பொன்னியின் செல்வன் 2 திரைவிமர்சனம்
கல்கியின் எழுத்தில் உருவான காவியம் பொன்னியின் செல்வன். இதை இயக்குனர் மணிரத்னம் பிரம்மாண்ட திரைப்படமாக உருவாக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.
இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இன்று இரண்டாவது பாகமும் வெளிவந்துள்ளது. முதல் பாகத்தின் வெற்றி இரண்டாம் பாகத்தின் மீது எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. அதே போல் ஆதித்த கரிகாலன் எப்படி, யாரால் கொலை செய்யப்பட்டார் என்பதை மணி ரத்னம் எப்படி காட்டப்போகிறார் என்று பார்க்கவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
கடலில் மூழ்கிய அருண்மொழி வர்மனுக்கும், வந்தியத்தேவனுக்கும் என்ன ஆனது? சோழ வம்சத்தை பழி வாங்கினாரா நந்தினி? யார் இந்த ஊமைராணி? சோழ மகுடம் யாருக்கு? என பல கேள்விகளுக்கு பொன்னியின் செல்வன் 2 எப்படி பதில் கொடுத்துள்ளது என்பதை விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க..
முதலில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் கதையை தெரிந்துகொண்டு, பின் இரண்டாம் பாகத்தின் விமர்சனத்திற்கும் செல்வோம்..
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் கதைக்களம்
சோழ மண்ணை ஆண்டு வரும் சுந்தர சோழருக்கு மூன்று பிள்ளைகள். மூத்த மகன் ஆதித்த கரிகாலன், இரண்டாவது மகள் குந்தவை, இளைய மகன் அருண்மொழி வர்மன். இதில் ஆதித்த கரிகாலன் தனது நண்பன் வல்லவரையன் வந்தியத்தேவனுடன் இணைந்து இராஷ்டிரகூடர்களுக்கு எதிராக போர் புரிந்து அதில் வெற்றியும் பெறுகிறார்.
போரின் வெற்றிக்கு பின் தனது தந்தைக்கும், சோழ நாட்டிற்கும் துரோக சதி நடக்கவிருப்பதை அறிந்துகொள்ளும் ஆதித்த கரிகாலன், தனது நண்பன் வந்தியத்தேவனை தஞ்சைக்கு ஒற்றனாக அனுப்பிவைக்கிறார். அங்கு சென்று தனது தந்தையையும், தங்கையையும் சந்தித்து நடக்கும் சதிகளை எடுத்துக்கூற ஆணையிடுகிறார்.
இதனால் தஞ்சைக்கு புறப்படும் வந்தியத்தேவன் காவிரியின் அழகையும், பெண்களையும் ரசித்துக்கொண்டே கடம்பூர் சம்புவரையர் மாளிகையை அடைகிறார். அங்கு சுந்தர சோழருக்கு பின் மதுராந்தகன் தான் அரசனாக வேண்டும் என்று பெரிய பழுவேட்டரையறுடன் சிற்றரசர்கள் பலர் இணைந்து சதி திட்டம் தீட்டி வருகிறார்கள். இதை ஒரு புறம் வந்தியத்தேவன் மறைந்திருந்து பார்க்க மற்றொரு புறம் ஆழ்வார்கடியானும் ஒளிந்திருந்து பார்த்துக்கொண்டு இருக்கிறார்.
இதன்பின் தனது பயணத்தை தொடரும் வந்தியத்தேவன் வழியில் நந்தினியை சந்திக்கிறார். அதன்பின் சோழ அரசர் சுந்தர சோழரை சந்திக்கும் வந்தியத்தேவன், சோழ குலத்திற்கு ஆபத்து சூழ்ந்துள்ளது என்பதை எடுத்துரைக்கிறார். அரசரை சந்தித்த கையோடு சில நாடகங்களுக்கு பின் குந்தவையை சந்திக்கும் வந்தியத்தேவன், அவளிடம் தனது மனதை பறிகொடுக்க, குந்தவையும் அவனிடம் காதலில் விழுகிறாள்.
