Mercy: திரை விமர்சனம்
ஹாலிவுட்டில் கிறிஸ் பிராட், ரெபெக்கா பெர்குசன் நடிப்பில் வெளியாகியுள்ள Mercy திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே காண்போமா.

கதைக்களம்
அமெரிக்காவில் குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பதால், அதனை கட்டுப்படுத்த Mercy நீதிமன்றம் உருவாக்கப்படுகிறது. அது AI நீதிபதியின் வாயிலாக வன்முறை குற்றங்களுக்கான தீர்ப்புகளை வழங்கும்.
குற்றம்சாட்டப்பட்ட நபர் 90 நிமிடங்களுக்குள் தன்னை நிரூபிக்க வேண்டும். இந்த சூழலில் LAPD டிடெக்டிவ் கிரிஸ் ரேவன் (கிறிஸ் பிராட்) தனது மனைவி நிக்கோலை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்படுகிறார்.

அவரது வழக்கினை AI நீதிபதி மேடாக்ஸ் (ரெபெக்கா பெர்குசன்) விசாரிக்க, கிரிஸ் தான் கொலை செய்யவில்லை என்று கூறி வாதாடுகிறார். என்றாலும் அவர் தற்போது 97% குற்ற நிகழ்தகவினை கொண்டிருப்பதால், மரண தண்டனையைத் தவிர்க்க அவர் 92%-க்கும் குறைவாக செல்ல தன்னை நிரூபிக்க வேண்டும்.
ஆனால், அவர் வீட்டிற்கு கோபமாக வந்து சண்டையிட்டது, பாரில் போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டது போன்ற வீடியோ காட்சிகள் அவருக்கு எதிராக உள்ளன. இவற்றை தாண்டி அவர் எப்படி தன்னை குற்றமற்றவர் என்று நிரூபித்தார்? உண்மையான கொலையாளி யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்
90ஸ் கிட்ஸுக்கு மிகவும் பிடித்த படமான 'வாண்டட்' படத்தை கொடுத்த திமுர் பெக்மம்பெடோவ் இப்படத்தை இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க விசாரணை பாணியில் செல்லக்கூடிய இந்த கதையை சுவாரஸ்யமாக்குவது திரைக்கதைதான்.
மார்கோ வான் பெல்லே படத்தின் கதையை எழுதியிருக்கிறார். 2029யிலேயே AIயின் ஆதிக்கம் எந்த அளவிற்கு வளர்ந்திருக்கும் என்பதை காட்டுவதுபோல் நீதிமன்ற விசாரணை காட்சிகள் உள்ளன.
என்னதான் கற்பனை என்று கூறினால் இப்படியும் நடக்கக் கூட வாய்ப்புள்ளது என்பதைத்தான் அறிவியலின் வளர்ச்சி நமக்கு காட்டுகிறது. கிறிஸ் ரேவன் கதாபாத்திரத்தில் கிறிஸ் பிராட் ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டே, முகபாவனைகள் மூலம் நல்ல நடிப்பை தந்துள்ளார்.

மனைவியை கொலை செய்யவில்லை என்று கதறுவது, மகள் போதைப்பொருள் பயன்படுத்துகிறாள் என்பது தெரிந்து அதிர்ச்சியடைவது என அசத்தியிருக்கிறார். மிஷன் இம்பாஸிபிள் படங்களில் பட்டையைக் கிளப்பிய ரெபெக்கா பெர்குசன் AI நீதிபதியாக எந்தவித முகபாவனைகளும் இல்லாமல் நடித்துள்ளார்.
100 நிமிடங்களே ஓடக்கூடிய இப்படத்தில் கதை, திரைக்கதையைத் தாண்டி நம்மை ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சிக்குள்ளாவது கிளவுடில் சேமிக்கப்படும் வீடியோக்கள், புகைப்படங்கள், உரையாடல்கள் போன்றவைதான். அவற்றைக் கொண்டுதான் ஹீரோ கொலை செய்திருப்பார் என்று குற்றம்சாட்டப்படுகிறார்.
மேலும், அவற்றை வைத்துதான் நிரபராதி என்றே அவர் நிரூபிக்க வேண்டும். இதுபோன்ற விஷயங்கள் நம்மை நிமிர வைக்கின்றன. படத்தில் பிரச்சனை என்னவென்றால் ஆதாரங்கள் வேகமாக காட்டப்படுவதால் பலராலும் அதனுடன் ஒன்ற முடியாமல் போவதுதான். அதேபோல், உண்மையான குற்றவாளி யார் என்கிற ட்விஸ்ட் பல படங்களில் பார்த்ததுதான்.

இவற்றை தவிர்த்துவிட்டு பார்த்தால் நல்ல டீசண்ட் த்ரில்லர் படம்தான். குறிப்பாக பெற்றோருக்கு தெரியாமல் பிள்ளைகள் சோஷியல் மீடியாவில் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை காட்டியது பலருக்கும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கலாம்.
க்ளாப்ஸ்
திரைக்கதை
டெக்னிக்கல் விஷயங்கள்
ஹீரோ கண்டுபிடிக்கும் ஒரு ட்விஸ்ட்
கிளைமேக்ஸ்
பல்ப்ஸ்
வேகமாக ஆதாரங்களை காட்டுவது
பார்த்து பழகிய ஒரு சில ட்விஸ்ட்கள்
மொத்தத்தில் AIயின் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் என்பதன் ஒரு எச்சரிக்கையாக இந்த Mercy வந்துள்ளது. சயின்ஸ் பிக்ஷன் திரில்லர் பிரியர்கள் தாராளமாக பார்க்கலாம்.
