போராட்டம்: திரை விமர்சனம்
திரைப்படத்தை தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபரான ஐபிசி கந்தையா பாஸ்கரன் அவர்களின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'போராட்டம்'.
ஈழத்து கலைஞர்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை ராஜ் சிவராஜ் இயக்கியுள்ளார். பூவன் மதீசன் இசையமைத்துள்ளார். ‘போராட்டம்’ திரைப்படத்தின் மூலம் பாஸ்கரன் றீகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
ஈழ சினிமாவில் இதுவரை வெளியாகியுள்ள திரைப்படங்களிலேயே நீளமான திரைப்படமாக ‘போராட்டம்’ எடுக்கப்பட்டுள்ளது. பெரிதும் எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள போராட்டம் திரைப்படம் எப்படி உள்ளது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.

கதைக்களம்
இலங்கை யாழ்ப்பாணத்தில் பான்தர்ஸ் (Panthers) vs அவெஞ்சர்ஸ் (Avengers) இடையிலான கால்பந்து போட்டி நடைபெறுகிறது. இதில் பான்தர்ஸ் அணியின் நட்சத்திர போட்டியாளராக என்ட்ரி கொடுக்கிறார் கதாநாயகன் றீகன் (மில்லர்). இவருடைய துணிச்சலான மற்றும் சாதுர்யமான ஆட்டத்தினால் அந்த போட்டியில் பான்தர்ஸ் அணி வெற்றிபெறுகிறது.
கால்பந்து விளையாட்டுடன் சேர்ந்து மில்லரின் காதல் பயணமும் தொடர, ஒரு கட்டத்தில் தேசிய அளவில் விளையாடுவதற்கான தேர்வு நடைபெறுகிறது.

இதில் கலந்துகொண்டு சிறப்பாக தனது ஆற்றலை வெளிப்படுத்துகிறார். ஆனால், அவர் தமிழன் என்கிற ஒரே காரணத்தினால் அவரை தேர்வு செய்யவில்லை. இதனால் மனமுடைந்து போகிறார் றீகன். இதன்பின், குடும்ப பிரச்சனையால் வெளிநாட்டிற்கு செல்லும் சூழல் றீகனுக்கு ஏற்படுகிறது.
கால்பந்து விளையாட்டில் சாதித்து தனது சமூகத்திற்காக எதையும் செய்ய முடியவில்லேயே என்கிற கனத்த இதயத்துடன் வெளிநாட்டிற்கு புறப்படும் றீகன், தனது கனவை நனவாக்கி சாதித்தாரா? தனது சமூகத்திற்காக அவர் செய்தது என்ன? யாரால் இவர் தேசிய அளவில் விளையாடாமல் போனது? இதற்கு பின்னால் உள்ள கதை என்ன என்பதற்கெல்லாம் விடையளிப்பதே இந்த போராட்டத்தின் மீதி கதை.
படத்தை பற்றிய அலசல்
கதாநாயகன் றீகன் அறிமுக படத்திலேயே மிகவும் துடிப்பான நடிப்பால் நம்மை கவர்ந்துள்ளார். குறிப்பாக கால்பந்து விளையாடும் காட்சிகளில் பட்டையை கிளப்பியுள்ளார். எங்குமே அவர் நடித்தது போலவே தெரியவில்லை. ஒரு உண்மையான கால்பந்து வீரர் எப்படி விளையாட்டை கொண்டு செல்வாரோ, அதே போலவே இருந்தது.
அதுமட்டுமின்றி ப்ரீ கிளைமாக்ஸ் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளில் அவருடைய நடிப்பு படத்தை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்கிறது. தமிழ் சினிமாவிற்கு இவருடைய வரவு நல்வரவாகவே அமைந்துள்ளது.
இவரை தாண்டி, கதாநாயகி நிவேதா அழகிய நடிப்பால் மனதை தொடுகிறார். மேலும் காக்கா கதாபாத்திரத்தில் நடித்த நடிகர், நகைச்சுவை செய்து கலக்கிய நடிகர், கிளைமாக்ஸில் ட்விஸ்ட் கொடுத்த வில்லன் நடிகர் என அனைவரும் தங்களது நடிப்பால் திரைக்கதையை விறுவிறுப்பாக கொண்டு சென்றுள்ளனர்.

