சர்வம் மாயா திரை விமர்சனம்
சர்வம் மாயா
நிவின் பாலி, அஜூ வர்ஜீஸ், ரியா சுபு, பிரீத்தி முகுந்தன் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள சர்வம் மாயா மலையாள திரைப்படத்தின் விமர்சனத்தை பார்ப்போம் வாங்க.

கதைக்களம்
நம்பூதிரி குடும்பத்தைச் சேர்ந்த பிரப்இந்து (நிவின் பாலி) அப்பாவைப் போல் பூஜை, ஹோமம் செய்வதில் ஈடுபாடு இல்லாமல் கிட்டார் இசைக்கலைஞராக சினிமாவில் முயற்சி வருகிறார்.
கடவுள் நம்பிக்கை இல்லாத பிரப்இந்து தனது இசைக்குழுவுடன் வெளிநாட்டிற்கு 2 மாதங்கள் பயணிக்க இருக்கிறார். ஆனால் அவருக்கு மட்டும் விசா ஏற்பாடு செய்யப்படவில்லை. இதனால் இரண்டு மாதங்களுக்கு வேலையில்லாமல் என்ன செய்வது என்று யோசிக்க, அவரது உறவினர் ரூபேஷுடன் பூஜைகள் செய்ய உதவியாளராக செல்கிறார்.
ஒரு நாள் ரூபேஷுக்கு அடிபட்டு ஓய்வெடுக்க வேண்டிய நிலை வருவதால், பேயை ஓட்டும் வேலைக்கு பிரப்இந்துவை அனுப்புகிறார் ரூபேஷ். அங்கு அவருக்கு தெரியாமலேயே பள்ளிக்கூட மாணவனின் உடலில் இருந்து ஆவி வெளியேறி விடுகிறது.

பின்னர் அந்த ஆவி தனது வீட்டில் தன்னுடன் இருப்பதை அறிகிறார் பிரப்இந்து. ஆனால், பேய் போல் இல்லாமல் சாதாரண பெண்ணாக அந்த ஆவி பழகுகிறது. அதன் பின்னர் அந்த ஆவியின் பின்னணி என்ன? நிவின் பாலி எப்படி அதற்கு மோட்சத்தை பெற்றுத்தந்தார் என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
பிரப்இந்து என்ற கதாபாத்திரத்தில் நிவின் பாலி அட்டகாசமாக நடித்துள்ளார். காமெடியையும், எமோஷனையும் தனது நடிப்பின் மூலம் நேர்த்தியாக கடத்துகிறார். ரியா சுபுவுடன் அவர் பயணிக்கும் காட்சிகள் எல்லாமே சுவாரஸ்யமாக உள்ளன.
குறிப்பாக, கடவுள் பற்றிய புரிதல் பற்றி ரியா கூறும் காட்சி மிக சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. படம் முழுக்க ரியா சுபுதான் ஆக்கிரமிக்கிறார். இவ்வளவு அழகான பேய் கூடவே இருந்தால் யார்தான் பயப்படுவார்கள் என்பதுபோல், அவர் ஒவ்வொரு காட்சியிலும் அழகாக தெரிவதுடன் தனது குறும்புத்தனத்தால் ரசிக்க வைக்கிறார்.

அதே சமயம் பொசசிவ் ஆவது, உடைந்து அழுவது போன்ற காட்சிகளிலும் ரியா ஸ்கோர் செய்துள்ளார். ரூபேஷாக அஜூ வர்கீஸ் காமெடியில் கலக்குகிறார். நிவின் பாலியின் அப்பாவாக நடித்திருக்கும் ரகுநாத் பலேரி ஒரு காட்சியில் நம்மை எமோஷனல் ஆக்குகிறார்.
பிரீத்தி முகுந்தனுக்கு நல்ல கதாபாத்திரம். அதனை அவரும் நேர்த்தியாக ஒரு பாடலுக்கு நடனத்துடன் செய்துள்ளார். பிரியா பிரகாஷ் வாரியர், அல்போன்ஸ் புத்ரன் ஆகியோர் ஒரு காட்சியில் வந்து போகின்றனர்.
காமெடியாக ஆரம்பிக்கும் படம் மெல்ல மெல்ல காதல் படமாகவும், எமோஷனல் டிராமாவாகவும் மாறுகிறது. அதே சமயம் படம் முழுக்க காமெடியும் இருப்பதால் காட்சிக்கு காட்சி ரசிக்க வைக்கிறது அகில் சத்யனின் திரைக்கதையும், இயக்கமும்.
ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு இன்னொரு பலம். ஷரன் வேலாயுதனின் கமெரா கண்களுக்கு விருந்து. அகில் சத்யனின் எடிட்டிங் கச்சிதம்.

க்ளாப்ஸ்
நிவின் பாலி, ரியா சுபுவின் நடிப்பு கதை திரைக்கதை பின்னணி இசை வசனங்கள் மற்றும் படத்தொகுப்பு
பல்ப்ஸ்
பெரிதாக ஒன்றுமில்லை
மொத்தத்தில் இந்த சர்வம் மாயா பார்ப்பாளர்களை அப்படியே ஆட்கொள்ளும். கண்டிப்பாக குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்.