முஃபாசா: தி லயன் கிங் திரைவிமர்சனம்
ஹாலிவுட் படங்களில் அனிமேஷன் படங்களுக்கு என்று மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் உள்ளது. அதிலும் நம்ம ஊர் ரஜினி படங்கள் போல் லயன் கிங் படங்களை எப்படி எடுத்தாலும் பார்க்க ஒரு பெருங்கூட்டம் இருக்கும், அந்த வகையில் முபாசா-வின் வாழ்க்கை வரலாறாக இன்று வந்துள்ள Mufasa: The Lion King எப்படி என்பதை பார்ப்போம்.
கதைக்களம்
கியாராவிற்கு ரபிகி கதை சொல்வதிலிருந்து படம் ஆரம்பிக்கிறது. குட்டி பையனாக இருக்கும் முபாசா ஒரு வெள்ளத்தால் தன் குடும்பத்தை பிரிந்து வேறு இடத்திற்கு செல்கிறான்.
அங்கு முபாசாவை அந்த ஊர் சிங்கராஜா ஏற்க மறுத்தாலும், அவருடைய மனைவி முபாசாவை தன் சொந்த மகன் போல் வளர்க்கிறார்.
அந்த சமயத்தில் வெள்ளை சிங்கங்களின் தலைவன் கியார்க் மூலம் பெரும் ஆபாத்து வர, முபாசாவுடன் தன் சொந்த மகன் டாக்காவை ராஜா அனுப்பி வைக்கின்றார்.
முபாசாவும் போகும் வழியில் சில நண்பர்களை உருவாக்கி அவர்களுடன் மிலல் என்ற இடத்தை நோக்கி செல்ல, பின்னே வெள்ளை சிங்கங்களும் துரத்தி வர பின் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
சிம்பாவின் வாழ்க்கையை பார்த்த நாம் அவனின் அப்பா முபாசாவின் வரலாறையும் இதில் தெரிந்துக்கொள்ளலாம். முபாசா எப்படி தன் மிலல் இடத்தை அடைந்து ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்கினான் என்பதை அத்தனை தத்ரூபமாக காட்டியுள்ளனர்.
அதிலும் VFX வேலைப்பாடுகளுக்கு எழுந்து நின்று சல்யூட் அடிக்கலாம், 3டி காட்சியில் அத்தனை அழகு ஒவ்வொரு Frame-ம். ஆரம்பத்தில் யானை மோதி அணை உடைந்து வெள்ளத்தில் அடித்து செல்லும் முபாசா கடைசி வரை தண்ணீருக்கு பயந்து கிளைமேக்ஸில் அதே தண்ணீரில் மீண்டு வருவது என ஒரு மாஸ் படம் போல் எடுத்துள்ளனர்.
தமிழ் ரசிகர்களுக்கு கூடுதல் போனஸாக அர்ஜுன் தாஸ், அசோக் செல்வன், நாசர், சிங்கம் புலி, ரோபோ ஷங்கர், விடிவி கணேஷ் குரல்கள் மேலும் காட்சிகளை ஈர்க்க வைக்கிறது.
அதிலும் கியார்க் வில்லனாக வரும் நாசர் குரல் அத்தனை மிரட்டல். இரண்டு நண்பர்கள் அண்ணன் தம்பி போல் வளர, ஒரு பெண் சிங்கம் மீது காதல் டாக்காவுக்கு வர, அந்த பெண் சிங்கம் முபாசாவை விரும்ப, டாக்கா ஸ்கார்க் ஆக எப்படி மாறுகிறான் என்பதை காட்டியுள்ளனர், அட இது நம்ம ஊர் பாகுபலியாச்சே என்று தியேட்டரிலே கமெண்ட் வருவதை பார்க்க முடிந்தது(இதிலிருந்து தான் பாகுபலி உருவாகியுள்ளது என்பது நன்றாக தெரிகிறது).
வெறும் முபாசா கதை மட்டுமில்லாமல் ரபிகி(குரங்கு) கதையும் காட்டி அதையே வழிகாட்டியாக கொண்டு வந்தது ரசிக்க வைத்தது. ஆனால், சிம்பாவின் கதையிலிருந்த ஒரு அட்வெஞ்சர் இதில் மிஸ்சிங், எண்ணி 2,3 இடத்திலேயே பரபரப்பு வருகிறது.
மற்றப்படி படம் முழுவதும் வசனங்களை வைத்தே நகர்த்தியது கொஞ்சம் ஏமாற்றம், ஆனால், படத்தின் பின்னணி இசை முழுப்படத்தையும் தாங்கி பிடிக்கிறது.
க்ளாப்ஸ்
படத்தின் கதைக்களம்.
VFX காட்சிகள், பின்னணி இசை.
யானை கூட்டத்தில் வெள்ளை சிங்கங்கை அலைய விட்டு தப்பிக்கும் இடம்.
தமிழ் டப்பிங்
எல்லோரும் சமம் என்ற சமூகநீத வசனங்கள் விலங்குகள் படத்தில் வைத்தது.
பல்ப்ஸ்
இன்னும் கொஞ்சம் சாகச காட்சிகளை அதிகப்படுத்திருக்கலாம்.
அடிக்கடி வரும் பாடல்கள்.