இயக்குநர் ராஜ் சிவராஜ் தான் எடுத்துக்கொண்ட கதைக்களத்தை நேர்த்தியான முறையில் கையாண்டு அதனை சிறப்பாக திரைக்கதையில் வடிவமைத்து திரையில் வழங்கியுள்ளார்.
கால்பந்து போட்டி காட்சிகள், காதல் காட்சிகள், நகைச்சுவையாக ரசிக்கும்படி அமைத்த விதம், இடைவேளையில் கதாநாயகனின் வலியை காட்டிய விதம், ஒரு இனத்திற்கான போராட்டத்தை எப்படி திரைக்கதையில் வழங்க வேண்டும் என்கிற நேர்த்தி என படத்தை சிறப்பாக எடுத்துள்ளார். ஆங்காங்கே சில தொய்வு மற்றும் குறைகள் இருந்தாலும், அவை யாவுமே படத்தை எந்த வகையிலும் பாதிக்கவில்லை.
முக்கியமாக போதைப்பொருள் பழக்கத்தால் எப்படி பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதை காட்டியது மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய விஷயத்தை சிலரின் சுயலாபத்திற்காக வளர்க்கப்பட்டு, அது எப்படி ஒரு தலைமுறையையே சீரழிகிறது என்பதை நன்றாக திரைக்கதையில் காட்டியுள்ளார் இயக்குநர் ராஜ் சிவராஜ். அதற்காக அவருக்கு பாராட்டுகள்.

தயாரிப்பாளர் ஐபிசி கந்தையா பாஸ்கரன் அவர்களின் முயற்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இப்படியொரு கதையை மக்களிடம் சொல்ல வேண்டும் என அவர் எடுத்துள்ள முயற்சியும், அதற்காக அவர் போட்ட உழைப்பும் மிகப்பெரியது. அதை எந்த அளவுகோலாலும் அளவிட முடியாது. ஒளிப்பதிவு இப்படத்திற்கு மிகப்பெரிய பலம்.
ஒவ்வொரு காட்சியையும் அழகாக காட்டியுள்ளார். பின்னணி இசையும் பாடல்களும் படத்தை அடுத்துக்கட்டத்திற்கு எடுத்து செல்கிறது. வீர தமிழன், முட்ட கண்ணு பாடல்கள் மனதில் இடம்பிடிக்கின்றன. மேலும், பின்னணி இசை திரைக்கதைக்கு மிகப்பெரிய அளவில் உதவுகிறது. எடிட்டிங் இன்னும் வலுவாக இருந்திருக்கலாம். மற்றபடி அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களது வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.
பிளஸ் பாயிண்ட்ஸ்
- றீகன் நடிப்பு மற்ற நடிகர் & நடிகைகளின் பங்களிப்பு
- நகைச்சுவை காட்சிகள்
- ராஜ் சிவராஜ் இயக்கம் திரைக்கதை
- பாடல்கள் மற்றும் பின்னணி இசை
- சொல்ல வந்த விஷயம்
- இடைவேளை, ப்ரீ கிளைமாக்ஸ் மற்றும் கிளைமாக்ஸ்
மைனஸ் பாயிண்ட்ஸ்
- ஆங்காங்கே சில குறைகள் இருந்தாலும், அது யாவும் படத்தை எந்த வகையிலும் பாதிக்கவில்லை.
மொத்தத்தில், இந்த போராட்டம் புதிய கதாநாயகனை நமக்கு கொடுத்துள்ளது. மேலும் தமிழர்களின் வலியை எடுத்து பேசியுள்ளது. கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டும்.