மாமன் திரைவிமர்சனம்
சூரி - ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் மாமன். இப்படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.
கதைக்களம்
சூரியின் அக்கா ஸ்வாசிகா திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் கர்ப்பம் ஆகாமல் இருக்கிறார். இதனால் ஊரில் அனைவரும் அவரை குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இப்படி ஒரு சூழலில் முதல் முறையாக கர்ப்பம் ஆகும் ஸ்வாசிகாவிற்கு ஆண் குழந்தை பிறக்கிறது.
தனக்கு மருமகன் பிறந்துவிட்டான் என்கிற மகிழ்ச்சியில் தனது ஒட்டுமொத்த அன்பையும் அவனுக்கே தருகிறார் சூரி. காலை எழுந்து அவனை குளிப்பாட்டி, பள்ளிக்கு அனுப்புவதில் இருந்து இரவு தன்னுடன் தூங்க வைப்பது வரை, பெற்றோர்கள் செய்ய வேண்டிய அனைத்தும் சூரியே செய்கிறார்.
இதனால் அவன் ஒரு நிமிடம் கூட தனது மாமனை விட்டு பிரிய மாட்டேன் என்கிற முடிவுடன் இருக்கிறான். இந்த நிலையில், சூரிக்கும் ஐஸ்வர்யா லட்சுமிக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு பின்பும் சூரியை விட்டு அவரது மருமகன் சிறுது நேரம் கூட பிரியாமல் இருக்கிறான்.
முதலில் இதை பெரிதாக ஐஸ்வர்யா எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், நாட்கள் போகப்போக இது பெரிய பிரச்சனையாக வெடிக்கிறது. இதனால் சூரிக்கும் ஐஸ்வர்யாவிற்கு கடும் சண்டை ஏற்பட, ஒரு கட்டத்தில் குடும்பத்தில் இருந்து பிரிய முடிவு எடுக்கின்றனர். இதனால் உறவுகள் இடையே விரிசல் விழ, மீண்டும் அந்த உறவுகள் இணைந்ததா என்பதே படத்தின் மீதி கதை.
படத்தை பற்றிய அலசல்
கதாநாயகன் சூரி மிகவும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அக்காவுக்கு தம்பியாக, மருமகனுக்கு மாமனாக, மனைவிக்கு கணவனாக பாச போராட்டத்திற்கு இடையே எப்படி ஒரு ஆண் இருப்பான் என்பதை சிறப்பாக தனது நடிப்பில் காட்டியுள்ளார்.
அதே போல் கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் அக்காவாக நடித்து ஸ்வாசிகா இருவரின் நடிப்பும் படத்திற்கு மிகப்பெரிய பலம். தங்களுக்கு கிடைத்த ஒவ்வொரு காட்சியிலும் இருவரும் ஸ்கோர் செய்கிறார்கள். குறிப்பாக எமோஷனல் காட்சிகளில் வேற லெவலில் நடித்துள்ளனர்.
சூரியின் மருமகனாக நடித்த சிறுவனின் நடிப்பும் சிறப்பு. இவர்களை தவிர்த்து ராஜ்கிரண், விஜி சந்திரசேகர் இருவரின் கதாபாத்திரங்களும் அழகாக இருந்தது. அவர்கள் இருவரின் கதாபாத்திரங்களை, சூரி - ஐஸ்வர்யா லட்சுமி கதாபாத்திரங்களுடன் இணைத்த விதம் ரசிக்க வைத்தது.
மேலும் பாபா பாஸ்கரின் நடிப்பும் நன்றாக இருந்தது. மற்ற நடிகர்கள், நடிகைகள் அனைவரும் தங்களுடைய பங்கை சிறப்பாக செய்துள்ளனர். இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இப்படத்தின் எமோஷனல் காட்சிகளை திரைக்கதையில் அமைத்த விதம் சிறப்பு.
ஆனால், படம் முழுக்க எமோஷனல் காட்சிகள் மட்டுமே நிறைந்திருந்தது சற்று தொய்வு ஏற்படுத்துகிறது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், எமோஷனல் காட்சிகள் தான் இப்படத்திற்கு பலம் என்றாலும், அதே சமயம் அதுவே தான் பலவீனமாகவும் தெரிகிறது.
அனைவருக்கும் கனெக்ட் ஆகுமா என கேட்டால், அது சந்தேகம் தான். குறிப்பாக இந்த காலத்து 2k கிட்ஸுக்கு இது எந்த அளவிற்கு கனெக்ட் ஆகும் என தெரியவில்லை. மற்றபடி படத்தில் குறை என பெரிதாக ஒன்றுமில்லை.
எடுத்துக்கொண்ட கதைக்களத்தை திரைக்கதையில் எமோஷனலாக வடிவமைத்து திரையில் அழகாக வழங்கியுள்ளார் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ். மேலும் கதாபாத்திரங்களை வடிவமைத்த விதமும் ரசிக்கும்படியாக இருந்தது. ஒளிப்பதிவு அழகு, பின்னணி இசையும் பாடல்களும் படத்தோடு ஒன்றி போகிறது. எடிட்டிங் சிறப்பு.
பிளஸ் பாயிண்ட்
சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்வாசிகா நடிப்பு
எமோஷனல் காட்சிகள்
கதைக்களம்
மைனஸ் பாயிண்ட்
சில இடங்களில் ஏற்பட்ட தொய்வு
மொத்தத்தில் மாமன் ஒரு எமோஷனல் ரைடு(Ride).

Brain Teaser Maths: கணக்கு புலிகளுக்கே சவால் விட்ட புதிர்... உங்களால் தீர்க்க முடியுமா பாருங்கள்? Manithan
