கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த சிறந்த திரைப்படங்கள்
தமிழ் சினிமாவில் சிவாஜிக்கு அடுத்து, நடிப்பு என்று சொல்லால், சிறந்த நடிகர் என்றால் சொன்னால் அதற்கு ஒரே பெயர் கமல் ஹாசன் மட்டும் தான். அந்த அளவிற்கு தனது திரை வாழ்க்கையில் தொடர்ந்து பல சிறந்த படங்களை கொடுத்துள்ளார். இயக்குனராக தலைசிறந்த படைப்புகளை கொடுத்துள்ள கமல் ஹாசன், வேறு இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து வெளிவந்த சிறந்த திரைப்படங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம் வாங்க..
நாயகன்
மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து வெளிவந்த திரைப்படம் நாயகன். கேங்ஸ்டர் கதைக்களத்தில் வெளிவந்த இப்படத்தில் வேலு நாயக்கர் எனும் கதாபாத்திரத்தில் மூன்று பரிணாமத்தில் நடித்து அசத்தியிருந்தார் கமல். இப்படத்தில் கமல் ஹாசனுடன் இணைந்து சரண்யா பொன்வண்ணன், ஜனகராஜ், டெல்லி கணேஷ், உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஹாலிவுட் திரையுலகில் வெளிவந்த காட் பாதர் படத்தின் தழுவலாக உருவாகி வெளிவந்த திரைப்படமே நாயகன் ஆகும். கேங்ஸ்டர் வேலு நாயக்கரின் கதாபாத்திரத்தில் இளம் வாலிபன், காதல் கணவன், பொறுப்பான தந்தை, உணர்வுபூர்வமான தாத்தா என்ற பல பரிணாமத்தில் நடித்து மிரட்டியிருந்தார் கமல். இப்படத்தில் நடித்ததற்காக கமல் ஹாசனுக்கு தேசிய விருதும் கிடைத்தது.

இந்தியன்
ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் கடந்த 1996ல் வெளிவந்த திரைப்படம் இந்தியன். கமலின் இரட்டை கதாபாத்திரங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. குறிப்பாக சேனாதிபதியின் கதாபாத்திரத்தின் தாக்கம் இன்றும் பலருடைய மனதில் இருக்கிறது. இந்திய சினிமாவில் முதல் முறையாக இப்படத்தில் தான், ப்ராஸ்தேட்டிக் மேக்கப் பயன்படுத்தப்பட்டது. மேலும் இப்படத்திற்காக தேசிய விருதை தட்டி சென்றார் கமல். இப்படத்தில் கமல் ஹாசனுடன் இணைந்து சுகன்யா, மனிஷா கோரியலா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். படத்தில் இடம்பெற்ற பல காட்சியில் கமல் ஹாசன் நடித்திருப்பார் என்று சொல்வதை விட, வாழ்ந்திருப்பார் என்று தான் சொல்லவேண்டும். குறிப்பாக லஞ்சம் வாங்கிக்கொண்டு, பல உயிர்கள் இறக்க காரணமாகும் தனது மகனை கொலைசெய்யும் காட்சியில் வாழ்ந்திருப்பார் நடிகர் கமல் ஹாசன்.

மகாநதி
சந்தானபாரதி இயக்கத்தில் குடும்ப கதைக்களத்தில் கமல் ஹாசனை வேறொரு பரிணாமத்தில் காட்டிய திரைப்படம் மகாநதி. சூழ்ச்சியில் சிக்கும் கமல் ஹாசன் சிறைக்கு செலிரார். தனது மகளையும் தொலைத்துவிடுகிறார். அதன்பின் சிறையில் இருந்து வெளியே வரும் கிருஷ்ணா { கமல் ஹாசன் } பல ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு, விபச்சார விடுதியில் இருந்து தனது மகளை மீட்டு கொண்டு வரும் காட்சி, கல் நெஞ்ச காரர்களையும் கண்கலங்க வைத்துவிடும். அந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்திய கமல் ஹாசனின் திரைப்படங்களில் ஒன்றாகும் மகாநதி.

