நண்பன் ஒருவன் வந்த பிறகு திரை விமர்சனம்
அறிமுக இயக்குநர் அனந்த் ராம் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகியுள்ள நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் விமர்சனம் குறித்து இங்கே காண்போம்.
கதைக்களம்
ஹீரோ அனந்த் சிறுவயதில் சென்னையில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு குடும்பத்துடன் இடம்பெயர்கிறார்.
அங்குள்ள சிலருடன் நண்பராக அவர் வளர்ந்த பின்னர், சொந்தமாக நண்பர்களுடன் சேர்ந்து Startup ஒன்றை தொடங்குகிறார்.
ஆனால் அதில் ஒரு சிக்கல் ஏற்பட்டு தோல்வியில் முடிந்ததால் நண்பர்கள் ஒவ்வொருவராக பிரிந்து வேலைக்கு செல்கிறார்கள்.
இதனால் தனியாளான அனந்த்குடும்பத்திற்காக சிங்கப்பூர் செல்கிறார். அதன் பின்னர் அவர் நினைத்த வாழ்க்கை அவருக்கு கிடைத்ததா? நண்பர்களுடன் மீண்டும் அவர் இணைந்தாரா என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
'மீசைய முறுக்கு' படத்தில் ஹிப்ஹாப் ஆதியின் தம்பியாக நடித்த அனந்த் ராம் தான் இப்படத்தின் ஹீரோ மற்றும் இயக்குநர்.
விமானத்தில் சக பயணியான வெங்கட் பிரபுவிடம் அனந்த் தனது வாழ்வில் நடந்த சம்பவங்களை கூறுவது போல் கதை துவங்குகிறது.
90's கிட்ஸ் வாழ்க்கையை பள்ளி, கல்லூரி வரை காட்டியது ஓரளவுக்கு ஈர்க்கும் வகையில் இருந்தாலும், அதன் பின்னரான காட்சிகள் பெரிதளவில் ஈர்க்கவில்லை.
ஹீரோவின் வாழ்க்கையை ஒவ்வொரு கட்டமாக பிரித்து காட்டியிருக்கிறார்கள். ஆனால் அதில் சுவாரஸ்யமான சம்பவங்கள் எதுவும் இல்லாததால் திரைக்கதையில் தொய்வை காண முடிகிறது.
படத்தின் நாயகனின் லட்சியம் என்று ஒன்றை கூறுகிறார். ஆனால் அதில் பெரிய அழுத்தம் இல்லை. மேலும் அதற்கான போராட்டம் என்றும் ஒன்று இல்லை என்பதால் இரண்டாம் பாதி ரொம்பவே சோதிக்கிறது.
காதல் காட்சிகளில் அழுத்தம் இல்லாததால் அதில் வரும் சிறு சிறு பிரச்சனைகளும் பார்வையாளர்களுடன் எந்த வகையில் ஒட்டவில்லை.
காமெடி காட்சிகள் எதுவும் ஒர்க்அவுட் ஆகவில்லை. இதனால் பல கதாபாத்திரங்கள் இருந்தும் கதை ஓட்டம் தள்ளாடுகிறது. மேலும், நடிப்பில் ஹீரோவை விட அவரது நண்பராக வரும் ஆர்.ஜே.விஜய் அதிகம் ஸ்கோர் செய்கிறார்.
விடுதலை படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய பவானி ஸ்ரீ தான் படத்தின் நாயகி என்றாலும், அவருக்கு நடிப்பதற்கான காட்சிகள் மிகவும் சொற்பம் என்பது தான் மிகப்பெரிய மைனஸ்.
க்ளாப்ஸ்
ஒளிப்பதிவு
ஆர்.ஜே.விஜய்யின் நடிப்பு
பல்ப்ஸ்
தெளிவில்லாத கதை
அழுத்தம் இல்லாத கதாபாத்திரங்கள்
சுவாரஸ்யம் இல்லாத காட்சியமைப்புகள்
மொத்தத்தில் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' எந்த மாற்றமும் (ரசிக்கும்படி) ஏற்படவில்லை.