மெட்ரோ..இன் டினோ: திரை விமர்சனம்
ஆதித்யா ராய் கபூர், சாரா அலி கான், பாத்திமா சனா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள "மெட்ரோ இன் டினோ" இந்தி திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே காண்போமா.
கதைக்களம்
யூடியூபரான ஆதித்யா ராய் கபூர் ட்ரெவலிங் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறார். ஒரு சூழலில் சாரா அலிகானை சந்திக்கும் ஆதித்யா, அவரை வீட்டிற்கு கொண்டு சென்று விடுகிறார். அப்போது சாராவின் வருங்கால கணவர் அவர்களை தப்பாக நினைக்கிறார்.
இதனால் சாராவுக்கு உதவிட தன் தோழி பாத்திமா சனாவை மனைவி என அவரிடம் அறிமுகம் செய்கிறார். அதே சமயம் பாத்திமா சனாவின் கணவர் அலி பஸல் பாடகராக முயற்சிபதால் இருவருக்குள்ளும் உரசல் ஏற்படுகிறது.
இதற்கிடையில் சாராவின் அக்கா கொங்கணா சென்னின் கணவர் டேட்டிங் ஆப்பில் வேறு பெண்களை தேடுகிறார். இதனை கொங்கணா கண்டுபிடிக்க அவர்களுக்குள் பிரச்சனை ஏற்படுகிறது.
இது ஒருபுறமிருக்க அனுபம் கெர் தனது மகளின் வாழ்க்கையை நினைத்து வருத்தப்பட, இன்னொருபுறம் கணவரின் லட்சியத்திற்காக பாத்திமா சனா கர்ப்பத்தை கலைப்பதா வேண்டாமா என குழம்புகிறார்.
ஒவ்வொருவரும் ஒரு மனச்சிக்கலில் இருக்க, அவர்களின் வாழ்க்கையில் எப்படி மாற்றம் ஏற்பட்டது? தங்கள் துணையை அவர்கள் புரிந்துகொண்டார்களா என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
மர்டர், பர்பி, லைப் இன் எ மெட்ரோ போன்ற படங்களை இயக்கிய அனுராக் பாசு இப்படத்தை இயக்கியுள்ளார். கதைக்கான நடிகர்களை தேர்வு செய்ததிலேயே அவர் பாதி வெற்றி பெற்றுவிட்டார் என்றே கூறலாம். காதல், தாம்பத்தியத்தில் விரிசல், சந்தேகம் என எல்லாவித எமோஷன்களிலும் புகுந்து விளையாடியிருக்கிறார் இயக்குநர்.
அதற்காக பீலிங்காகவே கதையை கொண்டு செல்லமாமல் காமெடியை படம் முழுக்க வைத்திருக்கிறார். சாரா அலி கான் ஆதித்யாவை சந்திக்கும் காட்சி செம அலப்பறை. அதேபோல் கொங்கணா சென் கணவர் பங்கஜிடம் செல்போனில் உரையாடும் காட்சிகள் காமெடி உச்சம்.
அனுபம் கெர், நீனா குப்தா அனுபவ நடிப்பை எதார்த்தமாக கொடுக்க மற்ற நடிகர்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக தந்துள்ளனர். குறிப்பாக சாரா அலி கான் தன்னை உடல் ரீதியாக சீண்டும் மேனேஜரை அறையும் காட்சியும், அலி பாஸல் முதல் வாய்ப்பில் பாடும்போது குழந்தையை நினைத்து உடைந்து அழும் காட்சியையும் கூறலாம்.
மெட்ரோ சிட்டியில் வாழும் முதியவர்களின் காதலை மட்டும் காட்டாமல் பதின்பருவத்தினர் காதலில் தடுமாறுவதையும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் அனுராக். மியூசிக்கல் டிராமா படம் என்பதால் பிரீத்தமின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பக்க பலமாக அமைந்துள்ளது.
க்ளாப்ஸ்
கதை
திரைக்கதை
நடிப்பு
இசை
பல்ப்ஸ்
படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம் .
மொத்தத்தில் கலாட்டாவான ஃபீல் குட் டிராமாவாக ரசிக்க வைக்கிறது இந்த மெட்ரோ வாழ்க்கை.