போர் தொழில் திரைவிமர்சனம்
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள திரைப்படம் போர் தொழில். க்ரைம் த்ரில்லர் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் ஓர் எதிர்பார்ப்பு இருக்கும்.
அதிலும் ட்ரைலர் வெளிவந்த பிறகு, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது. போலீஸ் வேடத்தை அசோக் செல்வன் எப்படி நடித்திருப்பார், சரத்குமாரின் நடிப்பு எப்படி இருக்கும், அறிமுக இயக்குனர் படத்தை எப்படி கையாண்டுள்ளார் என்பதை எல்லாம் விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க..
கதைக்களம்
கதாநாயகன் அசோக் செல்வன் தனது குடும்பத்தினர்களின் ஆசையால் போலீஸ் ஆகிறார். என்னதான் ஒரு போலீசாக இருந்தாலும் அவருக்குள் எப்போது ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கிறது. இதே மன நிலமையுடன் போலீசில் சேரும் அசோக் செல்வன், உயர் அதிகாரி சரத்குமாரிடம் முக்கிய விஷயங்களை கற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்.
இந்த சமயத்தில் சரத்குமார் - அசோக் செல்வனுக்கு கேஸ் ஒன்று வருகிறது. திருச்சியில் மர்ம நபரால் பெண்கள் கடத்தப்பட்டு எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரியாக கொலை செய்யப்பட்டு வருகிறார்கள்.
இதை யார் செய்கிறார் என்பதை கண்டுபிடிக்க சரத்குமார், அசோக் செல்வன் மற்றும் அவர்களுடன் நிகிலா விமலும் செல்கிறார். யார் அந்த கொலையாளி, எதற்காக பெண்களை கடத்தி ஒரே மாதிரியாக கொலை செய்கிறான் என்பதை அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை..
படத்தை பற்றிய அலசல்
கதாநாயகன் அசோக் செல்வன் சிறப்பாக நடித்துள்ளார். 10 பேரை அடித்து தான் மாஸ் கட்ட வேண்டும் என்பது இல்லாமல், இயல்பான நடிப்பின் மூலம் மாஸ் காட்டியுள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸில் விசில் பறந்தது.
கதாநாயகனை மிஞ்சும் அளவிற்கு தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் சரத்குமார். எந்த ஒரு இடத்திலும் தனது கதாபாத்திரத்தில் இருந்து விலகாமல் படத்தை எந்த அளவிற்கு வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல வேண்டுமோ அதை சிறப்பாக செய்துள்ளார்.
நிகிலா விமல் கதாபாத்திரத்துக்கு தேவையானதை கட்சிதமாக செய்துள்ளார். சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்து மிரட்டி விட்டார் மறைந்த நடிகர் சரத்பாபு. அவருக்கு தனி பாராட்டுக்கள். மற்றபடி அனைவரின் நடிப்பும் சிறப்பு.
முதல் படத்திலேயே தனக்கென தனி இடத்தை சினிமாவில் பிடித்துவிட்டார் இயக்குனர் விக்னேஷ் ராஜா. திரைக்கதை வடிவமைப்பு படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட். வழக்கமான இன்வெஸ்டிகேஷன் க்ரைம் த்ரில்லர் கதைக்களம் என்றாலும், சிறு சிறு விஷயங்களில் நம்ம மிரள வைத்து விட்டார் இய்குனார் விக்னேஷ் ராஜா.
எந்த ஒரு இடத்திலும் தொய்வு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அந்த அளவிற்கு விறுவிறுப்பாக திரைக்கதையை அமைத்திருந்தார். அதே போல் வசனமும் கச்சிதமாக இருந்தது. 2010ல் நடக்கும் கதை என்பதால் அதற்கான விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்துள்ளனர்.
அடுத்து என்ன என நகர்ந்து கொண்டிருந்த திரைக்கதையில் ரசிக்கும்படியான நகைச்சுவை காட்சிகளும் அழகாக இருந்தது. எடிட்டிங் படத்திற்கு மிகப்பெரிய பலம். ஒளிப்பதிவு சிறப்பு. அனைத்திற்கும் மேல் ஜாக்ஸ் பிஜாய்யின் பின்னணி இசை மிரட்டலாக இருந்தது.
பிளஸ் பாயிண்ட்
சரத்குமார் - அசோக் செல்வன் நடிப்பு
சரத்பாபு, நிகிலா விமல் நடிப்பு
பின்னணி இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங்
விக்னேஷ் ராஜாவின் இயக்கம், திரைக்கதை
மைனஸ் பாயிண்ட்
பெரிதாக ஒன்றும் இல்லை