Mr.& Mrs.Mahi: திரை விமர்சனம்
ராஜ்குமார் ராவ், ஜான்வி கபூர் நடிப்பில் ரொமாண்டிக் ஸ்போர்ட்ஸ் டிராமாவாக வெளியாகியுள்ள ''Mr.& Mrs.Mahi'' படத்தின் விமர்சனம் குறித்து இங்கே காண்போம்.
கதைக்களம்
இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற வேண்டும் என்ற கனவுடன் கிளப் அணியில் விளையாடி வருகிறார் மஹேந்திர அகர்வால் (ராஜ்குமார் ராவ்). ஆனால், கிளப் போட்டி ஒன்றில் கடைசி பந்தில் அவரது அணி தோல்வியடைகிறது. இதனால் 2017ஆம் ஆண்டில் அவர் தேர்வாக முடியவில்லை.
ஸ்போர்ட்ஸ் ஷாப் வைத்திருக்கும் தன் அப்பாவிடம் வந்து 'இன்னொரு வருஷம் சான்ஸ் கொடுங்க நான் கண்டிப்பா இந்தியா டீமில் செலக்ட் ஆகிடுவேன்' என்று மஹேந்திரா கெஞ்சுகிறார்.
மகனை கண்டிக்கும் அப்பா குமுத் மிஸ்ரா, அவருக்கு டாக்டரான மஹிமாவை (ஜான்வி கபூர்) திருமணம் செய்து வைத்து, கடையை பார்த்துக் கொள்ள சொல்கிறார்.
ஒரு கட்டத்தில் ஜான்வி கபூருக்கு கிரிக்கெட் விளையாடும் ஆர்வம் இருப்பதை அறிந்துகொண்ட மஹேந்திரா, அவரை மகளிர் இந்திய அணியில் விளையாட வைக்க முயற்சிக்கிறார். அதன் பின்னர் மஹிமா இந்திய அணியில் இடம்பிடித்தாரா? மஹேந்திராவின் கனவு நிறைவேறியதா என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
அப்பாவுக்கு கட்டுப்பட்ட பிள்ளையாக இருக்கும் ராஜ்குமார் ராவ், அவரது பாராட்டை பெற வேண்டும் என்று போராடுகிறார். பயிற்சியாளரிடம் வாய்ப்பு கேட்கும் இடத்திலும், ஜான்வி கபூருக்கு பயிற்சி கொடுக்கும் இடத்திலும் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.
அதேபோல் ஜான்வி கபூர் கிரிக்கெட் வீராங்கனை கதாபாத்திரத்தை நேர்த்தியாக செய்திருக்கிறார். அவர் அடிக்கும் ஒவ்வொரு சிக்ஸர் ஷாட்டும், படத்திற்காக அவர் எடுத்திருக்கும் சிரத்தையை காட்டுகிறது.
மனைவியின் வெற்றியில் தனக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் ராஜ்குமார் ராவ், அது கிடைக்காமல் போகும் இடத்தில் மனமுடைவது பார்வையாளர்களை உருக செய்கிறது.
கணவன், மனைவி இடையேயான காதல், ஊடல் என அனைத்தும் சிறப்பாக கையாண்டிருக்கிறார் இயக்குனர் ஷரண் ஷர்மா. பாடல்கள் ரசிக்கும் வகையில் இருந்தாலும், ஜான் ஸ்டீவர்ட் எடுரியின் பின்னணி இசை சிறப்பு.
க்ளாப்ஸ்
நேர்த்தியான திரைக்கதை
எமோஷனல் காட்சிகள்
யதார்த்த நடிப்பு
பல்ப்ஸ்
பெரிதாக ஒன்றும் இல்லை