மித்ரா மண்டலி: திரை விமர்சனம்
தெலுங்கில் வெளியாகியுள்ள மித்ரா மண்டலி என்ற காமெடி திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே பார்ப்போமா.
கதைக்களம்
ஜங்கலிப்பட்டணம் என்ற ஊரில் அரசியல் பிரமுகராக இருப்பவர் விடிவி கணேஷ். தனது சாதி மீது அதீத ஈடுபாடு கொண்ட அவர், தனது சாதியைச் சேர்ந்த இளைஞர் வேறு சாதி பெண்ணை காதலித்ததாக தெரிந்தாலே அவரை கொலை செய்துவிடுவார்.
அப்படிப்பட்ட நபர் சாதி செல்வாக்கைப் பயன்படுத்தி எம்.எல்.ஏ பதவிக்கு போட்டியிட கட்சியிடம் சீட் கேட்கிறார். அந்த சீட்டைப் பெற மறுபுறம் சத்ய பிரகாஷ் முயற்சிக்கிறார். இந்த சூழலில் விடிவி கணேஷ் தனது மகள் நிஹாரிகா கடத்தப்பட்டதாக, எஸ்.ஐ வெண்ணிலா கிஷோரிடம் புகார் அளிக்கிறார்.
ஆனால், தன் மகள் காதலித்து ஓடிவிட்டதாகவும் அதனை கடத்தல் வழக்கு என்றே விசாரிக்க வேண்டும்; இல்லையென்றால் கட்சியில் சீட் பறிபோகும் என்று கூறுகிறார். அப்போது இம்பார்ட்டண்ட் கேரக்டர் என்று கூறிக்கொண்டு நுழையும் சத்யா பல குழப்பங்களை ஏற்படுத்துகிறார்.
இந்த நிலையில்தான் பிரியதர்ஷி, விஷ்ணு ஓய், ராக் மயூர் ஆகிய நண்பர்களில் ஒருவரை நிஹாரிகா காதலித்தது தெரிய வருகிறது. பிளேஷ்பேக்கில் அந்த கதையைக் கூற, நிஹாரிகா யாரை காதலித்தார்? அவரை எப்படி கண்டுபிடித்தார்கள் என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
படத்தின் ஆரம்பத்திலேயே சலார் போன்ற சில படங்களை ரெபெரென்ஸ் காட்டி ஸ்பூப் படம் போல் காட்டுகிறார் இயக்குநர். விடிவி கணேஷின் அறிமுகத்தில் அனிமல் படத்தின் காட்சியை வைத்து ஆரம்பமாகிறது படம்.
ஆனால், போக போக காமெடி எப்போது வரும் என்பதுபோல் காட்சிகள் நகர்கின்றன. எந்த காமெடி படத்திலும் இப்படி ஒரு போலீஸ் ஸ்டேஷனை பார்த்திருக்க முடியாது. ஏனெனில், முதல் தளத்தில் வசிக்கும் முதிய தம்பதி எஸ்.ஐ வெண்ணிலா கிஷோரை ஹீட்டர் வேலை செய்யவில்லை சரிபார், கரெண்ட் லைனை சரிசெய் என்றெல்லாம் இஷ்டத்திற்கு கூறுகின்றனர்.
இம்பார்ட்டன்ட் கேரக்டர் என்று கூறி அறிமுகமாகும் சத்யா, முதலில் காமெடி என்ற பெயரில் கடுப்பேற்றினாலும் ஒரு சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். ஹீரோ பிரியதர்ஷி மற்றும் அவரது நண்பர்கள் விஷ்ணு, ராக் மயூர் ஆகிய மூவரும் காமெடி செய்வதாக மேட் பட பாணியில் என்னென்னமோ செய்கிறார்கள்.
ஆனால் ஒரு காட்சிக்கு கூட சிரிப்பு வராமல் எரிச்சல்தான் ஏற்படுகிறது. இடையில் பாடல்கள் வேறு வந்து சோதிக்கின்றன. எஸ்.விஜயேந்தர் என்பவர் காமெடி படமாக இதனை இயக்கியுள்ளார். பல இடங்களில் நம்மை சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார். ஆனால் எல்லாம் ஓவர்டோஸ் ஆகி கிரிஞ்ச் காமெடியாக எரிச்சலூட்டுகின்றன.
மொத்தமாகவே நான்கு, ஐந்து இடங்களில்தான் காமெடி என்பதே வந்து செல்லும். அந்த அளவிற்கு வீக்கான ரைட்டிங். ட்விஸ்ட் என்று வைத்ததும் பெரிதாக ஒர்க்அவுட் ஆகவில்லை.
ஹீரோ மற்றும் அவரது நண்பர்களை தேடும் முயற்சியில் விடிவி கணேஷின் அடியாட்கள் RTO அலுவலகம் செல்லும் காட்சி செம காமெடி. யார்தான் இந்த இம்பார்ட்டண்ட் கேரக்டர் என்ற கேள்விக்கு கடைசியில் கிடைக்கும் விடை செம கலாய். இதுமட்டுமே ஒரு காமெடி படத்திற்கு போதாது.
க்ளாப்ஸ்
விடிவி கணேஷ், சத்யா நடிப்பு
ஒளிப்பதிவு
பல்ப்ஸ்
அலுத்துப்போன பழைய கதை
வலுவில்லாத திரைக்கதை
எரிச்சலூட்டும் காமெடி காட்சிகள்