குந்தவையிடம் செய்தியை சேர்த்த வந்தியத்தேவனிடம், தனது தம்பி அருண்மொழி வர்மன் இலங்கையில் இருக்கிறார் அவரை தஞ்சைக்கு அழைத்து வரும்படி அன்பு கட்டளை இடுகிறார் குந்தவை. காதலியின் உத்தரவை மீறாமல் இலங்கைக்கு பூங்குழலியின் படகில் செல்கிறார் வந்தியத்தேவன். இலங்கையில் கால்பதிக்கும் வந்தியத்தேவன், அருண்மொழி வர்மனை சந்திக்கிறார். அதே சமயம் பாண்டிய நாட்டின் ஆபத்துதவிகள் ஆதித்த கரிகாலனையும், அருண்மொழி வர்மனையும், சோழ நாட்டின் அரசர் சுந்தரச்சோழரையும் கொலை செய்ய சபதம் எடுக்கிறார்கள்.
இதில் முதலில் அருண் மொழியை கொல்ல இலங்கைக்கு செல்லும் ஆபத்துதவிகளின் சதி வலையில் இளவரசர் அருண் மொழி வர்மன் மற்றும் வந்தியத்தேவன் இருவரும் சிக்கி கொள்கிறார்கள். கப்பல் உடைந்து கடலில் மூழ்கியதால், இருவரும் இறந்துவிட்டதாக சோழ ராஜ்ஜியம் முழுவதும் செய்தி பரவுகிறது.
எந்த ஒரு நேரத்திலும் அருண்மொழி வர்மனுக்கு ஆபத்து வந்தாலும், உடனடியாக அங்கு வந்து காப்பாற்றும் ஊமைராணி தற்போதும் கடலில் மூழ்கிய அருண்மொழி வர்மனை காப்பாற்ற கடலில் குதிக்கிறார். இத்துடன் முதல் பாகத்தின் கதை நிறைவு பெற்றது.
பொன்னியின் செல்வன் 2 கதைக்களம்
கடலில் மூழ்கிய அருண்மொழி வர்மனை ஊமை ராணி காப்பாற்றிவிடுகிறார். அருண்மொழி வர்மன் உயிர்பிழைத்த விஷயம் பாண்டிய ஆபத்துதவிகளுக்கும், நந்தினிக்கும் தெரியவருகிறது. மறுபக்கம் சோழ நாடு என்னுடையது, சோழ பட்டத்திற்கு உரியவன் நான் தான் என கூறி சிற்றரசர்களுடன் சேர்ந்துகொண்டு பிரச்சனை செய்து வருகிறார் மதுராந்தகன்.
சுந்தர சோழர், ஆதித்த கரிகாலன், அருண்மொழி வர்மன் மூவரையும் தனித்தனியாக கொலை செய்ய முடியாது என்பதினால், ஒரே நாளில் சோழ குலத்தின் ஆணிவேறு ஆன இவ் மூவரையும் கொல்ல ஆபத்துதவிகளுடன் இணைந்து புதிதாக திட்டம் ஒன்றை தீட்டுகிறார் நந்தினி. இதில் ஆதித்த கரிகாலனை நானே கொலை செய்கிறேன் என கூறி, அதற்காக ஆதித்த கரிகாலனை கடம்பூர் மாளிகைக்கு வரும்படி செய்தி அனுப்புகிறார்.
மறுபக்கம், சுந்தர சோழரை கொலை செய்ய கடம்பூர் மாளிகைக்குள் சோமன் சாம்பவனுடன் சில பாண்டிய ஆபத்துதவிகள் செல்கிறார்கள். தனது தம்பி அருண்மொழி வர்மன், தங்கை குந்தவை, நண்பன் வந்தியத்தேவன் என மூவரும் தடுத்தும், நந்தினி அழைப்பின் படி கடம்பூருக்கு செல்கிறார் ஆதித்த கரிகாலன்.
கடம்பூருக்கு சென்ற ஆதித்த கரிகாலன் நந்தினி கையால் கொல்லப்பட்டாரா? சுந்தர சோழரை கொலை செய்த கடம்பூர் மாளிகைக்குள் வந்த ஆபத்துதவிகளின் எண்ணம் நிறைவேறியதா? நந்தினியின் பழி தீர்ந்ததா? சோழ மணிமுடியை சூடி கொண்டவர் யார்? என்பதே படத்தின் மீதி கதை..
படத்தை பற்றிய அலசல்
ஆதித்த கரிகாலன் சீயான் விக்ரம் நடிப்பு பட்டையை கிளப்புகிறது. காதலியை விட்டு பிரிந்த ஏக்கம், தனது காதலி தன்னிடம் கேட்ட ஒரே ஒரு விஷயம் வீரபாண்டியனின் உயிரை கூட கொடுக்க முடியவில்லையே என்ற குற்றவுணர்ச்சி. ராஜ்ஜியம் வேண்டாம் நீ மட்டும் போதும் என நந்தினியிடம் ஆதித்த கரிகாலன் காட்டிய காதல் என சிறப்பாக நடித்துள்ளார்.
ஐஸ்வர்யா ராய் முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் மனதை கொள்ளையடித்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக ஆதித்த கரிகாலனுக்கும் நந்தினிக்கும் இடையே வரும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. நந்தினியாகவும், ஊமைராணியாகவும் முழு படத்தையும் தன்னுடைய நடிப்பில் தாங்கி நிற்கிறார். அதற்காக ஐஸ்வர்யா ராய்க்கு தனி பாராட்டுக்கள்.
அருண்மொழி வர்மன் ஜெயம் ரவி தனது கொடுத்த கதாபாத்திரத்தை தனது நடிப்பின் மூலம் நியாயப்படுத்தி இருக்கிறார். நின்று நிதானமாக யோசித்து செயல்படும் ராஜராஜ சோழன் அருண்மொழி வர்மனாக சிறப்பாக நடித்துள்ளார். வல்லவரையன் வந்தியத்தேவனாக வரும் கார்த்தியின் நடிப்பின் படத்திற்கு பலம். குந்தவை திரிஷா கதாபாத்திரத்திற்கு தேவையானதை செய்துள்ளார்.
பார்த்திபேந்திர பல்லவனாக வரும் விக்ரம் பிரபுவிற்கு முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் அதிக ஸ்கோப். ரவிதாசன் கிஷோர் மிரட்டுகிறார். மற்றபடி பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயராம், சோபிதா, பிரபு, சரசத்குமார், பார்த்திபன், ரஹ்மான், லால், ஜெயசித்ரா, நிழல்கள் ரவி என அனைவரும் அவரவர் கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை செய்துள்ளனர்.
முதல் பாகம் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமும் வெற்றியடையும் என எதிர்பார்ப்பு இருந்தது. அதை பூர்த்தி செய்துவிட்டார் மணி ரத்னம் என்று தான் சொல்லவேண்டும். கல்கி எழுதியதில் இருந்து சில மாற்றங்களை மணி ரத்னம் செய்துள்ளார். அது படத்திற்கு தேவையானதாக இருந்தாலும், புத்தகத்தை படித்தவர்களுக்கு சற்று வருத்தத்தை தான் தந்துள்ளது.
துவக்கத்தில் இருந்து மெதுவாக செல்லும் திரைக்கதையை இன்னும் கூட விறுவிறுப்பாக்கி இருக்கலாம். ஆனால், தேவைப்படும் இடத்தில் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார். அதற்க்கு நடிகர்களின் நடிப்பும் ஒரு காரணம். அதை சரியாக பயன்படுத்தியுள்ளார் மணி ரத்னம். காட்சிகள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்காக ஒளிப்பதிவாளர் ரவி வர்மனுக்கு தனி பாராட்டு. எடிட்டிங் சொல்லும் கதை அழகு.
குறிப்பாக நந்தினிக்கும் ஆதித்த கரிகாலனுக்குமான காட்சிகளின் தொகுப்பு அருமையாக இருந்தது. முக்கியமாக ஏ.ஆர். ரஹ்மான் தனது இசையால் மிரட்டிவிட்டார். ஒன்றா, இரண்டா படத்தில் வரும் பல காட்சிகளுக்கு மிரட்டலான பின்னணி இசையை கொடுத்துள்ளார். தோட்டா தரணியின் கலை இயக்கத்தை எத்தனை முறை பாராட்டினாலும் மிகையாகாது. ஒப்பனை மற்றும் ஆடை வடிவமைப்பு படத்திற்கு பலம்.
பிளஸ் பாயிண்ட்
நடிகர்களின் நடிப்பு
ஆதித்த கரிகாலனுக்கும் நந்தினிக்கும் இடையுமான காட்சி
ஒளிப்பதிவு
பின்னணி இசை
மைனஸ் பாயிண்ட்
மெதுவாக செல்லும் திரைக்கதை