மதராஸி திரை விமர்சனம்
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகி இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது மதராஸி. துப்பாக்கியை கையில் வாங்கிய சிவகார்த்திகேயன் துப்பாக்கி பட இயக்குநருடன் இணைந்தது படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருந்தது. சரி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை எந்த அளவிற்கு மதராஸி பூர்த்தி செய்துள்ளது என்பதை விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.
கதைக்களம்
தமிழ்நாட்டில் துப்பாக்கிகளை வைத்து வன்முறையை ஏற்படுத்த வட மாநிலங்களில் இருந்து வில்லன் கும்பல் ஐந்து கன்டெய்னர்களுடன் (Container) வருகிறார்கள். அவர்களை தடுத்து நிறுத்த அரசாங்கத்தின் NIA-வை சேர்ந்த பிஜு மேனன், விக்ராந்த் மற்றும் அவர்களின் குழு களமிறங்க, இதில் ஒரே ஒரு கன்டெய்னரை மட்டுமே NIA தடுத்து நிறுத்த மற்ற நான்கு கன்டெய்னர்களும் தமிழ்நாட்டிற்குள் வந்துவிட்டது. இந்த மோதலில் பிஜு மேனனுக்கு அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
ஒரு பக்கம் வில்லனுக்கும் - NIA-வுக்கும் மோதல் ஏற்பட்டு கொண்டிருக்க, மறுபக்கம் காதல் தோல்வியால் மனம் வாடி நிற்கும் சிவகார்த்திகேயன் (ரகு) சலம்பல பாடலுடன் என்ட்ரி கொடுக்கிறார். கதாநாயகி ருக்மிணி (மாலதி) தன்னை காதலித்துவிட்டு பிரிந்து சென்றுவிட்டதால், தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என முயற்சி ஈடுபட்டு, பாலத்தில் இருந்து கீழே விழுந்து கை கால்களில் சிவகார்த்திகேயனுக்கு அடிபடுகிறது.
பிஜு மேனன் அனுமதிக்கப்பட்டிருந்த அதே மருத்துவமனையில் சிவாவும் அனுமதிக்கப்பட, இருவருக்கும் இடையே சந்திப்பு ஏற்படுகிறது. இந்த சமயத்தில் அந்த நான்கு கண்டைனர்கள் ஒரு Gas Factory-ல் இருப்பதை பிஜு மேனன் கண்டுபிடிக்கிறார். அந்த Factory-யை எப்படியாவது வெடிக்க வைத்து விட்டால், இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிடும் என திட்டம்போட்டு, உள்ளே ஒருவனை அனுப்பி வெடிக்க வெக்க முடிவு செய்கிறார்.
சிவகார்த்திகேயன் எப்படியாவது சாக வேண்டும் என முயற்சி செய்வதை அறியும் பிஜு மேனன், தனது திட்டத்திற்காக சிவகார்த்திகேயனை பயன்படுத்துகிறார். Factory-க்குள் சிவகார்த்திகேயன் செல்ல, இவரை தேடி ருக்மிணி திரும்ப வந்துவிடுகிறார். இதன்பின் என்ன ஆனது? சிவகார்த்திகேயனின் பின்னணி என்ன? ருக்மிணி ஏன் சிவகார்த்திகேயனை விட்டு பிரிந்து சென்றார்? கன்டெய்னர்கள் அளிக்கப்பட்டதா, இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.
படத்தை பற்றிய அலசல்
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் எடுத்துக்கொண்ட கதைக்களம் சிறப்பு. ஆனால், திரைக்கதையை இன்னும் வலுவாக அமைத்திருக்கலாம் என தோன்றுகிறது. காதல் காட்சிகள் எல்லாம் சூப்பர். குறிப்பாக சிவகார்த்திகேயன் - ருக்மிணி இருவரும் தங்களது காதலை உணரும் தரும், அதை அழகாக திரையில் காட்டியது எல்லாம் ரசிக்கும் படியாக இருந்தது.
