பிரதிச்சயா: திரை விமர்சனம்
பிரதிச்சயா
நிவின் பாலி நடிப்பில் வெளியாகியுள்ள பிரதிச்சயா அரசியல் திரில்லர் மலையாளத் திரைப்படம் நம்மை கவர்ந்ததா என்று பார்ப்போமா.

கதைக்களம்
கேரள மாநிலத்தின் முதல்வராக இருக்கும் கே.என்.வர்கீஸின் இரண்டாவது மகன் ஜான் வர்கீஸ் (நிவின் பாலி). திருமணமான நபராக இருந்தாலும் ஜான் பேச்சிலர் போல ஜாலியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
அவரது அண்ணன் டோபின் வர்கீஸ் அப்பாவைப் போல் அரசியல் களத்தில் பயணிக்கிறார். கே.என்.வர்கீஸ் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதால் பொதுமக்கள் இடையே அவர் அதிருப்தியை சந்தித்து வருகிறார்.

அதுகுறித்து மகன் ஜான் கேட்டாலும் இது அரசியல் அப்படி இப்படித்தான் இருக்கணும், ஆனால் எனக்கு அடுத்து என் வாரிசாக அரசியலில் நீதான் வர வேண்டும் என்றும், உன் அண்ணனுக்கு அரசியலில் ஈடுபாடு இருந்தாலும் உனக்கு தான் தகுதி இருக்கிறது என்றும் கூறுகிறார்.
ஜானுக்கோ ஸ்டார்ட் அப் கம்பெனி ஆரம்பித்து வளர வேண்டும் என்பதே ஆசை. அதற்காக ரஷ்யாவிற்கு செல்ல தயாராகும் சூழலில், கே.என்.வர்கீஸ் டிவி நேர்காணலில் கலந்துகொள்கிறார். அதனை ஜான் உட்பட குடும்பத்தினர் அனைவரும் நேரலையாக பார்க்கும்போது ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது.
அதனைத் தொடர்ந்து கே.என்.வர்கீஸ் இறந்துவிடுகிறார். இதன் காரணமாக அரசியல் சூழலில் குழப்பம் ஏற்பட, அதன் பின்னர் ஜான் என்ன மாதிரியான முடிவுகளை எடுத்தார்? அப்பாவின் மரணத்திற்கு பின் இருக்கும் சதியை கண்டுபிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்
நல்ல அரசியல் டிராமா திரில்லர் படத்தை கொடுக்க இயக்குநர் பி.உன்னி கிருஷ்ணன் முயற்சித்திருக்கிறார். படத்தின் மேக்கிங் அட்டகாசமாக உள்ளது. பின்னணி இசை ஒரு சில இடங்களில் ஓவர்டோஸாக இருந்தாலும், ஒட்டுமொத்தமாக சிறப்பாக இருப்பதற்கு ஜஸ்டின் வர்கீஸை பாராட்டலாம். முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும் இடைவேளை வேகமெடுக்கிறது.
இரண்டாம் பாதியில் ட்விஸ்ட்கள் வர படம் சுவாரஸ்யமாக நகர்கிறது. ஆனால், பார்த்து பழகிய கதை என்பதாலும், எளிதாக கணிக்கக்கூடிய திருப்பங்கள் இருப்பதாலும் எந்த ட்விஸ்ட்டும் பெரிதாக ஆச்சரிப்படுத்தவில்லை. ஆரம்பத்திலேயே யூகிக்கக்கூடிய வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதால் கிளைமேக்ஸை கூட எளிதாக கணித்து கூறிவிடலாம்.

அந்த அளவிற்கு தான் திரைக்கதையில் மெனக்கெட்டிருக்கிறார்கள். அதேபோல் ஒரு சில லாஜிக் மிஸ்டேக்ஸ் அப்பட்டமாக தெரிவது உறுத்தல். வில்லனை காட்டும்போதெல்லாம் பில்டப் என்ற பெயரில் இசையை ஒலிக்கவிட்டு ஸ்லோமோஷனில் காட்டுவது தாங்கலபா மொமெண்ட்ஸ். நிவின் பாலி, ஷராஃப்யூதீன் உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் சிறப்பான பங்களிப்பை தந்துள்ளனர்.
One Nation One Information திட்டத்தை நிவின் விளக்கும் காட்சி பலே. அதை வைத்தே கிளைமேக்சில் அவர் செய்யும் ஒரு விஷயம் 'அட' ரகம். முழுப்படத்தையும் நிவின் பாலி தாங்கியிருக்கிறார் என்றே கூறலாம். படத்தின் நீளம் ஒரு பிரச்சனை என்பது பாடல்கள், சண்டைக்காட்சிகள் இல்லாததில் உணர வைக்கிறது. என்றாலும் கிளைமேக்ஸ் வரை இயக்குநர் நம்மை உட்கார வைத்துவிடுகிறார்.
க்ளாப்ஸ்
நிவின் பாலி ஒரு சில ட்விஸ்ட் பின்னணி இசை
பல்ப்ஸ்
யூகிக்கக்கூடிய திரைக்கதை படத்தின் நீளம்
மொத்தத்தில் இந்த பிரதிச்சயா பொறுமையை சோதிக்கும் பாலிடிக்ஸ். நிவின் பாலியின் ரசிகர்களை கவரலாம்.
ரேட்டிங்: 2.5/5
You May Like This Video