'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிக்கும் 'ஹிட் - தி தேர்ட் கேஸ்' ( HIT - The Third Case) படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

By Parthiban.A Apr 26, 2025 11:10 PM GMT
Report

'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிப்பில் இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் வால் போஸ்டர் சினிமா மற்றும் யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள 'ஹிட் -தி தேர்ட் கேஸ் ' எனும் திரைப்படம் எதிர்வரும் மே மாதம் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தை தமிழில் சினிமாக்காரன் நிறுவனம் வெளியிடுகிறது.

தற்போது படக்குழுவினர் படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் நானி, நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, படத்தினை தமிழகம் முழுவதும் வெளியிடும் விநியோகஸ்தர் வினோத் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடிகர் நானி பேசுகையில், '' நான் எப்போது சென்னைக்கு வந்தாலும் என்னுடைய சொந்த வீட்டுக்கு வந்த உணர்வு ஏற்படும். விரைவில் பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் தமிழில் பேசும் அளவிற்கு பயிற்சி பெற்றுக்கொண்டு பேசுவேன்.

பலமுறை என்னை வடிவமைத்தது தமிழ் சினிமா தான் என சொல்லி இருக்கிறேன். 2012 - 13 ஆம் ஆண்டில் சென்னையிலிருந்து புறப்பட்டு ஹைதராபாத் சென்றேன். இருந்தாலும் தற்போது வரை தமிழக மக்களின் அன்பு - தமிழ் ரசிகர்களின் அன்பு அதிகமாகிக் கொண்டே தான் இருக்கிறது. தமிழில் நடிப்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன். பொருத்தமான வாய்ப்பு கிடைத்தால் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும்.

'ஹிட் தி தேர்ட் கேஸ்' படத்திற்காக மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஹிட் படத்தின் இரண்டு பாகங்களும் தமிழில் வெளியாகியிருக்கும் என நினைக்கிறேன். ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்கிறேன். 'ஹிட் -தி தேர்ட் கேஸ் ' இது ஒரு படம் அல்ல. அற்புதமான அனுபவத்தை தரும் படைப்பு. முதல் இரண்டு படத்திற்கு இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. 'ஹிட் 1 ', 'ஹிட் 2 'படத்தில் இடம் பெற்ற சில கதாபாத்திரங்கள் இதிலும் வரக்கூடும். ஆனால் படத்தின் கதை புதிது. கதை சொல்லும் பாணி புதிது. திரையரங்குகளில் ரசிகர்கள் பார்த்து கொண்டாடுவதற்கான அனைத்து அம்சங்களும் இந்த படத்தில் இருக்கிறது.

ஏனைய இரண்டு பாகங்களை விட 'ஹிட் தி தேர்ட் கேஸ்' படத்தை திரையரங்குகளில் பார்க்கும்போது ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவம் கிடைக்கும் என்பதை மட்டும் உறுதியாக சொல்கிறேன். இந்தப் படத்தில் நான் நடித்திருப்பதற்காக மட்டுமல்ல.. இப்படத்தில் இடம் பிடித்திருக்கும் சில விசயங்கள் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.

நான் நடிக்கும் படத்திற்கு தெலுங்கு மக்களை கடந்து தமிழ் மற்றும் மலையாள ரசிகர்கள் சரியான விமர்சனத்தை முன் வைப்பார்கள். கொண்டாடுவார்கள். ரசிப்பார்கள்.‌ அதிலும் தமிழ் ரசிகர்களின் அன்பு எப்போதும் மகிழ்ச்சியானதாகவே இருக்கும்.

'ஹிட் - தி தேர்ட் கேஸ் 'படத்தை இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கியிருக்கிறார். சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். மிக்கி ஜே மேயர் இசையமைத்திருக்கிறார். இவர்கள் படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அதிலும் மிக்கி ஜே மேயரின் பின்னணி இசை உங்களை நிச்சயமாக கவரும்.

இது ஒரு அரிதான திரில்லர் திரைப்படம். இன்வெஸ்ட்டிகேட் திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தில் அமைந்திருக்கும் எல்லா விசயங்களும் உயர்தரம் கொண்டவை. அந்த வகையில் இந்த படம் மாஸான கமர்சியல் என்டர்டெய்னர். ஆனால் அதே சமயத்தில் வழக்கமான கமர்ஷியல் படமாக இது இருக்காது. இந்தப் படம் வெளியான பிறகு நீங்களே உங்களுடைய நண்பர்களிடத்தில் படத்தைப் பற்றி சொல்லி, மீண்டும் திரையரங்கில் வந்து பார்ப்பீர்கள்.

