நட்சத்திரம் நகர்கிறது திரைவிமர்சனம்
பா.ரஞ்சித்தின் அடுத்த படைப்பாக வந்திருக்கிறது 'நட்சத்திரம் நகர்கிறது'. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவில் சகஜமாக வரும் காதலை கூட எப்படி இந்த உலகத்தில் ஜாதி என்கிற சமூக கட்டமைப்பு நசுக்குகிறது என்பது தான் 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தின் கரு.
படம் எப்படி இருக்கிறது? வாங்க ,முழு விமர்சனத்தையும் பார்க்கலாம்.
கதை
ரெனே (துஷாரா) மற்றும் இனியன் (காளிதாஸ் ஜெயராம்) ஆகியோரின் படுக்கையரை உரையாடல் தான் படத்தின் ஓப்பனிங் காட்சி. துஷாரா இளையராஜா பாடலை பாடிக்கொண்டிருக்க இனியனுக்கு அது எரிச்சலை தருகிறது. அந்த வாக்குவாதத்தில் 'புத்தி மாறவே இல்லை' என ஜாதியை மறைமுகமாக இனியன் பேசியதால் இருவரும் பிரேக்கப் செய்கிறார்கள்.
பாண்டிச்சேரியில் அவர்கள் இருவரும் ஒன்றாக ஒரு தியேட்டர் குரூப்பில் தான் இருந்து வருகிறார்கள். அதே டீமில் வந்து இணைகிறார் அர்ஜுன் (கலையரசன்). பெரிய ஹீரோ ஆகவேண்டும் என்கிற நோக்கத்தில் அவர் வந்திருப்பார். ஆரம்பத்திலேயே அவருக்கும் டீமில் மற்றவர்களுக்கும் கருத்து மோதல் வருகிறது.
அதே டீமல் ஒரு ஆண் - ஆண் இடையே காதல், ஒரு பெண் மற்றொரு பெண்ணுடன் காதல், ஒரு ஆணை திருமணம் செய்துகொண்ட திருநங்கை என பல விதமான நபர்கள் இருக்கின்றனர். காதல் பற்றி ட்ராமா போடவேண்டும் என அவர்கள் யோசிக்கும்போதே தான் பிரச்சனையே தொடங்குகிறது. ஜாதியை காரணம் காட்டி நடத்தப்படும் ஆணவ கொலைகளை பற்றியது தான் அந்த நாடகம்.
கருத்தியல் முரண்கள், சொந்த விருப்பு வெறுப்புகள், டீமில் இருப்பவர்களின் காதல் பிரச்சனைகள் போன்ற அனைத்தையும் தாண்டி அவர்கள் அந்த நாடகத்தை இறுதியாக மக்கள் மத்தியில் நடித்து காட்டினார்களா இல்லையா என்பது தான் மீதி படம்.
படத்தை பற்றிய அலசல்
ரெனே என தனக்கு தானே பெயர் சூட்டிக்கொண்ட 'தமிழ்' என்ற ரோலில் நடித்து இருக்கும் துஷாரா விஜயன் நடிப்பில் கவர்கிறார். எதையும் தைரியமாக முடிவெடுக்கும், பிரச்னையை தைரியமாக எதிர்கொள்ளும் ஒரு பெண்ணாக அவர் மிரட்டி இருக்கிறார். திமிரான உடல்மொழி, எனக்கு என்ன வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்வேன் என இப்படி ஒரு ஹீரோயின் கதாபாத்திரத்தை தமிழ் சினிமாவில் பார்ப்பது அரிது.
ஒருவர் குடித்துவிட்டு தன்னிடம் தகாத விதத்தில் நடத்தபோது அவரை அடித்து உதைத்துவிட்டு, அவரை குரூப்பை விட்டு வெளியில் அனுப்ப வேண்டும் என எல்லோரும் சொல்லும்போது, அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கலாம் என பேசுவார் அவர். "Political correctness ஒரே நாளில் வந்துவிடாது, ஒவ்வொரு நாளும் செய்யும் தவறை உணர்ந்து தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும், அது lifetime process" என அவர் பேசும் வசனங்கள் எல்லாம் கவனம் ஈர்க்கிறது. இப்படி ஒரு ரோலை வடிவமைத்ததற்காக பா.ரஞ்சித்தை பாராட்டலாம்.
அடுத்து கலையரசன் ரோல் தான் அதிகம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. ஆரம்பத்தில் ஆதிக்க மனப்பான்மையில் குழுவிற்குள் வந்து, அதன் பின் ஜாதி என்கிற பெயரில் நடக்கும் அரசியல் பற்றி உணர்ந்த மனம் மாறுவார் அவர். தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குடித்துவிட்டு ரகளை செய்யும் காட்சியில் நடிப்பில் மிரட்டி இருப்பார்.
இனியனாக நடித்து இருக்கும் காளிதாஸ் ஜெயராம் அவருக்கு கொடுக்கப்பட்ட ரோலை கச்சிதமாக நடித்து கொடுத்திருக்கிறார். மற்ற நடிகர்களின் நடிப்பும் குறைசொல்ல முடியாத அளவில் தான் இருந்தது.
பாசிட்டிவ்
- பா.ரஞ்சித்தின் போல்டான கதை - ஜாதி என்கிற பெயரில் ஒடுக்கப்பட்ட மக்கள் காலம்காலமாக சந்தித்து வரும் பிரச்சனைகள் பற்றி பேசுவதோடு மட்டுமின்றி, சமகாலத்தில் ஒரு குறிப்பிட்டஜாதியினர் செய்வது நாடக காதல் என முத்திரை குத்துபவர்களுக்கு பதிலடியாவே இப்படி ஒரு கதையை எழுதியிருப்பார் போல பா.ரஞ்சித்.
- இந்த படத்தை பார்த்து முடிக்கும்போது இந்த சமூகத்தின் மீது, ஜாதி வேற்றுமை பற்றி நமக்கு இருக்கும் பார்வை பற்றி நம் மனதிற்குள் நிச்சயம் ஒரு கேள்வி எழும்.
- குறை சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பாக இருக்கும் ஒளிப்பதிவு மற்றும் இசை.
நெகடிவ்
படத்தின் நீளம் தான் ஒரே நெகடிவ். கிலோமீட்டர் கணக்கில் நீளும் சில வசனங்களை குறைத்து, படத்தின் வேகத்தை கூட்டி இருக்கலாம். படத்தின் முதல் பாதியில் ஒரு சில காட்சிகள் பொறுமையை சோதிக்கவும் செய்கின்றன. நீளத்தை இன்னும் குறைத்திருக்கலாம்.
மொத்தத்தில் 'நட்சத்திரம் நகர்கிறது' பா.ரஞ்சித்தின் கெரியர் பெஸ்ட் படங்களில் ஒன்று. நிச்சயம் சிந்திக்க வைக்கும்.
ரேட்டிங்: 3.5 / 5