புளூட்டோ (மலையாளம்): திரை விமர்சனம்
மலையாளத்தில் காமெடி சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக வெளியாகியுள்ள புளூட்டோ எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.

கதைக்களம்
விக்னேஷ் (நீரஜ் மாதவ்) வீட்டில் தயார் செய்யும் குளிர்பானத்தை விற்பனை செய்யத் தொடங்குகிறார். அதற்காக தொழிலதிபர் ஒருவரிடம் முன்பணமாக 5 லட்சம் ரூபாய் பெறுகிறார்.
விற்பனை சூடுபிடிக்க விக்னேஷ் மகிழ்ச்சியில் திளைக்க, திடீரென அவரது குளிர்பானத்தை அருந்துவதால் உடல்நல பிரச்சனை ஏற்படுவதாக குற்றம்சாட்டப்பட்டப்படுகிறது. இது விக்னேஷ் பேரதிர்ச்சியைக் கொடுக்க, விரக்தியடைந்த அவர் மதுபோதையில் கடற்கரையில் படுத்திருக்கும்போது வானில் இருந்து ஒரு விண்கலம் கடலில் விழுகிறது.
அதில் இருந்து எழுந்து வரும் மனித உருவில் இருக்கும் ஏலியனிடம் (அல்தாப் சலீம்), போதையில் என்னைவிட்டு போகாதே என்று விக்னேஷ் கூறுகிறார். அந்த ஏலியன் விக்னேஷ் வைத்திருக்கும் மதுவை குடித்தும் உற்சாகமாக, அவரது வீட்டிற்கு வந்துவிடுகிறார்.
மறுநாள், தனது அறையில் ஏலியனை கண்டு அதிர்ச்சியடைகிறார் விக்னேஷ். பின்னர் அதற்கு புளூட்டோ என்று பெயர் வைத்து மலையாள மொழியை கற்றுக் கொடுக்கிறார். அதனுடைய சூப்பர் பவர்களை பயன்படுத்தி வாழ்க்கையில் சாதிக்கலாம் என்று நினைக்கும் விக்னேஷிற்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
ஒரு சூப்பர் பவர் கூட இல்லாத ஏலியனை வைத்துக்கொண்டு விக்னேஷ் என்ன செய்தார்? அந்த ஏலியன் தனது கிரகத்திற்கு சென்றதா? என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
இந்திய சினிமாவில் பூமிக்கு வரும் ஏலியனின் சக்திகளைக் கொண்டு, ஹீரோ தனக்கான விஷயங்களை சாதித்துக்கொண்டு இறுதியில் அந்த ஏலியனை அதன் கிரகத்திற்கு அனுப்பி வைப்பதுதான் வழக்கம்.
ஆனால், அதிலிருந்து மாறுபட்டு எந்த சக்தியும் இல்லாத ஒரு ஏலியனை வைத்துக்கொண்டு ஹீரோ என்ன செய்கிறார் என சற்று மாறுபட்டு காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர் ஆதித்யா சந்திரசேகர். என்னதான் புது ஐடியாவாக இருந்தாலும், ஒரு கட்டத்திற்கு மேல் இந்த ஏலியன் ஏதவாது பண்ணுமா பண்ணாதா? என்று நாமே கேட்கும் அளவிற்குதான் படத்தில் உள்ளது.
அதேபோல் அந்த ஏலியனால் ஹீரோவுக்கு பெரிதாக எந்த நன்மையையும் ஏற்பட்டுவிடவில்லை. மாறாக பிரச்சனையான வாழ்வில் இன்னும் பிரச்சனைதான் வந்து சேர்க்கிறது. இதனாலேயே பெரிதாக சுவாரசியம் இல்லாமலேயே திரைக்கதை நகர்கிறது.
என்றாலும் ஒரு சிறுது எதிர்பார்ப்பும், ஆங்காங்கே கிச்சு கிச்சு மூட்டும் காமெடிகளும் படத்தை பார்க்க வைக்கின்றன. அதற்கு மேலாக, ஏலியனாக வரும் அல்தாப் சலீம் ஒவ்வொரு காட்சியிலும் தனது நடிப்பின் மூலம் கவனம் ஈர்க்கிறார்.
RDX படத்தில் ஆக்ஷனில் மிரட்டிய நீரஜ் மாதவ் இப்படத்தில் விக்னேஷாக சிறப்பாக நடித்துள்ளார். சண்டைக்காட்சியில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். டைகர் தம்பி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் அஜூ வர்கீஸ் ஓரளவு கவனம் ஈர்க்க, ஆர்ஷா சாந்தினி பெயரளவுக்கு மட்டுமே ஹீரோயினாக வந்து போகிறார்.
கிளைமேக்சில் காண்பிக்கப்படும் ஒரு சூப்பர் பவரை படம் முழுக்க பயன்படுத்தியிருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். படம் முடியும் தருவாயில் கொடுத்த லீட்-ஐ வைத்து அடுத்த பாகம் எடுத்தால் சிறப்பாக கொண்டுவர முடியும்.
ஆர்க்காடோவின் இசை, விஷ்ணு சர்மாவின் கேமரா, சனத்தின் படத்தொகுப்பு என டெக்னிக்கலாக படம் மிளிர்கிறது. திரைக்கதையில் நியாஸ், நித்திராஜ், அனந்து ஆகியோர் இன்னும் வேலை பார்த்திருக்கலாம்.
க்ளாப்ஸ்
சூப்பர் பவர் இல்லாத ஏலியன் என்ற புது ஐடியா
நீரஜ் மாதவ்
கிளைமேக்ஸ்
பல்ப்ஸ்
பெரிதாக சுவாரசியம் இல்லாத திரைக்கதை
மொத்தத்தில் இந்த புளூட்டோ பார்வையாளர்களை சோதிக்கவில்லை என்றாலும், பெரிதாக ரசிக்க வைக்கவும் இல்லை.

திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் ஆவணம் - கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் IBC Tamilnadu
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri