மார்க்: திரை விமர்சனம்
கிச்சா சுதீபா நடிப்பில் வெளியாகியுள்ள மார்க் கன்னட திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே காண்போமா.

கதைக்களம்
கர்நாடகாவின் மங்களூருவில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கையகப்படுத்தப்படுகிறது.
அது கொல்ஹாபூரில் டானாக இருக்கும் பத்ரா (நவீன் சந்திரா) உடையது என்பதும், அதனை கடத்தும் வேலையை செய்வது முதல்வரின் மகனுடன் தொடர்புடைய ஸ்டீபன் ராஜுடையது (குரு சோமசுந்தரம்) என்பதும் பின்னர் தெரிய வருகிறது.
SP அஜய் மார்கண்டேயா எனும் மார்க் அந்த போதைப்பொருளை தனது கன்ட்ரோலில் எடுக்கிறார். இது ஒருபுறம் இருக்க, முதல்வர் ICUவில் சீரியஸாக இருக்க, அவரது மகன் ஆதிகேசவா (ஷைன் டாம் சாக்கோ) தன்னை முதல்வராக்க கையெழுத்திடுமாறு கேட்கிறார்.

ஆனால், கட்சியில் மூத்தவருக்குதான் பதவி கொடுக்க வேண்டும் என அவர் கூற, தாயை கொன்றுவிட்டு ஆதிகேசவனே அவரது கையெழுத்தை போட்டுக் கொள்கிறார்.
முதல்வரை அவரது மகன் கொலை செய்ததை ரகசிய செல்போன் மூலம் டாக்டர் ஒருவர் வீடியோ எடுக்க, அந்த விஷயம் ஆதிகேசவனுக்கு தெரிய வருகிறது. அந்த வீடியோ வெளியேற வரக்கூடாது என அவர் கைப்பற்ற முயற்சிக்க, மங்களூருவின் பல இடங்களில் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர்.
இப்போது களத்தில் இறங்கும் SP மார்க் குழந்தைகளை காப்பாற்றினாரா? முதல்வர் கொலை தொடர்பான வீடியோ என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்
மேக்ஸ் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து கிச்சா சுதீபா மற்றும் விஜய் கார்த்திகேயா இணைந்திருக்கும் இரண்டாவது படம் இது. ஆக்ஷன் த்ரில்லர் படமாக கொடுக்க நினைத்த இயக்குநர், 5 சண்டைப்பயிற்சி இயக்குநர்களை வைத்து இயக்கி மிரட்டியிருக்கிறார்.
குறிப்பாக காவல் நிலையத்தில் வரும் சண்டைக்காட்சியும், பாலத்தில் நடக்கும் சண்டைக்காட்சியும் ரொம்ப ஸ்டைலிஷாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மார்க்கெட் சண்டைக்காட்சி பொறி பறக்க, கிளைமேக்சில் சுதீபா உக்கிரத்தை காட்டியுள்ளார். ஆகையால், ஆக்ஷன் பட விரும்பிகளுக்கு இப்படம் செம விருந்து என்றே கூறலாம்.
ஆனால், திரைக்கதையைப் பொறுத்தவரை நிறைய சுத்திவிட்டிருக்கிறார் இயக்குநர். கடத்தப்பட்ட குழந்தைகளை கண்டுபிடித்து மீட்க சுதீபாவிற்கு (மார்க்) 18 மணிநேரமே உள்ளது. அதற்கு அவர்களை கண்டுபிடிக்க முடியாவிடில் குழந்தைகள் இறந்துவிடுவார்கள்.

இதை மட்டுமே வைத்து ஹீரோவுக்கு மாஸ் காட்ட முடியாது என்பதால் முதல்வர் கொலை, போதைப்பொருள் கடத்தல் கும்பல் என உள்ளே கொண்டு வந்து திணித்திருக்கிறார். இதுவே படத்திற்கு மைனஸாக மாறி திரைக்கதையின் வேகத்தை மட்டுப்படுத்துகிறது.
என்றாலும் கமர்ஷியல் படங்களுக்கே உரித்தான விஷயங்களும் படத்தில் உள்ளன. இரண்டு இடங்களில் வரும் ட்விஸ்ட் அட என்று சொல்ல வைக்கிறது. மேக்ஸ் படத்தையும் இயக்குநர் டீஸ் செய்திருக்கிறார். கிச்சா சுதீபாவைத் தாண்டி நல்ல கதாபாத்திரம் என்றால் விக்ராந்த் மற்றும் தீப்ஷிகா ஆகிய இருவருக்கும்தான்.
அதிலும் போலீசாக வரும் தீப்ஷிகாவுக்கு என தனியாக மாஸ் சண்டைக்காட்சி ஒன்றும் உள்ளது. அதனை கச்சிதமாக அவர் செய்துள்ளார். மற்றபடி ஷைன் டாம் சாக்கோ, நவீன் சந்திரா, குரு சோமசுந்தரம் மற்றும் யோகி பாபு ஆகியோரின் கதாபாத்திரங்களில் அழுத்தம் இல்லை.

படத்தை தாங்கும் இன்னொரு தூண் என்றால் இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத்தான். குறிப்பாக 'மஸ்த் மலைக்கா' பாடல் குதூகலம். கேமரா டீம், ஆர்ட் டிபார்ட்மென்ட், எடிட்டிங் ஆகிய மற்ற துறைகளின் பங்களிப்பும் சிறப்பாக உள்ளது.
க்ளாப்ஸ்
கிச்சா சுதீபா
சண்டைக்காட்சிகள்
பின்னணி இசை
பல்ப்ஸ்
திரைக்கதை குழப்பம்
லாஜிக் மீறல்கள்
மொத்தத்தில் மேக்ஸ் அளவிற்கு இல்லை என்றாலும் இந்த மார்க் சண்டையில் மட்டும் மிரட்டுகிறார். ஆக்ஷன் பட ரசிகர்கள் கண்டிப்பாக ரசிக்கலாம்.
