லவ் டுடே திரைவிமர்சனம்
கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இவருடைய இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லவ் டுடே. இயக்குனராக மட்டுமல்லாமல் லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாகவும் வெள்ளித்திரையில் அறிமுகமாகியுள்ளார் பிரதீப் ரங்கநாதன்.
இளைஞர்களை கவர்ந்த லவ் டுடே படத்தின் ட்ரைலர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை அனைவரின் மத்தியிலும் உண்டாக்கியது. கோமாளி படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளிவரும் படம் என்பதாலும், அவர் மீது அதீத எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருந்தனர். அத்தகைய எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்ததா? இல்லையா? வாங்க விமர்சனத்தில் பார்ப்போம்.
கதைக்களம்
உத்தமன் பிரதீப் { பிரதீப் ரங்கநாதன் } நிகிதா சாஸ்திரி { இவானா } இருவரும் காதலிக்கிறார்கள். இருவரும் இருவரை பற்றியும் முழுமையாக தெரியும் என்ற எண்ணத்தில் நெருக்கமாக பழகி வரும் நிலையில் கதாநாயகன் பிரதீப்பின் அக்கா திவ்யாவிற்கு { ரவீனா }, யோகி பாபுவுடன் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது.
ஒரு புறம் பிரதீப்பின் காதல் சென்றுகொண்டிருக்க மறுபுறம், திவ்யாவின் திருமண ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில் பிரதீப் - நிகிதாவின் காதல் விஷயம், நிகிதாவின் தந்தை வேணு சாஸ்திரி { சத்யராஜ் } தெரியவர, பிரதீப்பை தனது வீட்டிற்கு அழைத்து பேசுகிறார்.
இந்த பேச்சு வார்த்தையில், பிரதீப்பின் செல் போனை, நிகிதாவிடமும், நிகிதாவின் செல் போனை பிரதீப்பிடமும் கொடுக்க சொல்கிறார். முதலில் இருவரும் தயங்கினாலும், வேறு வழியே இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் தங்களுடைய போன்களை மாற்றிக்கொள்கிறார்கள். சில மணி நேரம் செல்ல நிகிதாவின் செல் போனை ஓபன் செய்து பார்க்கும் பிரதீப் அதிர்ச்சியடைகிறார். அதே போல், பிரதீப்பின் செல் போனை ஓபன் செய்யும் நிகிதாவும் அதிர்ச்சியில் கோபத்தின் உச்சிக்கே செல்கிறார்.
ஒருவரை பற்றி ஒருவருக்கு முழுமையாக தெரியும் என்று நம்பிக்கொண்டிருந்த இருவரும், செல் போனில் உள்ள விஷயங்களை பார்த்தவுடன் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி திட்டிக்கொள்கிறார்கள். கடைசியில் பிரிவின் எல்லையில் இருக்கும் இருவரும் எடுத்த முடிவு என்ன? அதற்குள் வேறு என்னென்னவெல்லாம் நடந்தது? என்பதே படத்தின் மீதி கதை..
படத்தை பற்றிய அலசல்
வெள்ளித்திரையில் அறிமுகமாக இருந்தாலும் நடிப்பில் அசத்திவிட்டார் பிரதீப் ரங்கநாதன். இளைஞர்களுக்கு எப்படி நடித்தால் பிடிக்கும், அவர்களை நடிப்பினால் எப்படி கவரவேண்டும் என்பதை அழகாக புரிந்து வைத்துள்ளார். கதாநாயகியாக வரும் இவானாவின் நடிப்பு பிரமாதம். வலுவான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.
ராதிகா சரத்குமாரின் அனுபவ நடிப்பு படத்தை தாங்கி நிற்கிறது. அதுவும் கிளைமாக்ஸ் வசனம் சூப்பர். கதைக்கு வேண்டிய இடத்தில் தோன்றும் சத்யராஜின் நடிப்பு கைதட்டல்களை அள்ளுகிறது. திவ்யா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரவீனா அசத்திவிட்டார்.
நகைச்சுவைக்காக இல்லாமல், கதாபாத்திரமாக படம் முழுவதும் பயணிக்கும் யோகி பாபு ஒவ்வொரு காட்சியிலும் ஸ்கோர் செய்கிறார். ஆஜீத் தனது கொடுத்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாக நடித்திருந்தார். முக்கியமாக பிரதீப்பின் நண்பர்களாக வந்த கதிர், பாரத் ஆகிய இருவருக்கும் தனி பாராட்டு.
இயக்கத்தில் பட்டையை கிளப்பியுள்ள பிரதீப் ரங்கநாதன், திரைக்கதையை வெறித்தனமாக செதுக்கியுள்ளார். துவக்கத்தில் இருந்து இறுதி வரை துளி கூட Lag இல்லாமல் வடிவமைத்துள்ளார். இளைஞர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் ரசிக்கும் வண்ணம் படத்தை உருவாக்கியதற்கு இயக்குனருக்கு தனி பாராட்டு.
யுவனின் பாடல்களும், பின்னணி இசையும் செம மாஸ். படத்தை தாங்கி நிற்கிறார் U1. தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு அட்டகாசம். Lag இல்லமால் செய்துள்ள எடிட்டிங் பக்கா, வேற லெவல்..
பிளஸ் பாயிண்ட்
பிரதீப் ரங்காநாதன், இவானா நடிப்பு
நகைச்சுவை காட்சிகள்
ராதிகா சரத்குமார், சத்யராஜ் நடிப்பு
யுவன் பாடல்கள், பின்னணி இசை
எடிட்டிங், ஒளிப்பதிவு
இந்த காலத்து இளைஞர்களை கவரும் வண்ணம் அமைத்திருந்த இயக்கம்
Lag இல்லாத திரைக்கதை
கிளைமாக்ஸ் காட்சி
மைனஸ் பாயிண்ட்
பெரிதாக ஒன்றுமில்லை
மொத்தத்தில் நகைச்சுவைக்காக மட்டுமல்லாமல் உறவுகளுக்குள் நம்பிக்கை முக்கியம் என்று கூறும் லவ் டுடே, சிறப்பு..