நெல்லிக்கம்போயில் நைட் ரைடர்ஸ்: திரை விமர்சனம்
மேத்யூ தாமஸ் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகியுள்ள நெல்லிக்கம்போயில் நைட் ரைடர்ஸ் திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே பார்ப்போமா.

கதைக்களம்
நெல்லிக்கம்போயில் என்ற ஊரில் துடிப்பான இளைஞராக வலம் வரும் ஷியாம், தனது நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, காதல் செய்வது என லூட்டி அடிக்கிறார். ஆனால் அவருக்கு இருட்டு என்றாலே ஒரு பயம்.
அதற்கு காரணம் சோதி சேச்சியின் ஆவிதான். அவரது கண்ணுக்கு மட்டுமே தெரியும் ஆவி, இருட்டான சூழலில் ஷியாம் முன் தோன்றி அவரை பயமுறுத்துகிறது. இதனாலேயே இரவில் அவர் டார்ச்லைட் வைத்துக் கொண்டே இருப்பார். இந்த சூழலில் குதிரைக்காரன் என்ற வினோத உருவம் இரவு வேளையில் சிலரை தாக்குகிறது.

அதனை பிடிக்க சிலர் முற்படும்போது பலமாக தாக்கப்படுகின்றனர். இந்த நிலையில் ஷியாமின் காதலி தன்யாவையும் குதிரைக்காரன் தாக்க, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலைக்கு ஆளாகிறார். ஆனால் அந்த குதிரைக்காரனை தன்னிடம் பிடித்து தர வேண்டும் என்று அவர் ஷியாமிடம் கேட்கிறார்.
அதற்கு பயத்தால் முதலில் தயங்கும் ஷியாம், பிறகு தான்யா மீதான காதலால் ஒப்புக்கொள்கிறார். பின்னர் ஷியாம் எப்படி தனது நண்பர்களுடன் சேர்ந்தது குதிரைக்காரனை பிடித்தார்? அவரை மிரட்டும் சோதி சேச்சியிடம் இருந்து அவர் தப்பித்தாரா என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்
2000களில் நடக்கும் கதையாக இப்படம் தொடங்குகிறது. ஹாரர், காமெடி ஜனார் என்று படக்குழு கூறினாலும் பயமுறுத்தும் காட்சிகள்தான் ஈர்க்கின்றன. பல இடங்களில் இயக்குநர் நௌபால் அப்துல்லா நம்மை சிரிக்க வைக்க முயற்சித்தாலும், பெரிதும் பார்த்து பழகிய காமெடி காட்சிகள் என்பதால் வாய்விட்டு சிரிக்க முடியவில்லை.
ஷியாம் கதாபாத்திரத்தில் மேத்யூ தாமஸ் சிறப்பான நடிப்பை தந்துள்ளார். பேயைப் பார்த்து பயப்பட்டாலும், ஆக்ஷ்ன் காட்சிகளிலும் மிரட்டுகிறார். கதாநாயகி மீனாக்ஷிக்கு (தன்யா கதாபாத்திரம்) பெரிய வேலை இல்லை.

சோதி சேச்சியாக வரும் மெரின் பிலிப் தோன்றும் காட்சிகள் எல்லாம் பயத்தை கூட்டுகின்றன. அந்தளவிற்கு அட்டகாசமாக மேக்கப் செய்திருக்கிறார்கள். அதேபோல் குதிரைக்காரன் கதாபாத்திரம் வரும் காட்சிகளும் மிரட்டுகின்றன.
முதல் பாதி ஓரளவு நன்றாக செல்கிறது. இரண்டாம் பாதியில் குதிரைக்காரன் யார் என்று தெரிந்த பின் கதை முடிந்திருக்க வேண்டும். ஆனால், ஹீரோ கேங்கிற்கும் குதிரைக்காரனுக்குமான சவால் என திரும்ப திரும்ப ஒரே காட்சியை பார்ப்பது போன்ற சலிப்பை ஏற்படுத்திதான் கிளைமேக்ஸ் வருகிறது. குதிரைக்காரனுக்கான பிளாஷ்பேக் சிறப்பு.

யூகிக்க முடியாத திரைக்கதை, அடுத்தடுத்த திருப்பங்கள்.. அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய மிஸ்ட்ரி திரில்லர் வெப் சீரிஸ்
பின்னணி இசை மற்றும் இசைக்கலவை படத்திற்கு பெரிய பலம். அபிலாஷ் ஷங்கரின் கேமரா கிராமத்தை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறது. தமிழ் கதாபாத்திரம் ஒன்றை நெகட்டிவாக காட்டுவதை இப்படத்திலும் தொடர்வது நெருடல். வையாபுரியின் கேமியோ அட நம்ம ஆளு என்று தோன்ற வைக்கிறது.
க்ளாப்ஸ்
கதை
பின்னணி இசை
சண்டைக்காட்சிகள்
ஜம்ப்ஸ்கேர் மொமெண்ட்ஸ்
பல்ப்ஸ்
திரைக்கதையில் சுவாரஸ்யத்தை கூட்டியிருக்கலாம்
காமெடிக்கு இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்
மொத்தத்தில் இந்த நெல்லிக்கம்போயில் நைட் ரைடர்ஸ் புலி வேட்டையாடுவார்கள் என்று பார்த்தால், எலி வேட்டையாடியிருக்கிறார்கள். ஹாரர் மொமெண்ட்ஸை விரும்புபவர்களை இப்படம் ஈர்க்கும்.
