Mr House Keeping பட திரை விமர்சனம்
மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்
லாஸ்லியா, 'ஜம்ப் கட்ஸ்' ஹரிபாஸ்கர் நடிப்பில் வெளியாகியுள்ள மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங் திரைப்படத்தின் விமர்சனம் குறித்து இங்கே கண்போம்.
கதைக்களம்
காலேஜில் லாஸ்லியாவை துரத்தி துரத்தி காதலிக்கிறார் ஹரிபாஸ்கர்.
ஆனால் லாஸ்லியா அவரது காதலை ஏற்காததால், காலேஜ் முடித்து 4 ஆண்டுகளில் வேறொரு பெண்ணை காதலித்து வாழ்க்கையில் செட்டில் ஆவேன் என ஹரிபாஸ்கர் சவால் விடுகிறார்.
அதன் பின்னர் 4 ஆண்டுகள் கழித்து ஹரிபாஸ்கர் ஒருதலையாக காதலித்த பெண்ணுக்கு திருமணமாகிறது. அதனை தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலைக்கு முயற்சிக்கிறார் ஹரிபாஸ்கர். அவரை நண்பர் ஷாரா வெளியே அழைத்து செல்கிறார். ஒரு கட்டத்தில் ஹவுஸ் கீப்பிங் வேலைக்கு ஹரி செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
அவர் செல்லும் வீடு லாஸ்லியா உடையது என தெரிந்ததும் இருவரும் அதிர்ச்சியடைகின்றனர். எனினும் அங்கேயே வேலை செய்து லாஸ்லியாவை காதலிக்க வைக்க முயற்சிக்கிறார் ஹரி. ஹரியை புரிந்துகொண்ட லாஸ்லியா அவரை பெஸ்டி ஆக பார்க்க ஆரம்பிக்கிறார்.
ஆனால் ஹரி, தன்னை லாஸ்லியா காதலிப்பதாக தவறாக நினைக்க பின்னர் என்ன ஆனது? இருவரும் சேர்ந்தார்களா இல்லையா படத்தின் கதை.
படம் பற்றிய அலசல்
யூடியுபில் ஜம்ப் கட்ஸ் சேனல் மூலம் பிரபலமான ஹரிபாஸ்கர் இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். காமெடி நடிப்பில் ஸ்கோர் செய்யும் அவர், எமோஷனல் காட்சிகளிலும் முடிந்தவரை நடித்துள்ளார்.
லாஸ்லியா இசை என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். படத்தின் பலமே கலாட்டாவான திரைக்கதைதான். காமெடிக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் காதல், குடும்பம் என எல்லா ஏரியாவிலும் நல்ல ரைட்டிங் இருப்பதால் படம் எங்கும் சலிப்பில்லாமல் செல்கிறது.
ஆனால், ஹரிபாஸ்கருக்கு காதலி இசை தன்னை பெஸ்டியாகதான் பார்த்தார் என்ற உண்மை தெரியும் இடத்திலேயே படத்தை முடித்திருக்கலாம். அதன் பின்னரும் படம் ஓடுவது சற்று அயர்ச்சியை தருவதை தவிர்க்க முடியவில்லை. இளவரசுவும், உமா ராமச்சந்திரனும் குறை சொல்ல முடியாத அளவிற்கு யதார்த்த நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்கள்.
குறிப்பாக இளவரசு மகனுக்கு அட்வைஸ் செய்து அனுப்பிவிட்டு, ஷாராவிடம் அந்த குவாட்டர் பாட்டிலை எடு என்று கூறும் இடம் தியேட்டரில் சிரிப்பலை. ஷாரா பல இடங்களில் ஒன்லைன் பஞ்ச் மூலம் சிரிக்க வைக்கிறார்.
ஹீரோ தனது தவறை உணர்ந்து கொள்ள நீண்ட நேரம் எடுத்துக்கொள்வதால் அவருக்கான காட்சிகள் அதிகமாக நீள்கின்றன. பிக்பாஸ் ரயான் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். அதேபோல் இன்னும் சில யூடியுப் நட்சத்திரங்களும் படத்தில் உள்ளனர். படத்திற்கு மற்றொரு பிளஸ் பின்னணி இசைதான்.
படத்தில் பல காட்சிகளில் நாம் ஒன்றுவதற்கு ஓஷோ வெங்கட்டின் இசை பெரிதும் உதவுகிறது. இன்ஸ்டாகிராமில் ஏதோ ஒரு ஐடிக்கு சென்று, பணம் கட்டி வீடியோ கால் பேசி ஹரிபாஸ்கர் ஏமாறும் அந்த ஒரு காட்சி டாப் நாட்ச். நல்ல பொழுக்குபோக்கு படத்தை கொடுத்த இயக்குநர் அருண் ரவிச்சந்திரனுக்கு வாழ்த்துக்கள்.
க்ளாப்ஸ்
தொய்வில்லாத திரைக்கதை காமெடி சில சென்டிமென்ட் காட்சிகள் பின்னணி இசை
பல்ப்ஸ்
படத்தின் நீளத்தை ஒரு 20 நிமிடங்கள் குறைத்திருக்கலாம்
மொத்தத்தில் நல்ல ஒரு குடும்ப பொழுதுபோக்காகவும், இன்றைய இளையமுறைக்கு பிடிக்கும் வகையில் சிறந்த ஹவுஸ் கீப்பிங் வேலையை செய்திருக்கிறார் "மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்".