அன்பே சிவம்
அன்பு - மாதவன் / சிவம் - கமல் ஹாசன் இவ்விருவரின் சந்திப்பில் இருந்து துவங்கும் பயணமே அன்பே சிவம். உதவு மனசு உள்ளவர் தான் கடவுள் என்று கூறும் கம்யூனிஸ்ட் சிவம் ஒரு புறமும். அன்பு வேண்டாம் சார், என்று கடவுளை நம்பும் மாதவன் மறுபுறமும் ஒடிசாவில் இருந்து சென்னை செல்லும் பயணத்தை அழகாக காட்டியிருப்பார் இயக்குனர் சுந்தர். சி. இப்படம் வெளியான சமயத்தில் பெரிதும் வெற்றியடையவில்லை என்றாலும், தற்போது ரசிகர்கள் மனதில் கல்ட் இடத்தை பிடித்துள்ளது. சிவம் கதாபாத்திரத்தில் கமல் ஹாசன் நடித்திருக்கும் ஒவ்வொரு காட்சியும் நகைச்சுவையாகவும், உணர்வுபூர்வமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

16 வயதினிலே
பாரதிராஜாவின் அறிமுக இயக்கத்தில் கமல் ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடித்து வெளிவந்த திரைப்படம் 16 வயதினிலே. இதில் சப்பாணி எனும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்த கமல் ஹாசனுக்கு அப்போது குவித்த பாராட்டுகளே இல்லை. அந்த அளவிற்கு சப்பாணி கதாபாத்திரத்தினால் கமல் ஹாசனுக்கு பல பாராட்டுக்கள் ரசிகர்கள் மத்தியில் திரையுலக பிரபலங்கள் மத்தியிலும் குவிந்தது. விவரம் அறியாமல் சப்பாணி செய்யும் சிறு சிறு விஷயங்களை அழகாக நடித்து, நமக்கு காட்டியிருப்பார் கமல்.

உத்தம வில்லன்
இன்னும் சில மாதங்களில் இறந்துவிடுவேண் என்று தெரிந்துகொள்ளும், மனோரஞ்சன் { கமல் ஹாசன் } தனது கடைசி ஆசையையும், தனது சொந்தங்களை விட்டு பிரியவுள்ள சூழ்நிலைகளையும் அழகாக எடுத்துக்காட்டிய திரைப்படம் உத்தமவில்லை. வித்தியாசனமாக அமைக்கப்பட்டிருந்த இப்படத்தை கமல் ஹாசனின் நெருங்கிய நண்பர் ரமேஷ் அரவிந்த் இயக்கியிருந்தார். படத்தின் கிளைமாக்ஸ், சாகும் தருவாயில் கமல் ஹாசன் நடித்த நடிப்பு தமிழ் சினிமாவில் இதற்குமுன் யாரும் நடித்ததில்லை என்று தான் சொல்லவேண்டும்.நகைச்சுவை கலந்த, கண்ணீர் கதைக்களத்தில் உருவாகி இருந்த இப்படம் பெரிதளவில் ரசிகர்களால் கொண்டாடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் கமல் ஹாசனுடன் இணைந்து ஆண்ட்ரியா, பார்வதி, கே.பாலச்சந்தர், ஊர்வசி, ஜெயராம், பூஜா குமார், நாசர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

அபூர்வ சகோதரர்கள்
1989ஆம் ஆண்டு வெளிவந்த அபூர்வ சகோதரர்கள் படத்தை சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கியிருந்தார். இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார் கமல் ஹாசன். குறிப்பாக குள்ளமாக அவர் நடித்திருந்த அப்பு கதாபாத்திரம் இன்றும் பல ரசிகர்களின் மனதில் இருந்து நீங்க இடத்தை பிடித்துள்ளது. தனது தந்தையை கொலை செய்தவர்களை அப்பு பழிவாங்கும் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் கமல் ஹாசனுடன் இணைந்து ஸ்ரீவித்யா, கௌதமி, மௌலி, நாகேஷ், ஜனகராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேல வரிசைப்படுத்தப்பட்டிருக்கும் இந்த 7 திரைப்படங்கள் மட்டுமின்றி, கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த பலப்பல திரைப்படம் சிறந்த ஒன்று தான், என்பது குறிப்பிடத்தக்கது.
பீஸ்ட் - குர்கா காப்பி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் நெல்சன் !