பரம் சுந்தரி: திரை விமர்சனம்
ஜான்வி கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் வெளியாகியுள்ள பரம் சுந்தரி திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே பார்ப்போமா.
கதைக்களம்
டெல்லியில் சச்தேவ் என்ற பணக்கார தந்தையின் மகனான பரம் சுயமாக தொழில் தொடங்கி முன்னேற வேண்டும் என்று நினைக்கிறார்.
அவரது பிஸினஸ் பார்ட்னராக அறிமுகமாகும் நபர் Find My Soulmate என்று செயலி ஒன்றை துணையை தேடுபவர்களுக்காக உருவாக்கும் முயற்சியில் இறங்குகிறார். தனது பிஸினஸ் ஐடியாவை அப்பாவிடம் கூறி முதலீடு செய்ய வேண்டி பரம் கேட்கிறார்.
ஆனால், உன் ஐடியாவை நிரூபித்துக்காட்டு என அப்பா டைம் லிமிட் கொடுக்கிறார். இதனால் தனக்கு 100 சதவீதம் பொருந்தும் சுந்தரி என்ற பெண்ணை செயலி மூலம் கண்டறியும் பரம், அவரைத் தேடி கேரளாவுக்கு செல்கிறார்.
அங்கு தான் எதற்கு வந்தேன் என்பதைக் கூறாமல் டூரிஸ்ட் என்று சொல்லி சுந்தரியின் ஹொட்டலில் தங்குகிறார் பரம். அதன் பின்னர் பரமின் பிஸினஸ் ஐடியா வெற்றி பெற்றதா? சுந்தரியின் மீதான காதலை அவர் வெளிப்படுத்தினாரா என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியானபோது, ஜான்வி கபூரின் மலையாள கதாபாத்திரம், உச்சரிப்பு சரியில்லை என்றும், பாலிவுட் சினிமாவில் மலையாளிகள் தவறாக சித்தரிக்கப்படுவதாகவும் நடிகை பவித்ரா மேனன் குற்றம்சாட்டியது வைரலானது.
அதன் பின்னர் பரம் சுந்தரி படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. சித்தார்த் மல்ஹோத்ரா பரம் கேரக்டரிலும், ஜான்வி கபூர் சுந்தரி கேரக்டரிலும் நடித்துள்ளனர். சித்தார்த் மல்ஹோத்ரா சென்னை எக்ஸ்பிரஸ் ஷாருக் கானை பெரும்பாலான காட்சிகளில் பிரதிபலிக்கிறார்.
என்றாலும் முடிந்த அளவிற்கு தனது கேரக்டருக்கு நியாயம் சேர்த்துள்ளார். காமெடி செய்ய முயற்சித்திருந்தாலும், ரொமான்ஸ் காட்சிகளில்தான் அவர் ஸ்கோர் செய்கிறார். ஜான்வி கபூர் சுந்தரி ரோலில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். டான்ஸ், எமோஷனல் என அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார்.
ஆனால், அவரது கேரக்டர்தான் மலையாள பெண் போல் இல்லாத உணர்வை பல இடங்களில் தருகிறது. சுந்தரி மும்பையில் மாடர்ன் கேர்ள் ஆக கல்லூரி படிப்பை முடித்தாலும், கேரளாவில் தப்பி தவறி டி-ஷர்ட் கூட அணியவில்லை. இதுபோல் பல உறுத்தல்கள் உள்ளன. படத்தில் கேரளாவை பின்தங்கியது போல் பல காட்சிகளில் காட்டியுள்ளனர்.
டாக்சி ட்ரைவர் பயணிகள் காரில் ஏறியதும் கள் குடிப்பதுடன் அவர்களும் குடிக்க சொல்லி வற்புறுத்தி விபத்தை ஏற்படுத்துகிறார். கேரளாவிற்கு வந்ததும் பரம் மற்றும் அவரது நண்பர் ஜக்கியின் செல்போனுக்கு டவர் சுத்தமாக கிடைக்கவில்லையாம். தென்னை மரத்தில் ஏறினால்தான் டவர் கிடைக்கும் என்று ஜான்வி கூறுகிறார்.
இதுபோல் கேரளா என்றாலே இப்படித்தான் இருக்கும் என்று ஸ்டீரியோடைப் செய்திருக்கிறார் இயக்குநர் துஷார் ஜலோடா. பார்கவன் நாயர் என்ற கேரக்டரில் மலையாளத்தின் பிரபல நடிகரான ரெஞ்சி பனிக்கர் நடித்துள்ளார். அவர் வரும் காட்சிகள்தான் கதை கேரளாவில் நடக்கிறது என்பதை பெரும்பாலும் உணர வைக்கிறது.
சுருள் சண்டை, படகு போட்டி, மோஹினியாட்டம் என கலாச்சார ரீதியான விஷயங்களை உள்ளே வைத்திருக்கிறார் இயக்குநர். சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை போலவே திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. அதனால் பெரிதாக எங்கும் சுவாரஸ்யம் இல்லை.
அதே சமயம் கழுத்தை அறுக்கும் வகையிலும் இல்லாமல் திரைக்கதை நேர்த்தியாகவே நகர்கிறது. படத்திற்கு மிகப்பெரிய பலம் பின்னணி இசைதான். சச்சின், ஜிகரின் இசையில் பாடல்களும் சிறப்பாக உள்ளன. அதேபோல் கேரளாவின் அழகியலை அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சந்தன கிருஷ்ணன்.
க்ளாப்ஸ்
ஜான்வி கபூர்
பின்னணி இசை
ஒரு சில ரொமான்ஸ் காட்சிகள்
பல்ப்ஸ்
கேரளாவை பின்தங்கியது போல் காட்டியது
திரைக்கதையை இன்னும் சுவாரஸ்யப்படுத்தியிருக்கலாம்