கருப்பு திரை விமர்சனம்
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி பெரிய எதிர்பார்ப்புடன் இன்று வெளிவந்துள்ள திரைப்படம் கருப்பு. பல தடைகளை தாண்டி வெளியாகியிருக்கும் இப்படம் எப்படி உள்ளது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.

கதைக்களம்
கேரளாவில் இருந்து தனது மகளின் ஆபரேஷனுக்காக தமிழ்நாடு வருகிறார் இந்திரன்ஸ். வந்த இடத்தில் அவர்களுடைய நகையை திருடர்கள் கொள்ளையடித்து விட்டு செல்ல, பின் அதனை போலீஸ் கண்டுபிடித்து கொடுக்கிறார்கள். ஆனால், 60 பவுன் தங்க நகைக்கு பதிலாக 45 பவுன் மட்டுமே திரும்ப தரப்படுகிறது. மேலும், இந்த நகையை இப்போது தரமுடியாது, நீதிமன்றத்தின் மூலமாகதான் உங்களால் பெற்றுக்கொள்ள முடியும் என அங்கிருக்கும் கான்ஸ்டேபிள் கூறுகிறார்.

இவர்களுடைய இந்த வழக்கை ஆர்.ஜே. பாலாஜி எடுத்து நடத்துகிறார். ஆனால், சுலபமாக முடிய வேண்டிய ஒரு வழக்கை வேண்டுமென்றே இழுத்தடித்து இந்திரன்ஸிடம் இருந்து ஃபீஸ் வாங்கி கொண்டு இருக்கிறார் பாலாஜி. இந்த வழக்கு 4 மாதங்களுக்கு மேல் இழுத்துக்கொண்டே போக ஒரு கட்டத்தில் பாலாஜியால் நமக்கு நீதி கிடைக்காது என தெரிந்துகொள்கிறார். இதன்பின் இந்திரன்ஸை அடித்து இனி இந்த வழக்கை நீ எப்படி நடத்துற என்று பார்க்கிறேன் என சவால் விடுகிறார் பாலாஜி.
இந்த நேரத்தில் நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள கருப்பு சாமியிடம் இந்திரன்ஸ் தனது வேதனையை கூறி, என் பிரச்சனையை தீர்த்துவை என மிளகாய் அரைத்து கருப்பு சாமிக்கு பூசுகிறார். பக்தரின் வேண்டுதலை ஏற்று வேட்டை கருப்பாக என்ட்ரி கொடுக்கிறார் சூர்யா. வந்தவுடன் ஆர்.ஜே. பாலாஜிக்கு தண்டனை தருகிறார். அப்போது, பாலாஜி சாதுர்யமாக பேசி, 'என்னை கொல்வது எப்படி சரியாகும், நீங்கள் வேண்டுமென்றால் எங்களுடைய நீதிமன்றத்தை மாற்றி காட்டுங்கள்' என சவால் விடுகிறார்.
சவாலை ஏற்று நீதிமன்றத்தை சீரமைக்க மனிதனாக வருகிறார் கருப்பு சாமி. இந்த சவாலில் கருப்பு சாமி வெற்றி பெற்றாரா? இல்லை, கருப்பு கோட் போட்ட ஆசாமி வெற்றிப் பெற்றார்களா? நீதி கேட்டு வந்தவர்களுக்கு நீதி கிடைத்ததா? இல்லை, தவறு செய்தவர்களுக்கு நீதி விற்கப்பட்டதா? என்பதே படத்தின் மீதி கதை.
படத்தை பற்றிய அலசல்
கருப்பாக என்ட்ரி கொடுத்து திரையரங்கை திருவிழா கோலமாக மாற்றிவிட்டார் கதாநாயகன் சூர்யா. பல நாட்களுக்கு பின் அன்பான Fans-க்கு கருப்பு செம விருந்தாக அமைந்துள்ளது. எமோஷனல், சண்டை, ஸ்டைல், சர்ப்ரைஸ் என்ட்ரிஸ் என மிரட்டி விட்டார் நடிகர் சூர்யா. பல ஆண்டுகளுக்கு பின் பக்கா மாஸ் கமர்ஷியல் ஹீரோவாக திரையில் ஜொலித்துள்ளார்.

சூர்யாவுக்கு அடுத்து படத்தின் மற்றொரு ஹீரோ என்றால் அது நடிகர் இந்திரன்ஸ் தான். மனுஷன் கண்கலங்கும் போது நம் மனதிலேயே வலி ஏற்படுகிறது. குறிப்பாக மகளை சமாதானம் செய்து உறங்க வைக்கும் காட்சி, மகள் இறந்தபின் நீதிமன்றத்தில் அவர் நடிக்கும் காட்சி ஆகியவற்றில் பட்டையை கிளப்பியுள்ளார். இதுவரை மலையாள திரையுலகில் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்ட நடிகர் இந்திரன்ஸ் கருப்பு படத்திற்கு பின் தமிழில் ஒரு ரவுண்ட் வரப்போகிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மேலும் த்ரிஷா, அனகா, ஷிவதா, நட்டி நட்ராஜ் உட்பட அனைவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.

இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்குநராக சூர்யா ரசிகர்களுக்கு மட்டுமின்றி சாமானிய சினிமா ரசிகர்களுக்கு சிறப்பான விருந்தை வழங்கியுள்ளார். ஆங்காங்கே தொய்வு, சில டெக்னிக்கல் தவறுகள், லாஜிக் மிஸ்டேக் ஆகியவை இருந்தாலும், இரண்டரை மணி நேரம் நம்மை நன்றாக என்டர்டைன் செய்துள்ளார்; அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒவ்வொரு காட்சிகளையும் நாம் ரசிக்கும்படி வடிவமைத்துள்ளார். குறிப்பாக இடைவேளைக்கு பின் வரும் ஒவ்வொரு காட்சியும் வெறித்தனம் வெறித்தனம் தான்.
ஏகப்பட்ட Reference படத்தில் உள்ளது. அவை யாவும் திரைக்கதையை எந்த வகையிலும் கெடுக்கவில்லை என்பதால் அது நமக்கு சலிப்பை ஏற்படுத்தவில்லை. திரைக்கதையை தாண்டி வசனங்கள் சிறப்பாக இருந்தன. 30 வருடத்திற்கு முன் நீதிமன்றத்திற்கு நீதி கேட்டு வந்தவருக்கு 30 வருடங்கள் ஆகியும் நீதி கிடைக்காமல் இருக்கும். அவர் அந்த நீதிமன்றத்திலேயே எடுபிடி வேலை செய்பவராக மாறிவிடுவார். அவரை யாரும் மதிக்கவும் மாட்டார்கள். அந்த கதாபாத்திரம் "நீதிமன்றத்திற்கு வந்தால் தண்டனை கிடைத்துவிடும் என நம்புகிறோம், ஆனால் நீதிமன்றத்திற்கு வருவதே தண்டனைதான்" என சொல்லும் வசனங்கள் யதார்த்தத்தை பேசுகின்றன.

இயக்குநராக மட்டுமின்றி நடிகராக இப்படத்தில் களமிறங்கியுள்ளார் ஆர்.ஜே. பாலாஜி. கத்தியை பயன்படுத்தி வில்லத்தனம் செய்யாமல் புத்தியை பயன்படுத்தி வில்லத்தனம் செய்த பாலாஜியின் கதாபாத்திரம் ரசிக்கும்படியாக இருந்தது. ஆனால், இன்னும் சற்று வில்லத்தனத்தை பலமாக காட்டியிருக்கலாமோ என்றும் சில இடங்களில் தோன்றியது.
அதே போல், கருப்பு என்ட்ரி தரும் போது அவருடைய இடத்தை காட்டியிருப்பார்கள். அது எதோ நரகத்தை போன்ற தோற்றத்தில் இருக்கும். கருப்பு சாமி நரகத்தில் இருப்பவரை போல் காட்சியமைத்த விதம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. ஒரு வேலை அது தவறு செய்பவர்களுக்கு தண்டனை தரும் இடம் என்று இயக்குநர் அப்படி காட்சி அமைத்து காட்டியிருந்தால் ஓகே.

படத்தின் மிகப்பெரிய பலம் இசை மற்றும் ஒளிப்பதிவு. சாய் அப்யங்கர் படத்திற்கு முரட்டு எலிவேஷன் தனது பின்னணி இசையால் கொடுத்துள்ளார். குறிப்பாக கருப்பு வரும் காட்சிகளில் பின்னணி இசை திரையரங்கை தெறிக்கவிட்டு விட்டது. அதற்கு துணையாக ஒளிப்பதிவாளர் ஜி.கே. விஷ்ணுவின் மிரட்டலான ஒளிப்பதிவு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், எடிட்டிங் இன்னும் சற்று நிதானமாக சண்டை காட்சிகளை கையாண்டு இருக்கலாம்.
பிளஸ் பாயிண்ட்ஸ்
படம் முழுக்க வேட்டை கருப்பாக சூர்யா ஆடிய ஆட்டம்
இந்திரன்ஸ், ஆர். ஜே. பாலாஜி, த்ரிஷா
பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு
தியேட்டர் மூவ்மென்ட்ஸ், Reference காட்சிகள்
சண்டை காட்சிகள்
கிளைமாக்ஸ் கருப்பு ஆட்டம்
மைனஸ் பாயிண்ட்ஸ்
ஆங்காங்கே ஏற்பட்ட தொய்வு; அதை தவிர பெரிதாக குறை ஒன்றுமில்லை.
மொத்தத்தில் இந்த கருப்பு அன்பான Fans-க்கு மட்டுமின்றி, சாமானிய சினிமா ரசிகர்களுக்கும் சிறப்பான விருந்துதான். சூர்யாவின் மாஸ் கம்பேக்...
