்ளார், இதிலும் சினிமாவை ரசிகர்களுக்கு சினிமாவாக எப்படி காட்டினார் என்பதை பார்ப்போம்.
கதைக்களம்
1973-ல் கதை தொடங்குகிறது, எஸ் ஜே சூர்யா மிகவும் பயந்து சுபாவம் கொண்டவராக இருந்தாலும், SI ஆக இன்னும் சில நாட்களில் காவல்துறையில் சேர இருக்கிறார்.
அப்போது தன் காதலியை பார்க்க, கல்லூரிக்கு வர, அங்கு 4 பேரை கொன்று அந்த பழியை எஸ் ஜே சூர்யா மேல் போட, அவரை போலிஸார் கைது செய்கின்றனர்.
அதே நேரத்தில் உச்சத்தில் இருக்கும் நடிகர் ஒருவர் அரசியலிலும் இருக்க, தன் போட்டி அரசியல்வாதியை சாய்த்தால் தான் தனக்கு CM பதிவு கிடைக்கும் என்று இருக்கிறார்.
இதற்கு முக்கியமாக ஆலிஸ் சீசர்(ராகவா லாரன்ஸை) போட்டு தள்ள வேண்டும், அதற்காக எஸ்ஜே சூர்யாவை சிறையிலிருந்து வெளியே அனுப்பி அவரை கொல்ல சொல்கின்றனர் ஒரு கூட்டம்.
அவரும் லாரன்ஸிற்கு சினிமா ஆசை இருப்பதை அறிந்து, இயக்குனர் என சொல்லிக்கொண்டு அவர் லாரன்ஸிடம் நெருங்க, பிறகு என்ன ஆனது என்ற ஒரு எமோஷ்னல் பேக்கேஜ் தான் இந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.
படத்தை பற்றிய அலசல்
லாரன்ஸ் இதுநாள் வரை கத்தி பேசுவது, பன்ச் அடிப்பது என இருக்க, இதில் நடிப்பில் அசத்தியுள்ளார், பொய்யாக இருந்தாலும் பயத்தை உள்ளே வைத்துக்கொண்டு எஸ் ஜே சூர்யா கம்பீரமாக லாரன்ஸிடம் பேசும் காட்சி அவரும் தன் பங்கிற்கு ஸ்கோர் செய்கிறார்.
கூடிய சீக்கிரம் ஒரு கருப்பு ஹீரோ உங்களை ஓட விடுவாண்டா என ரஜினி சினிமாவில் வந்த வருடத்தில் படம் தொடங்க, ரஜினி அபூர்வ ராகங்கள் எண்ட்ரி ரெபரன்ஸ் என கார்த்திக் சுப்புராஜ் தன் ஸ்டைலை அங்கங்கே பதித்துள்ளார்.
அதிலும் லாரன்ஸிற்கு சீசர் பெயரை வைத்ததே ஹாலிவுட் நடிகர் மற்றும் இயக்குனர் க்ளீண்ட் ஈஸுவட் என்று அதை காட்டிய விதம் சினிமா ரசனையில் சிக்ஸர் அடிக்கிறார் கார்த்திக்.
முதல் பாதி முழுவதும் எஸ்ஜே சூர்யா லாரன்ஸை கொன்றாரா என பரபரப்பாக செல்ல இடைவேளையில் எல்லோரும் ஒரு இடத்தில் மாட்டிக்கொள்ள அங்கு நடக்கும் காட்சிகள் பரபரப்பின் உச்சம்.
அந்த பரபரப்பு இரண்டாம் பாதியில் மலைவாழ் மக்கள், அவர்களின் வாழ்வாதாராம், அரசாங்காத்தால் அவர்களின் வாழ்க்கை எப்படி திசை திரும்புகிறது என கார்த்திக் சுப்புராஜ் வெற்றிமாறன் அவதாரம் எடுக்கிறார்.
அதிலும் திருவின் ஒளிப்பதிவில் காட்டிற்கும் யானைகளை பிடிக்கும் காட்சிகள் எல்லாம் சபாஷ், அதே நேரத்தில் ஜிகர்தண்டா ரசிகர்களுக்கு முதல் பாதி, மக்களுக்கு இரண்டாம் பாதி என்று நினைத்தாலும் ஒரே படத்தில் இரண்டு படங்கள் பார்த்தது போல் ஒரு தோற்றத்தை உருவாக்குகிறது.
சினிமா உலகின் மிகப்பெரும் ஆயுதம், அதை வைத்து எத்தனை ஆட்சியையும் கவுக்கலாம் என்ற கதையை கார்த்திக் சுப்புராஜ் சொல்ல முயற்சித்திருக்கிறார்.
முதல் பாகத்தில் ஒரு கேங்ஸ்டர் மிகப்பெரும் நடிகன் ஆகிறான் என்பது புதுமையாக இருந்தது, இதில் ஒரு கேங்ஸ்டர் மக்கள் நாயகன் ஆகிறான் அதற்கு சினிமா எப்படி உதவுகிறது என்று காட்டியுள்ளார், இதற்கு மிகப்பெரும் உதவியாக சந்தோஷ் நாராயணன் இசை, திரு ஒளிப்பதிவு கைக்கொடுக்கிறது.
க்ளாப்ஸ்
படத்தின் நடிகர், நடிகைகள் பங்களிப்பு, அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
டெக்னிக்கல் விஷயங்கள் அனைத்தும் சூப்பர், குறிப்பாக யானை பிடிக்கும் காட்சிகள்.
இடைவேளை மற்றும் கிளைமேக்ஸ்.
படத்தின் வசனங்கள், நான் கலைஞன் என்னைய ஒன்னும் பண்ண முடியாது, அது தான் நாங்க என எஸ் ஜே சூர்யா சொல்லும் இடம் படத்தின் மொத்த நாதமும் அதில் அடங்கும்.
சின்ன சின்ன சர்ப்ரைஸ், குறிப்பாக போஸ்ட் கிளைமேக்ஸ் தவற விடாதீங்க.
பல்ப்ஸ்
இரண்டாம் பாதி கொஞ்சம் நீளம் தெரிந்தாலும், அவை படத்திற்கு தேவை என்பதால் தவிர்க்க முடியாதவை.
இந்த கதையை கார்த்திக் சுப்புராஜ் ஒரு புது டைட்டிலேயே எடுத்திருக்கலாம், அதற்கு ஜிகர்தண்டா ப்ராண்ட் என்று சில இடங்களில் கேட்க வைக்கிறது.
மொத்ததில் 3 மணி நேரம் சினிமா தானே என சொல்பவர்களுக்கு, அது தான் உங்கள் தலையெழுத்தையே மாற்றுகிறது என்று உரக்க சொல்கிறது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.
You May Like This Video