நாய் சேகர் திரைவிமர்சனம்
ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் சாய் சேகர். சதீஸ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தின் மூலம் பவித்ரா கதாநாயகியாக அறிமுகம் ஆகியுள்ளார். குழந்தைகளுக்கு பிடித்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களின் முழு எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ததா..? இல்லையா..? வாங்க பார்க்கலாம்..
கதைக்களம்
ஆராய்ச்சியாளரான ஜார்ஜ் மரியான், விலங்குகளை வைத்து மரபணு சோதனை நடத்தி வருகிறார். ஐ.டி கம்பெனியில் பணிபுரிந்து வரும் சதீஸ், ஜார்ஜ் மரியான் பக்கத்து வீட்டில் வசித்து வருகிறார். ஜார்ஜ் மரியான் வளர்த்து வரும் நாய் சதிஸை எதிர்பாராமல் கடித்து விடுகிறது.
இதிலிருந்து நாயின் குணாதிசயங்கள் சதீஸுக்கு வர துவங்குகிறது. இதனால், சதிஸின் வாழ்க்கையில் எதிர்பாராத பல பிரச்சனைகளும், மாற்றங்களும் ஏற்படுகிறது. இதன்பின், மாற்று மருந்து தயாரான நிலையில் கடித்த நாய் காணாமல் போகிறது. இறுதியில் காணாமல் போன நாய் கிடைத்ததா..? சதிஸ் மனிதனாக மாறினாரா..? இல்லையா..? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த சதிஸ் இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். காமெடியை விட சென்டிமென்ட், காதல், நடனம் என தனது திறமையை நிரூபித்திருக்கிறார். நாயாக குணாதிசயங்கள் வந்தவுடன் நாயைப் போல் நடிப்பதில் ஸ்கோர் செய்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் பவித்ரா லட்சுமி தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.
நாய்க்கு பின்னணி குரல் கொடுத்திருக்கும் மிர்ச்சி சிவா ஒரு சில இடங்களில் ரசிக்க வைத்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் தனக்கான கதாபாத்திரத்தில் சிறப்பாக விளங்குகிறார்கள். இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்திருக்கிறார் இயக்குனர் கிஷோர் ராஜ்குமார்.
மெதுவாக ஆரம்பிக்கும் திரைக்கதை போகப்போக வேகமெடுத்து இறுதியில் சிரிப்போடு முடித்து இருக்கிறார். அஜீஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பு. சிவகார்த்திகேயன் எழுதி அனிருத் இசையமைத்துள்ள ' எடக்கு முடக்கு' பாடலும் ரசிக்க வைக்கிறது. பிரவீன் பாலுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்க்கிறது.
க்ளாப்ஸ்
சதீஸ் நடிப்பு
கதைக்களம்
பல்ப்ஸ்
சில காட்சிகளில் நகைச்சுவை பெரிதளவில் ஒர்கவுட் ஆகவில்லை
துவக்கத்தில் திரைக்கதை கொஞ்சம் ஸ்லொவ்
மொத்தத்தில் குடும்ப ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக நாய் சேகர் அமைந்துள்ளது..
2.75 / 5