கொலை திரைவிமர்சனம்
Infiniti Film Ventures மற்றும் Lotus Pictures இணைந்து தயாரித்து பாலாஜி கே. குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் கொலை. இன்வெஸ்டிகேஷன் திரில்லர் கதைக்களம் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை உண்டாக்கி இருந்தது.
படத்தின் First லுக் முதல் டிரைலர் வரை அனைத்து விஷயங்களும் ரசிகர்களை கவர்ந்தது. அதே போல் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் கதைக்களத்தில் எப்படி நடித்திருக்கிறார் என்று பார்க்கவும் ஆவலுடன் காத்திருந்தனர். இப்படி பல எதிர்பார்ப்பை கொண்டிருந்த கொலை ரசிகர்களை முழுமையாக பூர்த்தி செய்ததா இல்லையா விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க..
கதைக்களம்
மிகவும் பிரபலமான மாடலாக இருக்கும் லைலா {மீனாட்சி சௌத்ரி} தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். இந்த கேஸ் காவல்துறை அதிகாரியான ரித்திகா சிங்கிடம் செல்கிறது. ஒரு வாரத்திற்குள் இந்த கேஸை முடிக்க வேண்டும் என மேலதிகாரிகளால் கெடு கொடுக்கப்படுகிறது.
இந்த சமயத்தில் விஜய் ஆண்டனியின் உதவியை நாடுகிறார் ரித்திகா. ஆனால், முதலில் இந்த கேஸை எடுத்துக்கொள்ள மாட்டேன் என கூறும் விஜய் ஆண்டனி பின், சில காரணங்களால் முழு மூச்சுடன் இந்த கேஸை ரித்திகாவுடன் இணைந்து விசாரிக்க துவங்குகிறார்.
விஜய் ஆண்டனி விசாரணையில் யார் யாரெல்லாம் சிக்கினார்கள், கொலையாளியை கண்டு பிடித்தாரா விஜய் ஆண்டனி, ஏன்? எதற்காக லைலா கொலை செய்யப்பட்டார் என்பதே படத்தின் மீதி கதை..
படத்தை பற்றிய அலசல்
கதாநாயகன் விஜய் ஆண்டனி இப்படத்தின் மூலம் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். ஆனால், அவருடைய நடிப்பு பெரிதும் கவரவில்லை. ரித்திகா சிங் நடிப்பு ஓரளவு பரவாயில்லை. அறிமுக நாயகி மீனாட்சி சௌத்ரியின் நடிப்பு ஓகே.
ராதிகா சரத்குமார் எதற்காக இப்படத்தில் நடித்துள்ளார் என தெரியவில்லை. எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அனைவரையும் தாண்டி தனது நடிப்பில் மிரட்டும் ராதிகாவிற்கு இப்படத்தில் சுத்தமாக ஸ்கோப் இல்லை. முரளி ஷர்மா தனக்கு கொடுத்ததை செய்துள்ளார். மற்றபடி நடிப்பில் யாரும் ஸ்கோர் செய்யவில்லை.
இயக்குனர் பாலாஜி கே. குமார் எடுத்துக்கொண்ட கதைக்களம் சுவாரஸ்யமாக இருந்தாலும், அதை வடிவமைத்து திரைக்கதையாக கொடுத்த விதம் ஏமாற்றமே. மெதுவாக செல்லும் திரைக்கதை சலிப்பை ஏற்படுத்துகிறது.
க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படம் என்றாலே அடுத்தது என்ன அடுத்தது என்ன என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் சீட்டின் நுனியில் அமர்ந்து பார்ப்பது தான். ஆனால், இப்படத்தில் அடுத்தது இது தான் நடக்கப்போகிறது என எளிதில் கணிக்க முடிகிறது. இதுவே படத்தின் மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட். குறிப்பிட்ட சில ஆடியன்ஸ் இப்படம் ஓகே என கூறினாலும், வெகுஜன மக்களுக்கு எந்த அளவுக்கு போய் சேரும் என்பது கேள்வி தான்.
நடிகர்களின் நடிப்பு, திரைக்கதை, இயக்கம் இவை அனைத்தும் ஏமாற்றத்தை கொடுத்தாலும், ஒளிப்பதிவாளரின் விஷ்வல்ஸ் அருமையாக இருக்கிறது. அதற்கு பாராட்டுக்கள். மேலும், படத்திற்காக போடப்பட்டுள்ள செட் சூப்பர். மேலும் பின்னணி இசை பட்டையை கிளப்புகிறது. ஆனால், எடிட்டிங் இன்னும் கூட நன்றாக இருந்து இருக்கலாம்.
நிறை
ஒளிப்பதிவு
பின்னணி இசை செட் ஒர்க்
குறை
திரைக்கதை
அடுத்து இதுதான் நடக்கப் போகிறது என எளிதில் கணிக்க முடிகிறது
நடிகர், நடிகைகளின் நடிப்பு
மொத்தத்தில் கொலை ஏமாற்றம்
பட்டய கிளப்பி வரும் சிவகார்த்திகேயனின் மாவீரன் பட இதுவரையிலான வசூல் விவரம்