மழை பிடிக்காத மனிதன் திரைவிமர்சனம்
விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் இன்று வெளிவந்துள்ள திரைப்படம் மழை பிடிக்காத மனிதன்.
இப்படத்தில் சரத்குமார், சத்யராஜ், மெகா ஆகாஷ், சரண்யா பொன்வண்ணன் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். வாங்க படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம்.
கதைக்களம்
சரத்குமாருடன் இணைந்து ஏஜெண்டாக பணிபுரிந்து வரும் விஜய் ஆண்டனி, தனக்கு பிடித்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். பின் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வரும் நிலையில், எதிரிகளால் விஜய் ஆண்டனியின் மனைவி கொலை செய்யப்படுகிறார்.
தனது மனைவி இறந்த நேரத்தில் மழை பெய்த காரணத்தால் மழையை வெறுக்க துவங்குகிறார் விஜய் ஆண்டனி. நடந்த தாக்குதலில் மனைவியுடன் சேர்ந்து விஜய் ஆண்டனியும் இறந்துவிட்டதாக சரத்குமார் அனைவரையும் நம்ப வைக்கிறார்.
இதன்பின் விஜய் ஆண்டனியை அந்தமானுக்கு அனுப்பி வைக்கிறார். அங்கு என்ன நடந்தது, அதன்பின் விஜய் ஆண்டனியின் வாழ்க்கை எப்படி மாறியது என்பதே படத்தின் மீதி கதை.
படத்தை பற்றிய அலசல்
இயக்குனர் விஜய் மில்டன் எடுத்துக்கொண்ட கதைக்களம் மற்றும் சொல்ல வந்த கருத்து இரண்டுமே சூப்பர். தீமை செய்பவன் அழியவேண்டும், தீமை தான் அழிய வேண்டும் என இயக்குனர் விஜய் மில்டன் கூறிய விஷயம் மனதை தொடுகிறது.
ஆனால், படத்தில் சுவாரஸ்யம் குறைவாக இருப்பதை படம் பார்க்கும் பொழுது உணர முடிகிறது. விஜய் ஆண்டனி, அவருடன் ஒரு நாய் குட்டி, அவருக்கு மழை பிடிக்காது என கதாபாத்திரத்தை காட்டிய விதம் அழகாக இருந்தது.
சரத்குமார் மற்றும் சத்யராஜ் இருவருக்கும் படத்தில் பெரிதளவில் ஸ்கோப் இல்லை. விஜய் ஆண்டனியின் நண்பராக வரும் பிருத்வி தனக்கு கிடைத்த கதாபாத்திரத்தில் நன்றாக நடித்துள்ளார்.
வில்லனாக வரும் தனஞ்சய்வின் கதாபாத்திரத்தில் பெரிதளவில் ஒர்க்கவுட் ஆகவில்லை. மேலும் மெகா ஆகாஷ், முரளி ஷர்மா மற்றும் இயக்குனர் ரமணாவின் நடிப்பு ஓகே.
ஆக்ஷன் காட்சிகள் இன்னும் நேர்த்தியாக எடுத்திருக்கலாம். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளின் கேமராவை வைத்து கிமிக்ஸ் செய்தது சற்று கடுப்பேத்துகிறது.
அதை தவிர்த்து ரசிக்கும்படியான ஆக்ஷன் காட்சிகளை உருவாக்கியிருந்தால், அது இப்படத்தின் பலமாக அமைந்திருக்கும். பாடல்கள் பெரிதாக மனதில் இடம் பெறவில்லை, பின்னணி இசை ஓகே.
பிளஸ் பாயிண்ட்
விஜய் ஆண்டனி நடிப்பு
கிளைமாக்ஸ் காட்சியில் வந்த கருத்து
மைனஸ் பாயிண்ட்
சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை
ரசிக்கும்படியாக இல்லாத ஆக்ஷன் காட்சிகள்