'நூறு சாமி' திரை விமர்சனம்
பிச்சைகாரன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின் இயக்குநர் சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நூறு சாமி. இப்படத்தில் ஸ்வாசிகா, அஜய், சக்தி, பாலாஜி சக்திவேல், காவ்யா ஆகியோர் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகியுள்ள நூறு சாமி திரைப்படம் எப்படி உள்ளது என்று விமர்சனத்தில் பார்க்கலாம், வாங்க.

கதைக்களம்
26 வயதில் தனது கணவரை இழக்கும் செல்வி (நடிகை ஸ்வாசிகா), தனது இரண்டு மகன்களையும் படிக்க வைக்க மிகவும் கஷ்டப்படுகிறார். ஒரு பெண் கணவனை இழந்து தனியாக வாழும்போது எதிர்கொள்ளும் அனைத்து விதமான சிரமங்களையும் எதிர்கொண்டு வாழ்ந்து வருகிறார்.

இந்த சூழலில் இரண்டாம் திருமணம் குறித்து ஸ்வாசிகா நினைக்க, மூத்த மகன் பாஸ்கர் (அஜய்) தனது அம்மாவிடம் கடுமையாக நடந்துகொள்கிறார். இப்படியே 5 ஆண்டுகள் கடக்க, பாஸ்கர் படித்து முடித்து சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இளைய மகன் விவேக் (சக்தி) கல்லூரியில் படித்து கொண்டிருகிறார்.
பாஸ்கருக்கு திருமணம் செய்ய வேண்டும் என அம்மாவாக செல்வி முடிவு எடுக்க, தனது அம்மா மறுமணம் செய்துகொண்டால் தான் நான் திருமணமே செய்துகொள்வேன் என முடிவு செய்கிறார் பாஸ்கர். முதலில் தனது அம்மாவின் மறுமணத்திற்கு முட்டுக்கட்டையாக நின்று பாஸ்கர், தற்போது அம்மாவை மறுமணம் செய்துகொள்ளும் படி கேட்கிறார். ஆனால், செல்வி இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.

ஆனால், செல்விக்கு கண்டிப்பாக திருமணம் செய்து வைக்க வேண்டும் என அவருடைய இரு மகன்களும் முயற்சி செய்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் செல்வி தனது மறுமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க, அதன்பின் நடந்தது என்ன? இந்த முடிவால் இந்த குடும்பமும், செல்வியும் சந்தித்த இன்னல்கள் என்னென்ன? என்பதே படத்தின் மீதி கதை.
படத்தை பற்றிய அலசல்
இயக்குநர் சசி எப்போதும் நம் மனதை தொடும் வகையில் எமோஷனலான கதைக்களத்தை கொண்டு நேர்த்தியான திரைக்கதையை வடிவமைப்பார். எப்படி உண்மை சம்பவத்தை மையப்படுத்தி பிச்சைக்காரன் திரைப்படம் உருவாகி நம் மனதில் இடம்பிடித்ததோ, அதே போன்ற ஒரு உண்மை சம்பவத்தை வைத்து தான் இப்படத்தையும் இயக்குநர் சசி எடுத்துள்ளார். முதலில் இப்படியொரு கதையை படமாக்க வேண்டும் என்கிற எண்ணத்திற்கு பாராட்டுகள்.

கணவனை இழக்கும் பெண்கள், கணவன் உடலோடு உடற்கட்டை ஏற வேண்டும் என சொன்ன சமூகத்திற்கு இன்று மறுமணத்தை ஏற்றுக்கொள்வதில் பக்குவம் வந்துள்ளது. நம் மண்ணில் அதற்காக பாடுபட்ட, அதற்கான கருத்துக்களை விதைத்த பெரியார் அவர்களுக்கு இதில் மிகப்பெரிய பங்கு உள்ளது.
ஆனால், இன்னும் சில இடங்களில் கணவனை இழக்கும் பெண்கள் இறுதி வரை விதவையாக தான் இருக்க வேண்டும் என என்னும் சிலரும் இருக்கிறார்கள். அவர்களுக்கு செருப்படி கொடுக்கும் வகையில் தான் 'நூறு சாமி' திரைப்படம் அமைந்துள்ளது. கணவனை இழந்துவிட்டால் அந்த பெண்ணிற்கு என்று ஒரு வாழ்க்கை இல்லையா; அந்த வாழ்க்கையை அவளே தான் முடிவு செய்ய வேண்டும்; அவளுடைய வாழ்க்கையை முடிவு செய்ய நாம் யார் என பல விஷயங்கள் இப்படம் பேசியுள்ளது.

மேலும், பிச்சைக்காரன் திரைப்படத்தில் அம்மாவை தெய்வமாக பார்க்க சொன்னார் இயக்குநர் சசி. நூறு சாமி திரைப்படத்தில் அம்மாவை ஒரு மனுஷியாகவும் பாருங்கள் என்று கூறியுள்ளார். அம்மாவிற்குள் இருக்கும் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்றும் திரைக்கதையில் அழகாக காட்டியுள்ளார்.
கதாபாத்திரங்களின் வடிவமைப்பு பிரமாதம். கதையின் நாயகியாக நடித்துள்ள ஸ்வாசிகா மொத்த படத்தையும் தனது தோலில் சுமந்துள்ளார். குறிப்பாக கணவனை இழந்த பெண்கள் அனுபவிக்கும் வலிகளை தனது நடிப்பாலும், வசனங்களாலும் வெளிப்படுத்திய விதம் சிறப்பு. அதேபோல் தனக்கு மறுமணம் நடக்கப்போகிறது என்றவுடன் வந்த சந்தோஷத்தை காட்டிய விதமும் சிறப்பு.

விஜய் ஆண்டனியின் என்ட்ரி, அவருடைய நடிப்பு, அவர் இந்த உலகத்தை பார்க்கும் விதம் என அனைத்தும் நன்றாக இருந்தது; ரசிக்க வைத்தது. மகன்களாக நடித்து அஜய் மற்றும் சக்தி இருவரும் தங்களது கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பிவிட்டனர்.
ஊருக்குள் எவனுக்கும் நல்லது நடந்து விடக்கூடாது என ஒரு கதாபாத்திரம் இருக்கும். அந்த கதாபாத்திரத்தை பார்த்தாலே அடிச்சு வாயை உடைத்து விடலாமா என்று தோன்றும். அப்படி ஒரு கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார் பாலாஜி சக்திவேல். மேலும், காவ்யா, லிஜோமோல் ஜோஷ், ஜென்சன், கருணாஸ் என அனைவரின் கதாபாத்திரமும் நன்றாக இருந்தது.

ஒளிப்பதிவு, பின்னணி இசை மற்றும் பாடல்கள் அனைத்துமே சூப்பர். மற்ற டெக்னிக்கல் வேலைகளும் குறை சொல்லும் அளவிற்கு இல்லை. வசனங்கள் படத்திற்கு மிகப்பெரிய தூணாகும்.
பிளஸ் பாயிண்ட்ஸ்
ஸ்வாசிகா நடிப்பு
நடிகர்கள், நடிகைகளின் பங்களிப்பு
கதைக்கரு & திரைக்கதை
வசனங்கள்
சொல்ல வந்த கருத்து
கிளைமாக்ஸ்
எமோஷனல் காட்சிகள்
மைனஸ் பாயிண்ட்
பெரிதாக ஒன்றுமில்லை
மொத்தத்தில், பெண்களை கடவுளாக பார்க்காமல், மனுஷியாக பாருங்கள் என்று சொன்ன 'நூறு சாமி' திரைப்படத்தை கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டும்.

புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan