One Battle After Another: திரை விமர்சனம்
லியோனார்டோ டிகாப்ரியோ நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள One Battle After Another ஹாலிவுட் திரைப்படம் நம்மை மிரட்டியதா என்று பார்ப்போமா.
கதைக்களம்
பிரெஞ்சு 75 என்ற புரட்சிக்குழு, கலிபோர்னியாவில் உள்ள தடுப்பு மையம் ஒன்றில் இருந்து குடியேறிகளை மீட்கிறது. அப்போது குழுவின் உறுப்பினரான பெர்பிடியா பெவர்லி ஹில்ஸ் கேப்டன் ஸ்டீவன் லாக்ஜாவை அவமானப்படுத்துகிறார்.
பின்னர் அவர் தனது காதலர் பாப் பெர்குசனுடன் சேர்ந்து வாழ்க்கையை ஆரம்பிக்கிறார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்க, மீண்டும் புரட்சி என்று வீட்டை விட்டு கிளம்புகிறார் பெர்பிடியா.
ஆனால் வங்கிக் கொள்ளையின்போது அசம்பாவிதம் நேர்ந்துவிட, தப்பித்து ஓடும் பெர்பிடியா கேப்டன் ஸ்டீவனிடம் மாட்டிக் கொள்கிறார்.
அதனைத் தொடர்ந்து பல ஆண்டுகள் கழித்தும் பிரெஞ்சு 75 குழுவைச் சேர்ந்தவர்களை கர்னலான பிறகு வேட்டையாடுகிறார் கேப்டன் ஸ்டீவன். அவரிடம் பாப் பெர்குசனும், அவரது மகளும் சிக்கினார்களா? இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
வைன்லேண்ட் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு பிரபல இயக்குநர் பால் தாமஸ் ஆண்டர்சன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். மெக்ஸிகோவில் இருந்து அமெரிக்காவில் நுழைபவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள், கருப்பினத்தவர்களை அமெரிக்கர்கள் நடத்தும் விதம் உள்ளிட்ட அரசியலை இப்படம் பேசுகிறது.
பிரெஞ்சு 75 புரட்சிக்குழுவைச் சேர்ந்த பாப் பெர்குசன் கதாபாத்திரத்தில் டிகாப்ரியோ வாழ்ந்திருக்கிறார் என்றே கூறலாம். போதைக்கு அடிமையானவராக எப்போதும் பைப் சிகரெட் புகைத்தாலும், எப்போது வேண்டுமானாலும் நாம் வேட்டையாடப்படலாம் என்ற பயத்தை அவர் வெளிக்காட்டும் விதம் அருமை.
சீரியஸான காட்சிகளில் கூட பிளாக் ஹியூமர் செய்து பல இடங்களில் சிரிக்கவும் வைக்கிறார் டிகாப்ரியோ. குறிப்பாக, "உன் இரண்டாவது பெயர் என்ன?" என்று போலீசார் கேட்க அதற்கு "பேட்மேன்" என்றும், பின்னர் "பீட்டர் பார்க்கர்" (ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்தின் பெயர்) என்றும் டிகாப்ரியோ கூறுவது சிரிப்பு வெடி.
கேப்டன் ஸ்டீவனாக நடித்திருக்கும் சீன் பென் வில்லத்தனத்தில் அட்டகாசம் செய்துள்ளார். அவரது உடல்மொழி பல இடங்களில் சீனியர் நடிகர் என்பதை நிரூபிக்கிறது. புரட்சிப் பெண்ணாக நடித்திருக்கும் தியானா டெய்லர், டிகாப்ரியோ உடனான ரொமான்ஸிலும், சீன் பென்னை அவமானப்படுத்தும் காட்சிகளிலும் மிரட்டியுள்ளார்.
இவர்களைத் தாண்டி தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்துள்ளார் நடிகை சேஸ் இன்பினிட்டி. அழகு பெண்ணாக தோற்றத்தில் கவர்ந்தாலும், நடிப்பில் டிகாப்ரியோவுக்கு போட்டி போடும் அளவில் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
கிளைமேக்ஸ் காட்சி அதற்கு ஒரு சான்று. இரண்டரை மணிநேரத்திற்கு மேல் ஓடினாலும் சலிக்காத வகையில் திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர். படம் சற்று தொய்வாக தோன்றும்போதெல்லாம் டிகாப்ரியோ காமெடி செய்து கலகலப்பூட்டுகிறார். படத்தின் முதல் காட்சியில் இருந்தே பதற்றத்தை தொற்ற வைக்கிறது ஜானி கிரீன்வுட்டின் பின்னணி இசை.
க்ளாப்ஸ்
டிகாப்ரியோ, சீன் பென், சேஸின் நடிப்பு
தொய்வில்லாத திரைக்கதை
மிரட்டலான பின்னணி இசை
அரசியல் கருத்துக்கள்
பல்ப்ஸ்
கிளைமேக்ஸின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம்