மாமன்னன் திரைவிமர்சனம்
சமூக நீதியை தனது படங்கள் மூலம் தொடர்ந்து பேசி வருபவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இவருடைய அடுத்த படைப்பாக மாமன்னன் இன்று வெளிவந்துள்ளது. உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபகத் ஃபாசில், லால் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்தின் இசையமைத்துள்ளார். இப்படம் உதயநிதியின் கடைசி திரைப்படம் என்பதினால், இவ்வளவு பெரிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளதால் மட்டுமல்லாமல், மாரி செல்வராஜ் மாமன்னனை வைத்து பேசிய சமூக நீதியை பார்க்கும் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர். அப்பேற்பட்ட எதிர்பார்ப்பை மாமன்னன் முழுமையாக பூர்த்தி செய்தாரா இல்லையா என்பதை விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க..
கதைக்களம்
காசிபுரம் என்ற ஊரின் MLA-வாக இருக்கிறார் மாமன்னன் {வடிவேலு}. இவருடைய மகன் தான் அதிவீரன் {உதயநிதி}. இவர் அடிமுறை கற்றுக் கொடுக்கும் ஆசான் ஆவார். சிறு வயதில் தனது வாழ்க்கையில் மறக்க முடியாத அளவிற்கு ஏற்பட்ட சம்பவத்தின் காரணமாக தனது தந்தையிடம் 15 வருடங்களாக உதயநிதி பேசாமல் இருக்கிறார்.
வடிவேலுவின் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நபராகவும், கதையின் வில்லனாகவும் என்ட்ரி கொடுக்கிறார் பகத் பாசில். தனக்கு மேல் உள்ளவர்களிடமும், தனக்கு சமமாக உள்ளவர்களிடமும் தோற்றுப் போனாலும் பரவாயில்லை, ஆனால், தனக்கு கீழ் உள்ளவர்களிடம் தோற்றுப்போய் அவமானப்பட கூடாது எனும் எண்ணத்தை பகத் பாசில் மனதில் அவருடைய தந்தை விதைத்து விடுகிறார்.
அதற்கு ஏற்றார் போல் தான் தனக்கு கீழ் உள்ளவர்களை அவர் நடத்துகிறார். அதில் MLA-வாக இருக்கும் வடிவேலுவும் ஒருவர். இந்த சமயத்தில் உதயநிதியுடன் கல்லூரியில் ஒன்றாக படித்த லீலா {கீர்த்தி சுரேஷ்} தான் இலவசமாக நடத்தி வரும் கல்வி மையத்தை நிறுத்தும்படி மிரட்டல் வருகிறது. முதலில் மிரட்டல் வந்த நிலையில், அடிமுறை பயிற்சி கற்றுக் கொடுக்கும் இடத்திற்கு கல்வி மையத்தை இடம் மாற்றுகிறார்.
எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை என்பதினால் அடியாட்களை வைத்து அடிமுறை பயிற்சி இடத்தை அடித்து உடைக்கிறார்கள். இது செய்தது காசுக்காக கல்வி மையத்தை வைத்து நடத்தும் சுந்தரம் என தெரிந்துகொண்டு, சுந்தரத்தின் கல்வி மையத்தை அடித்து உடைக்கிறார் உதயநிதி. ஃபகத் ஃபாசிலின் அண்ணன் சுந்தரத்தின் கல்வி மையம் தான் அது. இதன்பின் என்ன நடந்தது? ஃபகத் ஃபாசில் என்ன செய்தார்? வடிவேலு, உதயநிதி சந்தித்த எதிர்ப்புகள் என்னென்ன? என்பதே படத்தின் மீதி கதை..
படத்தை பற்றிய அலசல்
மாமன்னனாக வரும் வடிவேலு மொத்த படத்தையும் தனது தோளில் தாங்கி நிற்கிறார். அவருக்கு எந்த வகையிலும் குறையே இல்லாத அளவிற்கு சிறப்பாக நடித்துள்ளார் ஃபகத் ஃபாசில். இருவருமே போட்டி போட்டு நடித்து உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இதுவரை நாம் நகைச்சுவையாக பார்த்த வடிவேலு முற்றிலும் மாறி வேறொரு பரிமாணத்தில் நடித்து நம்மை வியக்க வைத்துள்ளார்.
சில இடங்கள் அவர் சீரியஸாக பேசும் போது அவருடைய பழைய நகைச்சுவை காட்சிகள் கண்முன்னே வருகிறது. அதை தவிர்க்க முடியவில்லை. அதிவீரன் கதாபாத்திரத்திற்காக இதுவரை இல்லாத அளவிற்கு மெனக்கெட்டு நடித்துள்ளார். அதற்காக தனி பாராட்டுக்கள். கீர்த்தி சுரேஷ் நடிப்பு சிறப்பாக இருந்தது. மற்றபடி, லால், அழகம் பெருமாள், கீதா கைலாசம் ரவீனா ரவி உள்ளிட்ட அனைவரும் கதாபாத்திரத்திற்கு தேவையானதை கட்சிதமாக செய்துள்ளனர்.
இயக்குனர் மாரி செல்வராஜ் மீண்டும் தனது சமூக நீதியை அழுத்தமாக மாமன்னன் மூலம் பேசியுள்ளார். திரைக்கதையில் தொய்வு அதை கொஞ்சம் விறுவிறுப்பாக எடுத்து சென்று இருக்கலாம். மற்றபடி சிறப்பான இயக்கம். அரசியல் குறித்து அவர் பேசிய விஷயம். தீண்டாமையை ஒழித்துக்கட்ட பேசிய வசனம். மிருகங்களை வைத்து படத்தை வடிவமைத்த விதம் அனைத்தும் சிறப்பு.
முக்கியமாக தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு படத்தின் ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு கதை சொல்கிறது. ஏ.ஆர். ரஹ்மான் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம். முக்கியமாக வடிவேலுவின் குரலில் வரும் பாடல்கள் உணர்வுபூர்வமாக இருந்தது. எடிட்டிங் ஓகே.
பிளஸ் பாயிண்ட்
ஃபகத் ஃபாசில், வடிவேலு, உதயநிதி
மாரி செல்வராஜ் இயக்கம்
தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு
மிருகங்கள் சொல்லும் கதை
பின்னணி இசை, பாடல்கள்
மைனஸ் பாயிண்ட்
திரைக்கதையில் சில இடங்களில் ஏற்பட்ட தொய்வு
மொத்தத்தில் 'மாமன்னன்' அரியணை ஏறினான்
உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் படம் எப்படி உள்ளது- Live Updates