தனது மொத்த குடும்ப உறவையும் கதாநாயகி மாலதியிடம் ரகு பார்க்கிறான், அவளுக்கு ஒரு பிரச்சனை என்றால் எந்த எல்லைக்கும் போவான் என காட்டியது சிறப்பு. ஆனால், அதில் சுவாரஸ்யமும் மிகமிக குறைவு. சண்டை காட்சிகளில் ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள். சரி, கமர்ஷியல் படத்தில் லாஜிக் பார்க்க கூடாது என்றால், சண்டை காட்சிகளில் ஏகப்பட்ட கட்ஸ். அது எதற்கு என்று சுத்தமாக புரியவில்லை. கடுப்புதான் வருகிறது.
ஏ.ஆர். முருகதாஸ் என்றால் அறிவை வைத்து திரைக்கதையில் விளையாடி, ஒவ்வொரு காட்சிகளிலும் பல சர்ப்ரைஸை ஒளித்து வைத்து நம்மை வியப்பில் ஆழ்த்துவார். அதை நாம் துப்பாக்கி, கஜினி, கத்தி, ரமணா போன்ற படங்களில் பார்த்திருப்போம். ஆனால் மதராஸி படத்தில் ஓரிரு காட்சிகள் மட்டுமே அப்படி உள்ளது. அது இப்படத்திற்கு சற்று பின்னடைவை ஏற்படுத்துகிறது.
சண்டை காட்சிகளுக்காக சிவகார்த்திகேயன் எடுத்துள்ள Effort-க்கு தனி பாராட்டு. ஒரு பக்கம் சிவகார்த்திகேயன், மறுபக்கம் வித்யுத் ஜாம்வால் என இரு ஆக்ஷன் ஹீரோக்களை வைத்துக் கொண்டு தரமான சண்டை காட்சிகளை ஸ்டேஜின் செய்திருக்கலாம். அதற்கு பதிலாக, இருவரும் ஓயாமல் அடித்துக் கொள்கிறார்கள். சண்டை காட்சிகளை பார்க்கும் நாம் 'அட்ரா அவன' என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், இங்கு எப்படா சண்டைய முடிப்பீங்க என்று சொல்லும் அளவிற்கு உள்ளது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி அதில் அடங்கும்.
கதாநாயகன் சிவகார்த்திகேயன் இப்படத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிக்காட்டியுள்ளார். நடிப்பில் அடுத்த கட்டம் என்று கூட சொல்லலாம். ஆனால், அவருடைய நடிப்பு நம்முடன் கனெக்ட் ஆனதா என்றால் அது கேள்விக்குறிதான். கதாநாயகி ருக்மிணி வசந்த் கதாபாத்திரத்தை வலுவாக வடிவமைத்துள்ளார் முருகதாஸ். அதை ருக்மிணி ஏற்று நடித்தது சிறப்பாகவும் ரசிக்கும் படியாகவும் இருந்தது.
வில்லன் வித்யுத் ஜாம்வால் என்றாலும், துணை வில்லனாக வந்த நடிகர் ஷபீர் ஸ்கோர் செய்துவிட்டார். ஆக்ஷன் காட்சிகளில் வித்யுத் மிரட்டினாலும், ஷபீரின் கதாபாத்திரம் சுவாரஸ்யமாக இருந்தது. மேலும் பிஜு மேனன், விக்ராந்த் ஆகியோரும் தங்களுக்கு கிடைத்த ரோலில் சிறப்பாக நடித்துள்ளனர்.
அனிருத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் ஒர்க்கவுட் ஆகவில்லை. எப்போதுமே இவருடைய பின்னணி இசை கதாபாத்திரங்களுக்கு தனி எலிவேஷன் கொடுக்கும். ஆனால், இப்படத்தில் அப்படி எதுவும் இல்லை. அதுவும் இப்படத்திற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்துகின்றது. ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய பலம். அதை சுதீப் சிறப்பாக செய்துள்ளார். எடிட்டிங் இன்னும் கூட வலுவாக இருந்திருக்கலாம்.
பிளஸ் பாயிண்ட்
காதல் காட்சிகள்
சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த், ஷபீர், வித்யுத் நடிப்பு
ஒளிப்பதிவு
இடைவேளை காட்சி
மைனஸ் பாயிண்ட்
லாஜிக் மீறல்கள்.
சண்டை காட்சிகளில் வரும் ஏகப்பட்ட கட்ஸ்.
அனிருத் சொதப்பல்
சுவாரஸ்யம் குறைவாக இருந்த திரைக்கதை