மன ஷங்கர வர பிரசாத் காரு: திரை விமர்சனம்
மன ஷங்கர வர பிரசாத் காரு: திரை விமர்சனம்
மெகா ஸ்டார் சிரஞ்சீவி, நயன்தாரா ஆகியோர் நடிப்பில் சங்கராந்தி வெளியீடாக வந்துள்ள 'மன ஷங்கர வர பிரசாத் காரு' தெலுங்கு திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே காண்போமா.

கதைக்களம்
தேசிய பாதுகாப்பு அதிகாரியான ஷங்கர வர பிரசாத் (சிரஞ்சீவி), தனது மனைவி சசிரேகாவை (நயன்தாரா) 6 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார். டெல்லியில் வேலை பார்க்கும் ஷங்கர வர பிரசாத், தான் ஏன் மனைவியை பிரிந்தேன் என்பதை பிளாஷ்பேக் ஆக கூறுகிறார்.
அவரும் சசிரேகாவும் சச்சின் கடேகரின் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர்கள் இரண்டு பிள்ளைகள் பிறக்கின்றன. அதனைத் தொடர்ந்து, சசிரேகாவின் அப்பா சச்சின் கடேகர் அவர்களை வீட்டுக்கு வருமாறு அழைக்கிறார். பிரசாத்தும் அதற்கு சம்மதம் தெரிவிக்க சசிரேகா இரண்டு பிள்ளைகளுடன் அப்பாவின் வீட்டிற்கு சென்று குடியேறுகிறார்.
பின்னர் அப்பாவின் தொழில்களை மாப்பிள்ளையான பிரசாத்தும், சசிரேகாவும் நடத்துகின்றனர். ஆனால், பிரசாத் மீது உள்ள கோபம் தீராததால் சச்சின் கடேகர் அவரை வேலைக்காரரை போல் நடத்துகிறார். அதையும் பொறுத்துக்கொண்டு பிரசாத் அடங்கிப்போக, ஒருநாள் சசிரேகாவிடம் வாக்குவாதம் செய்கிறார். அப்போது சச்சின் கடேகர் குறுக்கிட அவரை அறைந்துவிடுகிறார்.
இதனால் சசிரேகா அவரை விவாகரத்து செய்வதுடன் மும்பைக்கு சென்று பெரிய தொழிலதிபராக உருவெடுக்கிறார். மனைவியையும், பிள்ளைகளையும் பிரிந்து வாழும் பிரசாத்திற்கு அவர்கள் வீட்டிற்கே பாதுகாப்பு அதிகாரியாக செல்லும் வாய்ப்பு கிடைக்க, மீண்டும் தனது குடும்பத்துடன் அவர் சேர்ந்தாரா என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்
கடந்த ஆண்டு 'சங்கராந்திக்கு வஸ்துன்னம்' என்கிற பிளாக் பஸ்டர் படத்தை கொடுத்த அனில் ரவிபுடிதான் இப்படத்தை இயக்கியுள்ளார்.
(ஜனநாயகனின் ஒரிஜினல் வெர்ஷன் என்று கூறப்படும் பகவந்த் கேசரியை இயக்கியவரும் இவரே) வெங்கடேஷுக்கு எப்படி ஒரு மாஸ் ஹிட் படத்தை கொடுத்தாரோ அதேபோல் சிரஞ்சீவிக்கும் தர வேண்டும் என்ற நோக்கத்திலேயே இப்படத்தை இயக்கியுள்ளார் என்பது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.
காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து வின்டேஜ் மெகா ஸ்டாராக சிரஞ்சீவி இப்படத்தில் கலக்கியிருக்கிறார். வசன உச்சரிப்புடன் அவர் தன் உடல்மொழியையும் காமெடியாக வெளிப்படுத்தி பல காட்சிகளில் கைத்தட்டல் வாங்குகிறார்.

அதே சமயம் தனக்கான மாஸையும் அவர் விட்டுவிடவில்லை. ஆக்ஷன் காட்சிகளிலும் தூள் கிளப்புகிறார். ஒரு கட்டத்தில் விக்டரி வெங்கடேஷும் இவருடன் இணைந்து கொள்ள, இருவரும் மாறி மாறி கலாய்த்துக் கொண்டு அலப்பறை செய்கின்றனர்.
குறிப்பாக சிரஞ்சீவியின் பாடலுக்கு வெங்கடேஷ் ஆடுவதும், இவரது பாடலை ஒலிக்கவிட்டு அவர் ஆடி கலாட்டா செய்தும் திரையரங்கில் பிளாஸ்ட் ஆகிறது. நயன்தாராவுக்கு ஏற்கனவே சில படங்களில் செய்த கதாபாத்திரம்தான் என்பதால் எளிதாக ஸ்கோர் செய்துவிட்டு செல்கிறார். என்னத்தான் கேத்தரின் தெரசாவுக்கு சிரஞ்சீவியின் டீமில் வேலைபார்ப்பவராக படம் முழுக்க வந்தாலும் பெரிய கதாபாத்திரம் இல்லை.
குறைந்தபட்சம் ஒரு பாடலாவது அவருக்கு கொடுத்திருக்கலாம். சச்சின் கடேகர், ஹர்ஷ வர்தன், ஸ்ரீனிவாச ரெட்டி, ஷரத் சக்சேனா ஆகியோர் தங்களது வேலையை சரியாக செய்துள்ளனர்.
பீம்ஸ் செஸிரோலியோவின் இசை படத்திற்கு பக்க பலம். சமீர் ரெட்டியின் கேமரா ஒவ்வொரு காட்சியையும் ரிச்சாக காட்டுகிறது. பிரிந்துபோன மனைவியுடன் ஹீரோ எப்படி சேர்ந்தார் என்கிற பழைய கதைதான் என்றாலும், அதனை சுவாரஸ்யமாக கொடுத்து வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர் அனில் ரவிபுடி. அதற்கு சிரஞ்சீவிதான் மற்றுமொரு முக்கிய காரணம் என்று கூறலாம்.
அவர்தான் படத்தை தோளில் தாங்கியிருக்கிறார். என்னதான் காமெடி படமாக இருந்தாலும் ஒரு சில எமோஷனல் வசனங்களும் டச்சிங்காக உள்ளன. அதுவும் பிளஸ் பாய்ண்ட் ஆக அமைகிறது.
க்ளாப்ஸ்
சிரஞ்சீவியின் அலப்பறைகள் வெங்கடேஷின் கேமியோ சுவாரஸ்யமான திரைக்கதை காமெடி காட்சிகள் பின்னணி இசை
பல்ப்ஸ்
குடும்பத்துடன் கொண்டாட வேண்டிய படத்தில் வன்முறை சண்டைக்காட்சிகளை தவிர்த்திருக்கலாம்
மொத்தத்தில் இந்த சங்கராந்திக்கு விருந்து கொடுத்துள்ளார் இந்த 'மன ஷங்கர வர பிரசாத் காரு'. குடும்பத்துடன் ரசித்து பார்க்கக்கூடிய படம்தான்.