ஜாலி எல்எல்பி 3: திரை விமர்சனம்
அக்ஷய் குமார், அர்ஷாத் வார்ஷி, ஹியூமா குரேஷி நடிப்பில் வெளியாகியுள்ள ஜாலி எல்எல்பி 3 இந்தி திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே காண்போம்.
கதைக்களம்
ராஜஸ்தானில் பிகானர் டு போஸ்டான் என்ற திட்டத்திற்காக விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. ஆனால் ஊரில் பெரிய மனிதரான ராஜாராம் சோன்ங்கி மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
எனினும், அவர் வாங்கிய கடனுக்காக நிலத்தை கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் கூற, மனமுடைந்த ராஜாராம் தற்கொலை செய்துகொள்கிறார்.
அதன் பின்னர் நீதிக்காகவும், நிலத்தை மீட்கவும் ராஜாராமின் மனைவி ஜான்கி டெல்லிக்கு வந்து வக்கீலான ஜெக்தீஷிடம் உதவி கேட்கிறார்.
ஆனால் அவரோ ஜெக்தீஷ்வர் மிஸ்ராவிடம் (அக்ஷய்குமார்) அனுப்ப, அதன் பின்னர் யார் அவருக்காக வாதாடி நீதியை பெற்றுத்தந்தார்கள் என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
ஜாலி எல்.எல்.பி படவரிசையில் மூன்றாவது பாகமாக இதனை சுபாஷ் கபூர் இயக்கியுள்ளார். ஜாலி என்று ஷார்ட்டாக அழைக்கப்படும் அர்ஷாத்தும், அக்ஷய் குமாரும் மீண்டும் ரகளை செய்துள்ளனர்.
ஆரம்பத்தில் அர்ஷாத்திற்கு வரும் வழக்குகளை எல்லாம் பெயர் குழப்பத்தை பயன்படுத்தி அக்ஷய் குமார் தட்டிப்பறிப்பதும், அதனை வைத்தே அவரை அர்ஷாத் மாட்டிவிடுவதும் என முதல்பாதி காமெடியாகவே தொடங்குகிறது.
ஜான்கி கதாபாத்திரம் வந்த பின்னர் படம் சீரியஸ் ஆனாலும் கடைசிவரை நம்மை சிரிக்க வைக்க மட்டும் இயக்குநர் தவறவில்லை. அதே சமயம் ஆழமான அரசியலையும் பேசியுள்ளார். குறிப்பாக கிளைமேக்சில் பேசப்படும் வசனங்கள் எல்லாம் தீயாய் இருக்கின்றன. கஜ்ராஜ் ராவ் தனது கனவு திட்டத்திற்காக எந்த எல்லை வரைக்கும் செல்கிறார்.
ஒரு கட்டத்தில் அவர் வசமாக மாட்டிக்கொண்டு முழிப்பதிலும், நீதிமன்றத்தில் தரக்குறைவாக பேசுவதிலும் நல்ல நடிப்பை தந்திருக்கிறார். அவரது அட்வகேட்டாக வரும் ராம் கபூர் கிளைமேக்ஸ் காட்சிகளில் பேசும் வசனங்களில் மிரட்டுகிறார்.
ஹியூமா குரேஷி, அம்ரிதா ராவ், சீமா பிஸ்வாஸ் ஆகியோரும் நல்ல நடிப்பை கொடுக்க, படம் முழுக்க ஆக்கிரமிப்பது என்னவோ சௌரப் சுக்லாதான். நீதிபதியாக வரும் அவர் ஷில்பா சுக்லாவுடன் செய்யும் ரொமான்ஸ் எல்லாம் காமெடி களேபரம்தான். என்றாலும் ஒரு காட்சியில் பாரபட்சம் காட்டுகிறீர்களே என்ற கேள்விக்கு அவர் அளிக்கும் விளக்கம் கைத்தட்டலை பெறுகிறது.
சென்சிடிவான பிரச்சனையை மீண்டும் கையில் எடுத்திருக்கும் இயக்குநர், அதனை எல்லா தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படியாக நேர்த்தியாக திரைக்கதை அமைத்திருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்.
க்ளாப்ஸ்
கதை மற்றும் திரைக்கதை, அழுத்தமான வசனங்கள், காமெடி காட்சிகள், கிளைமேக்ஸ்
பல்ப்ஸ்
பெரிதாக ஒன்றுமில்லை