மர்தானி 3: திரை விமர்சனம்
ராணி முகர்ஜி நடிப்பில் மர்தானி சீரிஸின் மூன்றாவது பாகமாக வெளியாகியுள்ள மர்தானி 3 திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே பார்ப்போமா.

கதைக்களம்
உத்தர பிரதேசத்தின் புலந்த்ஷாரில் ஒரு கும்பல் ருஹானி என்ற சிறுமியை கடத்த முயற்சிக்கும்போது, அதனைத் தடுக்க முயற்சிக்கும் மற்றொரு சிறுமியான ஜிம்லியையும் சேர்த்து கடத்துகிறார்கள்.
Amma என்ற மாஃபியா பெண்தான் இந்த கடத்தலுக்கு மூளையாக இருக்கிறார். 8-9 வயதுடைய சிறுமிகளையே குறிவைத்து கடத்த சொல்கிறார் Amma. இந்த சூழலில் ருஹானி துருக்கிக்கான இந்திய தூதர் சாஹுவின் மகள் என தெரிய வருகிறது.

இதனால் பிரச்சனை பெரிதாக ஐபிஎஸ் அதிகாரியான ஷிவானி ஷிவாஜி ராய், என்ஐஏ ஆக செயல்பட உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. உடனே தனது படையுடன் ஷிவானி ஆக்ஷனில் இறங்க, சிறுமி ருஹானி குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.2 கோடி சன்மானம் அளிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகிறது.
இதனால் பேராசைப்படும் கடத்தல் கும்பல், Amma-விடம் சிறுமியை கொண்டு சேர்க்காமல் சாஹுவிடம் மகளை ஒப்படைத்து பணத்தை பெற முயற்சிக்கின்றனர். அவர்களை பொறி வைத்து பிடிக்க எடுக்கும் ஷிவானி தோல்வியடைகிறார்.

என்றாலும், மறுவாழ்வு அமைப்பை நடத்தி வரும் ராமானுஜன் என்பவரை Ammaவின் ஆட்கள் கொல்ல முயற்சிக்க, ஷிவானி அதனை தடுக்கிறார். தன்னை காப்பாற்றிய நன்றிக்கடனுக்காக ஷிவானியுடன் ராமானுஜன் சேர, கடத்தப்பட்ட சிறுமிகள் எப்படி மீட்கப்பட்டனர் என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
குழந்தைகள் கடத்தலை மையமாக வைத்து அபிராஜ் மினவாலா என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். 8-9 வயதுடைய பெண் குழந்தைகளை குறிவைத்து கடத்தும் கும்பல், அவர்களை மீட்க போராடும் பெண் போலீஸ் அதிகாரி என கதைக்கருவை முடிந்தவரை சுவாரஸ்யமாக கொண்டு சென்றுள்ளார்.
மர்தானி சீரிஸின் முந்தைய இரண்டு பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் ஆக்ஷன் களத்தில் இறங்கியுள்ளார் ராணி முகர்ஜி. அறிமுக காட்சியிலேயே ஆக்ஷனில் பின்னி பெடலெடுக்கும் ராணி முகர்ஜி, எமோஷனல் காட்சிகளிலும் ஸ்கோர் செய்து மொத்த படத்தையும் தனது தோளில் தாங்குகிறார்.

குறிப்பாக இடைவேளை காட்சியில் உடைந்து அழுவது, சஸ்பெண்ட் ஆகும்போது அசராமல் நிற்பது ஆகிய இரண்டு காட்சிகளில் மிரட்டுகிறார். Amma கதாபாத்திரத்தில் மல்லிகா பிரசாத் தோரணையிலேயே பயமுறுத்துகிறார். சிறுமிகளிடம் அவர் பாடல் பாடி தைரியம் கொடுக்கும்போது கொடூர முகத்தை காட்டுகிறார்.
கான்ஸ்டபிள் பாத்திமாவாக வரும் ஜான்கி போதிவாலா தனக்கான கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். சிறுமிகள் அவனீ ஜோஷி, தியோர் வர்கீஸ் இருவரும் யதார்த்தமாக நடித்து மிரட்டுகிறார்கள். படம் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை விறுவிறுப்பாக செல்கிறது. திரைக்கதையை ஆயுஷ் குப்தா சுவாரஸ்யமாக வடிவமைத்துள்ளார்.

அவருடன் சேர்ந்து தீபக், பல்ஜீத் சிங் ஆகியோர் கதை எழுதியுள்ளனர். நம்ம ஹரியின் சிங்கம் படத்தை ஹீரோயினை வைத்து எடுத்தால் எப்படி இருக்குமோ அதுபோல் படம் டெல்லியில் ஆரம்பித்து இலங்கையில் முடிகிறது. ஆனால் பல காட்சிகள் யூகிக்கக்கூடிய வகையில் உள்ளன. ஒரு சில ட்விஸ்ட்களை நாம் எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.
அதுபோன்ற குறைகள் இருந்தாலும், குழந்தைகள் கடத்தல் என்ற இப்போதும் நடக்கும் பிரச்சனைப் பற்றி பேசியதற்காக பார்க்க வேண்டிய படம். பெண்களை வைத்தே உடல் சோதனை செய்வது அவர்கள் பலவீனமானவர்கள் என்று ஆண்கள் நினைப்பதாலா போன்ற வசனங்கள் கைதட்டல் ரகம்.
க்ளாப்ஸ்
ராணி முகர்ஜி..ராணி முகர்ஜி..ராணி முகர்ஜி
விறுவிறுப்பான திரைக்கதை
கதைக்கரு
சண்டைக்காட்சிகள்
பல்ப்ஸ்
யூகிக்கக்கூடிய காட்சிகள்
சில லாஜிக் மீறல்கள்
மொத்தத்தில் இந்த மர்தானி 3 இந்தியில் பக்கா ஆக்ஷன்-த்ரில்லர் படம் பார்க்க வேண்டும் என்பவர்களுக்கு ட்ரீட்.