  இந்தத் திரைப்படத்தில் எனக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். அவர் திரையில் தோன்றும் காட்சிகள் அனைத்தும் அனைவருக்கும் பிடிக்கும். படப்பிடிப்பு தளத்தில் அவருடன் பணியாற்றிய தருணங்கள் அனைத்தும் மறக்க முடியாதவை.இந்த திரைப்படத்தை தமிழில் வெளியிடும் சினிமாக்காரன் நிறுவனத்தின் வினோத் குமாருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்வரும் மே மாதம் முதல் தேதியன்று 'ஹிட்' - 'ரெட்ரோ' என இரண்டு படங்களும் வெளியாகிறது. இரண்டு திரைப்படங்களும் வெற்றி பெற வேண்டும். '' என்றார்.

நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி பேசுகையில், '' 'கே ஜி எஃப் ஒன்' , 'கே ஜி எப் 2', 'கோப்ரா' ஆகிய படங்களில் நடித்திருக்கிறேன். அப்படத்தினை விளம்பரப்படுத்தும் போது தமிழக ரசிகர்களையும் சந்தித்து இருக்கிறேன். தமிழ் ரசிகர்கள் வெளிப்படுத்தும் அன்பை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

ஹிட்- 3 நான் நடித்திருக்கும் முதலாவது தெலுங்கு படம்.‌ இரண்டரை ஆண்டுகள் காத்திருந்து தெலுங்கில் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறேன். இயக்குநர் சைலேஷ் கொலானு அற்புதமாக படத்தை இயக்கியிருக்கிறார். அனைவருக்கும் பிடித்த 'நேச்சுரல் ஸ்டார் 'நானியுடன் இணைந்து நடித்திருக்கிறேன். 'கே ஜி எஃப் 2 ' படம் 2022 இல் வெளியானது. அதன் பிறகு என்னை நினைவு வைத்துக் கொண்டு இயக்குநர் சைலேஷ் கொலானு- நானி ஆகிய இருவரும் இந்த கதாபாத்திரத்திற்காக என்னை தேர்ந்தெடுத்ததை மகிழ்ச்சியாக கருதுகிறேன். இதற்காக அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை சொல்கிறேன்.

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது நானியின் ரசிகையாக இருந்தேன். அவருடன் இணைந்து நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்குமா.! என காத்திருந்தேன். என் கனவு நனவாகி இருக்கிறது. ஆனால் இந்த ஜானரிலான படத்தில் இணைந்து நடிப்பேன் என எதிர்பார்க்கவில்லை. உண்மையிலேயே இது சந்தோஷத்தை அளிக்கிறது.‌

இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும். மே முதல் தேதியன்று திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

விநியோகஸ்தர் ' சினிமாகாரன் ' வினோத் குமார் பேசுகையில், '' 'குடும்பஸ்தன்' திரைப்படத்திற்கு பிறகு 'ஹிட்- தி தேர்ட் கேஸ்' படத்தை வெளியிடுகிறேன். இதற்காக வால்போஸ்டர் சினிமா மற்றும் யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் 'கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்' எனும் திரைப்படத்தில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றிக் கொண்டிருந்தேன். எங்கள் படமும், 'ஹிட் 1 ' திரைப்படமும் ஒரே நாளில் வெளியானது. இரண்டு படமும் வெற்றி பெற்றது. தற்போது 'ஹிட் 3' படத்திற்கு நான் விநியோகஸ்தராகி இருக்கிறேன். இது எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியை அளிக்கிறது.

இந்தப் படத்தில் நானி சார் நடித்திருக்கிறார். அவர் நடிப்பதற்காக தேர்வு செய்யும் அனைத்து படங்களும் நன்றாகவே இருக்கும். தொடர்ந்து அவர் ஹிட் படங்களை வழங்கிக் கொண்டிருக்கிறார். ஹிட் 3 எனும் படம் ஏற்கனவே ஹிட்டான இரண்டு பாகங்களில் தொடர்ச்சியாக வெளியாகும் மூன்றாவது பாகம். இதில் நானி இருப்பதால் நிச்சயம் பெரிய அளவில் வெற்றியைப் பெறும்.

ஸ்ரீநிதி ஷெட்டி ஏற்கனவே 'கே ஜி எஃப் ', 'கோப்ரா' போன்ற வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் திறமைசாலிகள்.‌ அதனால் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என நம்புகிறேன்.'' என்றார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US